பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, August 25, 2010

அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும்

அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும்

இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அமைந்துள்ளன. இவ்விரண்டைத் தவிர வேறு எதனையும் முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நாம் தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறோம்.


ஆயினும் சமீபகாலமாக சிலர் விசித்திரமான வினோதமான கேள்விகளை எழுப்பி இரண்டு மூல ஆதாரங்கள் கிடையாது. திருக்குர்ஆன் என்ற ஒரே ஒரு மூல ஆதாரமே போதுமானதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் தேவையில்லை என்று கூற ஆரம்பித்துள்ளனர்.

ஹதீஸ்களில் முரண்பாடுகள் உள்ளன

குர்ஆனுடன் ஹதீஸ்கள் முரண்படுகின்றன.

ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுவோர் பல கூறுகளாகப் பிரிந்து விட்டனர்.

குர்ஆனைப் போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை.

என்றெல்லாம் காரணங்கள் கூறி ஹதீஸ்களை நிராகரிக்கச் சொல்கின்றனர்.

ஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கு இவர்கள் கூறும் இந்தக் காரணங்களை குர்ஆன் விஷயத்திலும் கூற இயலும். இக்கட்டுரைத் தொடரின் இடையே நாம் விரிவாக அதை விளக்கவுள்ளோம்.

குர்ஆன் மட்டுமே இறைவனுடைய புறத்திலிருந்து வழங்கப் பட்ட வஹி - இறைச் செய்தி. ஹதீஸ்கள் என்பது வஹி அல்ல. உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டதை மட்டுமே பின் பற்றுங்கள் என்று குர்ஆன் கூறுகிறது. எனவே இறைவனிடமிருந்து அருளப் பட்ட குர்ஆனை மட்டுமே மூல ஆதாரமாகக் கொள்ள வேண்டும். இது தான் இந்தக் கருத்துடையவர்களின் வாதத்தில் உள்ள சாராம்சம்.

இறைவனிடமிருந்து வஹியாக அருளப்பட்டதைத் தான் பின் பற்ற வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. நிச்சயமாக இறைவன் புறத்திலிருந்து வஹியாக அருளப்பட்டதை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்றே நாமும் கூறி வருகிறோம்.

ஆனால் இறைவனிடமிருந்து வஹியாக அருளப்பட்டது குர்ஆன் மட்டும் தான். குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இறைவனிடமிருந்து வஹியாக அருளப் படவில்லை என்று திருக்குர்ஆனின் எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை. குர்ஆன் இறைவன் புறத்திலிருந்து வந்தது என்று குர்ஆன் கூறுகிறதே தவிர, குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இறைச் செய்தி இல்லை என்று திருக்குர்ஆனில் கிடையாது.

திருக்குர்ஆனை பின்பற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு குர்ஆன் ஆதாரமில்லாத வாதத்தையே இவர்கள் எழுப்புகின்றனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இன்னும் தெளிவாக சொல்வதானால் குர்ஆன் எப்படி இறைவன் புறத்திலிருந்து அருளப் பட்டுள்ளதோ - குர்ஆன் எப்படி வஹியாக அருளப்பட்டுள்ளதோ அது போல் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹியும் உள்ளது என்று திருக்குர்ஆன் ஒரு இடத்தில் அல்ல - ஏராளமான இடங்களில் தெளிவாக பிரகடனம் செய்கிறது.

مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى(2)وَمَا يَنْطِقُ عَنْ الْهَوَى(3)إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى(4) سورة النجم

உங்கள் தோழர் (முஹம்மது) வழி தவறவில்லை. தவறாகப் பேசவும் இல்லை. மேலும் அவர் (தனது) மனோ இச்சைப் படி பேசுவதில்லை. அது வஹியாக அறிவிக்கப் படும் இறைச் செய்தி தவிர வேறு இல்லை. அல்குர்ஆன் (53 : 2, 3, 4)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது மனோ இச்சைப் படி பேசுவதில்லை. அவர் பேசுவதெல்லாம் வஹி என்னும் இறைச் செய்தி தவிர வேறில்லை என்று இவ்வசனம் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.

குர்ஆன் மட்டும் போதும் என்று கூறக்கூடியவர்கள் இவ்வசனம் குர்ஆனையே குறிக்கிறது. குர்ஆன் வஹி என்பது தான் இதற்கு விளக்கம் என்று கூறுகின்றனர். குர்ஆன் வஹியாக உள்ளது என்பதைக் கூறும் வகையில் இவ்வாசக அமைப்பு அமையவில்லை. "இவர் மனோ இச்சைப் படி பேச மாட்டார்'' என்பது பொதுவாக அவர் பேசும் எல்லாப் பேச்சையும் தான் எடுத்துக் கொள்ளும். மனோ இச்சைப் படி பேசமாட்டார் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் பேசுவதெல்லாம் வஹி தவிர வேறில்லை என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.

குர்ஆன் மட்டும் போதும் என்று கூறுவோர் குர்ஆன் கூறுவதைத் தான் ஆதாரமாகக் காட்ட வேண்டுமே தவிர குர்ஆன் கூறாத ஒன்றை இதற்கு விளக்கம் என்று இவர்களாகக் கற்பனை செய்து வாதிப்பது இவர்கள் குர்ஆனைப் பின்பற்றும் போர்வையில் தங்கள் மனோ இச்சையைத் தான் பின்பற்றுகிறார்கள் என்பது தெளிவாகிறது.

உள்ளத்தில் எந்த அபிப்பிராயத்தையும் வைத்துக் கொள்ளாமல் - முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ளாமல் - விளக்கம் என்ற பெயரில் நாமாக எதையும் சேர்க்காமல் இந்த வசனத்தைப் படித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிய அனைத்தும் அவர்களது மனோ இச்சையின் உந்துதலால் பேசப் பட்டவையல்ல. மாறாக அது இறைவனால் அறிவிக்கப் பட்ட வஹி எனும் இறைச் செய்திதான் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது.

குர்ஆன் எப்படி வஹியாக அமைந்துள்ளதோ அது போலவே நபிகள் நாயகத்தின் பேச்சுக்களும் வஹியாக உள்ளன என்று திருக்குர்ஆனே கூறிய பிறகு யாரேனும் நபிகள் நாயகத்தின் பேச்சுக்கள் தேவையில்லை என வாதித்தால் - அந்தப் பேச்சுக்கள் வஹி இல்லை என வாதித்தால் அவர் மேலே நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனத்தை நிராகரித்தவர் ஆகி விடுகிறார்.

நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்று கூறுகின்ற அந்தக் கும்பல் மேற்கண்ட வசனத்திற்கு இவர்களாக சுய விளக்கம் அளிப்பது தான் விந்தையானது வேடிக்கையானது. நபிகள் நாயகத்தின் விளக்கமே தேவையில்லை என்றால் இவர்களும் விளக்கம் என்ற பெயரில் எதையும் திணிக்காமல் உள்ளதை உள்ளபடி கூற வேண்டும். அப்படி கூறினால் நபிகள் நாயகத்தின் பேச்சுக்கள் முழுவதும் வஹிதான் இறைச் செய்திதான் என்பது சந்தேகமற நிரூபணமாகி விடும். குர்ஆன் தவிர வேறு வஹி இல்லை என்பது குர்ஆனுக்கே முரணான வாதம் என்பதும் நிரூபணமாகி விடும்.

குர்ஆன் அல்லாத வஹி உண்டு என்று அந்த ஒரு வசனம் மட்டும் தான் கூறுகிறதா? இல்லை. ஏராளமான வசனங்கள் இவ்வாறு கூறுகின்றன.

இறைவன் தனது அடியார்களுக்குக் கூற விரும்பும் செய்திகளை ஜிப்ரீல் எனும் வானவரை அனுப்பி அவர் வழியாக மட்டுமே கூறுவான் என்று சிலர் நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும்.

ஜிப்ரீல் மூலம் செய்திகளைக் கூறி அனுப்புவது போலவே வேறு இரண்டு வழிகளிலும் அல்லாஹ் தனது வழிகாட்டலை மக்களுக்குத் தெரிவிப்பான் என்று திருக்குர்ஆனே கூறுகிறது.

وَمَا كَانَ لِبَشَرٍ أَنْ يُكَلِّمَهُ اللَّهُ إِلَّا وَحْيًا أَوْ مِنْ وَرَاءِ حِجَابٍ أَوْ يُرْسِلَ رَسُولًا فَيُوحِيَ بِإِذْنِهِ مَا يَشَاءُ إِنَّهُ عَلِيٌّ حَكِيمٌ(51) سورة الشورى

வஹீயாகவோ அல்லது திரைக்கு அப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பியோ தவிர வேறு வழிகளில் எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. தனது அனுமதியுடன் தான் நாடியதை அவன் அறிவிக்கின்றான். நிச்சயமாக அவன் உயர்ந்தவன். நுண்ணறிவாளன். (அல்குர்ஆன் 42 : 51)

மனிதரிடம் இறைவன் பேசுவதற்கு மூன்று வழிகளைக் கடைப்பிடிக்கிறான் என்பது இவ்வசனத்திலிருந்து தெரிகின்றது. ஒரு தூதரை அனுப்பி மனிதரிடம் பேசுவான் என்பதை அனைவரும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஜிப்ரீல் போன்ற வானவர்கள் வழியாக வேதங்களை வழங்குவதையும், வானவர்கள் மூலம் வேறு பல செய்திகளை சொல்லி அனுப்புவதையும் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

திரைக்கு அப்பால் இருந்து மனிதனிடம் இறைவன் பேசுவான் என்பதையும் ஓரளவுக்கு அறிந்து கொள்ள இயலும்.

மூஸா நபி அவர்கள் தமது குடும்பத்தாருடன் புறப்பட்ட போது தீப்பிளம்பைக் கண்டு அந்த இடத்திற்குச் சென்றார்கள். இதைப் பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

إِذْ رَأَى نَارًا فَقَالَ لِأَهْلِهِ امْكُثُوا إِنِّي آنَسْتُ نَارًا لَعَلِّي آتِيكُمْ مِنْهَا بِقَبَسٍ أَوْ أَجِدُ عَلَى النَّارِ هُدًى(10)فَلَمَّا أَتَاهَا نُودِي يَامُوسَى(11)إِنِّي أَنَا رَبُّكَ فَاخْلَعْ نَعْلَيْكَ إِنَّكَ بِالْوَادِي الْمُقَدَّسِ طُوًى(12)وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى(13)إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمْ الصَّلَاةَ لِذِكْرِي(14) سورة طه

அங்கே அவர் வந்த போது மூஸாவே என்று அழைக்கப்பட்டார். "நிச்சயமாக நானே உமது இறைவன். எனவே உமது செருப்புகளைக் கழற்றுவீராக. நிச்சயமாக நீர் பரிசுத்தமான இடத்தில் இருக்கிறீர்கள். மேலும் நான் உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே, (வஹீயாக) அறிவிக்கப் படுவதை செவிமடுப்பீராக. நிச்சயமாக நானே அல்லாஹ்! என்னைத் தவிர வணக்கத்துக்கு உரியவன் யாருமில்லை. எனவே என்னை வணங்குவீராக! என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக.(அல்குர்ஆன் 20 : 11 - 14).

இந்த அத்தியாயத்தின் 11வது வசனம் முதல் 48வது வசனம் வரை மூஸா நபி அவர்களுடன் அல்லாஹ் நடத்திய உரையாடல் இடம் பெற்றுள்ளது. பல கட்டளைகள் அப்போது பிறப்பிக்கப் பட்டன. அந்தக் கட்டளைகள் யாவும் வானவர் துணையில்லாமல் நேரடியாகவே பிறப்பிக்கப் பட்டன. ஆனாலும் மூஸா நபி அவர்கள் அல்லாஹ்வைக் காணாமல் காதால் மட்டுமே கட்டளையைக் கேட்டார்கள். எனவே தான் "திரைக்கு அப்பால் இருந்து'' என்று இறைவன் கூறுகிறான்.

இவ்விரு வகைகளும் வஹீ எனும் இறைச் செய்தியாக இருந்தாலும் இன்னொரு வழியிலும் அல்லாஹ் பேசுவதைக் குறிப்பிட தனிப்பெயர் எதையும் கூறாமல் வஹீயாக - வஹீ மூலம் - என்று அல்லாஹ் கூறுகிறான். மற்ற இரண்டும் வஹீயாக இருந்தாலும் மூன்றாவது வழியை மட்டுமே இவ்வசனத்தில் வஹீ என்கிறான்.

இவ்விரு வகைகள் தவிர வேறு வழியில் இறைவன் மனிதர்களிடம் பேசுவான் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? மனித உள்ளங்களில் மனிதர்கள் என்ற முறையில் தோன்றாத செய்திகளை இறைவன் தோன்றச் செய்வான். அவ்வாறு தோன்றச் செய்வதும் வஹீதான். இறைச் செய்திதான் என்பதைத் தவிர வேறு அர்த்தம் இதற்கு இருக்க முடியாது.

திருக்குர்ஆனில் கூறப்பட்ட பல கட்டளைகளை இப்படித்தான் செயல் படுத்த வேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். அவ்வாறு காட்டி செயல் வடிவம் கொடுத்தது அவர்கள் இதயத்தில் அல்லாஹ் உதிக்கச் செய்ததன் அடிப்படையில் தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

திருக்குர்ஆனே ஒப்புக் கொள்ளக் கூடிய - வலியுறுத்தக் கூடிய மூன்று வகையான வஹீகளில் ஒன்றை யாரேனும் மறுத்தால் அவர்கள் திருக்குர்ஆனைத்தான் மறுக்கிறார்கள். திருக்குர்ஆன் தான் மூன்றாவது வஹீ இருப்பதாக சந்தேகத்துக்கு இடம் இல்லாத வகையில் கூறுகிறது.

இந்த இடத்தில் சிலருக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். இந்த வசனம் நபி (ஸல்) அவர்களுக்கு மூன்று வகையான வஹீ அருளப் பட்டதாகக் கூறவில்லை. அல்லது நபிமார்களுடன் மூன்று வகைகளில் இறைவன் பேசுவதாகவும் கூறவில்லை. பொதுவாக மனிதர்களிடம் பேசுவதாகத்தான் கூறப்பட்டுள்ளது.

மரியம் (அலை), மூஸா நபியின் தாயார் போன்றவர்களிடம் இறைவன் பேசியுள்ளான். எனவே நபிமார்கள் அல்லாதவர்களுடன் இறைவன் பேசுவதைத் தான் மூன்றாவது வஹீ குறிப்பிடுகின்றது என்று கருதலாம் அல்லவா? என்பதே அந்தச் சந்தேகம்.

மனிதர்களுடன் பேசுவதாக இந்த வசனம் கூறினாலும் மற்ற இரண்டு அம்சங்கள் எப்படி மனிதர்களில் உள்ள இறைத்தூதர்களிடம் பேசுவதைக் குறிப்பிடுகின்றதோ அப்படித் தான் மூன்றாவதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது வஹீ என்பதை முதல் இரண்டு வஹீயிலிருந்து வேறுபடுத்திக் காட்ட எந்த ஆதாரமும் இல்லை.

மேலும் இந்த வாதம் அர்த்தமற்றது தவறானது என்பதை இதற்கு அடுத்த வசனம் மிகத் தெளிவாகப் பிரகடனம் செய்து விடுகின்றது.

وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَنْ نَشَاءُ مِنْ عِبَادِنَا وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ(52) سورة الشورى

இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை வஹீ மூலமாக உமக்கு அறிவித்து இருக்கிறோம். (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி நம் அடியார்களில் நாம் விரும்புவோர்க்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம். நிச்சயமாக நீர் நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர். (அல்குர்ஆன் 42: 52)

"இவ்வாறு தான் உமக்கும் நாம் வஹீ அறிவித்தோம்'' என்று இவ்வசனம் குறிப்பிடுகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மேற்கண்ட மூன்று வஹீயும் வந்துள்ளன என்பதை இவ்விரு வசனங்களும் மிகத் தெளிவாக அறிவிக்கின்றன.

அதாவது நபிகள் நாயகத்துடன்....

திரைக்கப்பாலிருந்தும் அல்லாஹ் பேசியிருக்கின்றான்.

ஜிப்ரீலை அனுப்பி குர்ஆன் மூலமும் பேசியுள்ளான்.

ஏனைய வானவர்களை அனுப்பி குர்ஆன் அல்லாத பல செய்திகளையும் சொல்லி அனுப்பியுள்ளான்.

இவை தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இதயத்திலும் இறைவன் தனது கட்டளைகளைப் பதியச் செய்துள்ளான்

என்பது திட்டவட்டமாக நிரூபணமாகின்றது.

திருக்குர்ஆன் மட்டும் போதும் என்று யாரேனும் கூறினால் இறைவன் திரைக்கப்பாலிருந்து பேசினானே அந்தப் பேச்சுக்கள் எங்கே? இதயத்தில் போட்ட வழிகாட்டுதல் எங்கே? அவையும் இறைவனின் கட்டளைகள் எனும்போது அவற்றைக் கடைப்பிடிக்காமல் இருக்க முடியுமா! அவற்றை மறுப்பது மேற்கண்ட இரு வசனங்களையும் மறுத்ததாக ஆகாதா?

குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உள்ளன என்பதற்கு இன்னும் பல வசனங்கள் சான்றுகளாக உள்ளன.

திருக்குர்ஆன் எப்படி இஸ்லாத்தின் மூலாதாரமாக அமைந்துள்ளதோ அது போலவே ஆதராரப்பூர்வமான ஹதீஸ்களும் இஸ்லாத்தின் மூலாதாரங்களாக அமைந்துள்ளன. இந்த உண்மையை திருக்குர்ஆனிலிருந்தே நாம் அறிந்து கொள்ள இயலும்.

கடந்த இரண்டு தொடர்களில் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ இருக்கிறது என்பதையும், அவற்றையும் பின்பற்றியாக வேண்டும் என்பதையும் திருக்குர்ஆனின் இரண்டு வசனங்களை ஆதாரமாகக் கொண்டு அறிந்து கொண்டோம்.

அல்லாஹ்வின் தூதர்களாக அனுப்பப்படும் நபிமார்களுக்கு அல்லாஹ் வேதத்தை மட்டும் கொடுத்து அனுப்புவதில்லை. இன்னொன்றையும் சேர்த்துக் கொடுத்து அனுப்பி இருக்கிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இவ்வாறே அல்லாஹ் கொடுத்து அனுப்பியுள்ளான்.

وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ وَمَا أَنزَلَ عَلَيْكُمْ مِنْ الْكِتَابِ وَالْحِكْمَةِ يَعِظُكُمْ بِهِ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ(231) سورة البقرة

அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையையும் உங்கள் மீது அவன் இறக்கிய கிதாபையும் ஹிக்மத்தையும் நீங்கள் நினைவு கூருங்கள்! இதன் மூலம் அல்லாஹ் உங்களுக்குப் போதனை செய்கிறான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! மேலும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அறிந்தவன் எனபதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2 : 231)

وَأَنزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا(113) سورة النساء

மேலும் அல்லாஹ் உம்மீது கிதாபையும் ஹிக்மத்தையும் இறக்கியுள்ளான். மேலும் நீர் அறியாதவற்றை உமக்குக் கற்றுத் தந்தான். உமக்கு அல்லாஹ் செய்திருக்கும் அருள் மகத்தானதாக உள்ளது. (அல்குர்ஆன் 4 : 113)

இவ்விரு வசனங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கிதாபையும், ஹிக்மத்தையும் அருளியதாக அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் வேதத்தில் தேவையற்ற வீணான ஒரு வார்த்தையும் இருக்காது. இருக்க முடியாது. இருக்கக் கூடாது. அல்லாஹ் தனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளியது வேதம் மட்டுமே, அதாவது அல்குர்ஆன் மட்டுமே என்றிருந்தால் கிதாபை உம்மீது இறக்கினான் என்று கூறுவதே போதுமானதாகும். ஆனால் கிதாபையும் ஹிக்மத்தையும் உம்மீது இறக்கியுள்ளேன் என்று அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் இரண்டு வகையான செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளியதாகக் கூறும் போது கிதாபை மட்டும் தான் அல்லாஹ் அருளினான் என்று வாதிடுவது இவ்விரு வசனங்களையும் மறுப்பதாகத் தான் அமையும்.

குர்ஆன் மட்டும் போதும் என்ற கருத்துடையவர்கள் இதற்குப் பதிலளிக்கும் போது எள்ளி நகைக்கும் விதமாக உளற ஆரம்பித்து விடுகின்றனர்.

"ஹிக்மத் என்பதன் பொருள் ஞானம். பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் அல்லாஹ் ஞானத்தைக் கொடுக்கிறான். அதைத் தான் இங்கே குறிப்பிடுகிறான்'' என்பது இவர்களது விளக்கம்.

ஹிக்மத் என்ற வார்த்தையின் நேரடிப் பொருள் ஞானம், அறிவு என்பது தான். இதில் சந்தேகம் இல்லை. ஹிக்மத் என்ற வார்த்தைக்கு நேரடிப் பொருள் கொண்டவர்கள் கிதாப் என்ற வார்த்தைக்கும் நேரடிப் பொருள் தான் கொள்ள வேண்டும். கிதாப் என்ற வார்த்தைக்கு எழுதப்பட்டது - தபால் என்பது பொருள். அகராதியில் வேதம் என்று பொருள் கிடையாது.

யாரோ எழுதிய துண்டுச் சீட்டைக் கூட கிதாப் எனலாம். ஒரே வசனத்தில் இடம் பெற்ற இரண்டு வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்கு மட்டும் அகராதியில் உள்ள பொருளைக் கொடுத்து விட்டு மற்றொரு வார்த்தைக்கு வேறு பொருள் கொடுக்க எந்த நியாயமும் இல்லை.

கிதாப் என்ற வார்த்தையின் பொருள் எழுதப்பட்டது என்று இருந்தாலும் அல்லாஹ் இறக்கியருளியதாகக் கூறும் போது அதன் பொருள் வேதம் என்று ஆகி விடுகிறது. அது போலவே ஹிக்மத் என்பதன் நேரடிப் பொருள் ஞானம் என்றாலும், இங்கே ஹிக்மத்தை இறக்கியருளியதாக அல்லாஹ் கூறுகிறான். அதாவது கிதாபை எவ்வாறு இறக்கியருளி இருக்கிறானோ அது போலவே ஹிக்மத்தையும் இறக்கியருளியிருக்கிறான்.

பொதுவாக மனிதர்களுக்கு ஞானம் வழங்கியது பற்றிக் குறிப்பிடும் போது ஞானத்தைக் கொடுத்ததாகவும், நபிகள் நாயத்துக்கு ஞானத்தை வழங்கியது பற்றிக் கூறும் போது ஞானத்தை இறக்கியருளியதாகவும் அல்லாஹ் கூறுகிறான். எனவே குர்ஆன் போன்ற மற்றொரு வஹீயை அல்லாஹ் இறக்கியுள்ளான் என்பதே இதன் பொருளாகும். இவ்வாறு பொருள் கொள்ளும் போது ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டிய இருவசனங்களுடன் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.

மிகத்தெளிவான இவ்விரு வசனங்களுக்கும் முன்னால் இவர்களின் புரட்டு வாதம் நொறுங்கிப் போவதைக் கண்டவுடன் வேறு விதமாகவும் சமாளிப்பார்கள், சமாளிக்கிறார்கள். அதாவது கிதாப் தான் ஹிக்மத், ஹிக்மத் தான் கிதாப். இரண்டும் ஒன்று தான். கிதாபு என்றும் ஹிக்மத் என்றும் குர்ஆனையே இங்கே குறிப்பிடுகிறான் என்று பிதற்றுகிறார்கள்.

அல்லாஹ்வின் வசனங்களை எப்படியெல்லாம் கேலிக் கூத்தாக்குகிறார்கள் என்பதற்கு இந்த உளறல் சரியான ஆதாரமாகவுள்ளது.

அதுவும் இதுவும், அவனும் இவனும் என்று "உம்''மைப் பயன்படுத்தினால் இரண்டு தனித்தனி பொருட்களுக்கிடையே தான் பயன்படுத்த முடியும்.

அல்லாஹ்வையும் ரசூலையும் நம்புங்கள் என்று கூறினால் அல்லாஹ் தான் ரசூல், ரசூல் தான் அல்லாஹ் என்று வியாக்கியானம் அளிப்பது போன்ற பைத்தியக்காரத்தனமாக இவர்களது கூற்று அமைந்துள்ளது.

சோறும் குழம்பும் தந்தான் என்றால் இரண்டு பொருட்கள் தரப்பட்டதாகத்தான் பொருள்.

இன்னும் தங்களின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் மேலும் உளறுகிறார்கள்.

குர்ஆனில் ஹிக்மத் (ஞானம்) இல்லையா? ஹிக்மத்துடைய குர்ஆன் என்று யாசீன் அத்தியாயத்தின் துவக்கத்தில் கூறப்படவில்லையா என்று கேட்டு இரண்டையும் ஒன்றாக்க முயல்கின்றனர்.

இவர்களின் வாதம் உண்மையாக இருந்தால் யாசீன் அத்தியாயத்தில் கூறியது போல் ஏன் இங்கே கூறவில்லை. ஹிக்மத்தான கிதாப் என்று கூறாமல் ஹிக்மத்தையும் கிதாபையும் என்று ஏன் கூற வேண்டும்? யாசீன் அத்தியாயத்தில் பயன் படுத்தப்பட்ட வார்த்தைகளுக்கு அவ்வார்த்தையின் அமைப்பை வைத்துப் பொருள் கொள்வது போல் இங்கே பயன் படுத்தப் பட்ட வார்த்தைக்கு பொருள் கொள்ளும் போது இங்கே பயன்படுத்தப்பட்ட வாசக அமைப்பை வைத்துத் தான் பொருள் கொள்ள வேண்டும். இங்கே கிதாப் என்ற ஒரு பொருளும் ஹிக்மத் என்ற இன்னொரு பொருளும் வழங்கியதாகத் தெளிவாகக் கூறப்படுகின்றது.

இவர்களது அறியாமையைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாகும்.

பொறுமை மிகுந்த சுலைமான் என்று ஒரு நாள் நான் கூறுவதாக வைத்துக் கொள்வோம். மறுநாள் மக்களிடம் "பொறுமையைப் பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம்.

பொறுமை மிகுந்த சுலைமான் என்று நீங்கள் தானே கூறினீர்கள். எனவே சுலைமானை நான் பிடிக்கப் போகிறேன். சுலைமானிடமும் பொறுமை இருக்கத் தானே செய்கிறது என்று ஒருவன் வாதிட்டால் அவனை நாம் என்ன வென்போம்? அவனுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

சுலைமானிடம் பொறுமை இருப்பது தனி விஷயம். இந்த இடத்தில் பொறுமை எந்தக் கருத்தில் பயன் படுத்தப் பட்டது என்பது தனி விஷயம்.

எனவே அல்லாஹ் வேதத்தை எவ்வாறு தன் புறத்திலிருந்து அருளினானோ அவ்வாறே ஹிக்மத்தையும் தன் புறத்திலிருந்து வஹியாக அருளியிருக்கிறான். அதை நாம் ஹதீஸ்கள் என்கிறோம்.

குர்ஆன் மட்டும் போதும் என்போர் அல்லாஹ் இறக்கியருளிய ஹிக்மத் எது என்பதை குர்ஆனிலிருந்து கண்டு பிடித்துக் காட்டட்டும்!

ஹிக்மத் என்பதற்கு இவர்கள் கூறுகின்ற விளக்கம் கிடையாது என்பதற்கு திருக்குர்ஆனே சான்று கூறுகிறது.

وَاذْكُرْنَ مَا يُتْلَى فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا(34) سورة الأحزاب

(நபியின் மனைவியரே!) உங்கள் வீடுகளில் ஓதிக் காட்டப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும் ஹிக்மத்தையும் நினைவு கூருங்கள். (அல்குர்ஆன் 33 : 34)

ஹிக்மத் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப் பட்ட ஞானம் தான் என்பது முற்றிலும் தவறானது என்பதை இவ்வசனம் விளக்குகிறது.

இவ்வசனத்தில் அல்லாஹ்வின் வசனங்கள் எவ்வாறு ஓதிக் காட்டப்படுகிறதோ அதுபோலவே ஹிக்மத்தும் ஓதிக் காட்டப்படுவதாக அல்லாஹ் கூறுகிறான். நபியின் மனைவியர் வீட்டில் ஓதிக் காட்டப்படுகிறது என்றால் ஓதிக் காட்டியவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான். நபி (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட அல்லாஹ்வின் வசனங்களையும் ஓதிக் காட்டியுள்ளார்கள். மேலும் ஹிக்மத்தையும் ஓதிக் காட்டியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

திலாவத் - "ஓதிக் காட்டுதல்' என்பது பிறரது வார்த்தையை ஒருவர் எடுத்துக் கூறுவதைக் குறிக்கும் சொல்லாகும். எனவே அல்லாஹ்வின் வசனங்கள் எப்படி நபியின் சொந்த வார்த்தை இல்லையோ அது போலவே ஹிக்மத்தும் அவரது சொந்தக் கருத்தல்ல. இரண்டுமே அல்லாஹ்வுக்குச் சொந்தமாகவுள்ளதால் தான் இரண்டையும் நபி (ஸல்) ஓதிக் காட்டியுள்ளார்கள் என்று அல்லாஹ் இங்கே கூறுகிறான்.

குர்ஆன் அல்லாத வஹீ உள்ளது என்பதற்கு இன்னும் ஏராளமான ஆதாரங்கள் குர்ஆனிலேயே உள்ளன. அவற்றை மேலும் பார்ப்போம்.

அல்லாஹ் எந்த நபியை அனுப்பினாலும் அவருக்கு வேதப்புத்தகத்தை மட்டும் கொடுத்து இதை மட்டும் மக்களுக்குப் படித்துக் காட்டுங்கள் என்று கூறி அனுப்புவதில்லை.

மாறாக வேதத்தில் எழுகின்ற சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவும், கூடுதல் விளக்கம் தேவைப்படும் இடங்களில் அதை அளிக்கவும் தேவையான ஞானத்தையும் சேர்த்தே கொடுத்து அனுப்பியுள்ளான்.

وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنْ الشَّاهِدِينَ(81) سورة آل عمران

உங்களுக்கு கிதாபையும் ஹிக்மத்தையும் நான் வழங்கியபின் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை நிச்சயமாக நம்புவீர்களா? நிச்சயமாக அவருக்கு உதவுவீர்களா? என்று அல்லாஹ் நபிமார்களிடம் உறுதி மொழி எடுத்ததை நினைவு கூர்வீராக! (அல்குர்ஆன் 3 : 81)

எல்லா நபிமார்களிடமும் அல்லாஹ் ஓர் உறுதிமொழி எடுத்ததை இங்கே நினைவு படுத்துகிறான். (நபிகள் நாயகத்துக்குப் பின் தூதர் யாரும் வரமுடியுமா? என்பதைக் கூறும் இவ்வசனத்துக்குத் தலைகீழாக விளக்கம் கூறி நபிகள் நாயகத்துக்குப் பின் தூதர் வர முடியும் என்று ஒரு மன நோயாளி உளறியிருப்பதைப் பின்னர் நாம் விளக்குவோம்)

அவ்வுறுதி மொழியைக் குறிப்பிடும் போது "நபிமார்களே! உங்களுக்கு வேதத்தையும் ஹிக்மத்தையும் நான் வழங்கிய பின்'' என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

நபிமார்களுக்கு வேதம் எவ்வாறு வழங்கப்பட்டதோ அவ்வாறே ஹிக்மத்தும் வழங்கப்பட்டது. இரண்டுமே இறைவனால் தான் வழங்கப்பட்டது என்பதை இவ்வசனம் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.

وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ كُلًّا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُودَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى وَهَارُونَ وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ(84)وَزَكَرِيَّا وَيَحْيَى وَعِيسَى وَإِلْيَاسَ كُلٌّ مِنْ الصَّالِحِينَ(85)وَإِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَيُونُسَ وَلُوطًا وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ(86)وَمِنْ آبَائِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَإِخْوَانِهِمْ وَاجْتَبَيْنَاهُمْ وَهَدَيْنَاهُمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ(87) ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوا يَعْمَلُونَ(88)أُوْلَئِكَ الَّذِينَ آتَيْنَاهُمْ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ فَإِنْ يَكْفُرْ بِهَا هَؤُلَاءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَيْسُوا بِهَا بِكَافِرِينَ(89) سورة الأنعام

நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர் வழியில் செலுத்தினோம். இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம். இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.

இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழி சார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.

இன்னும் இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.

இவர்களுடைய மூதாதையர்களிலிருந்தும், இவர்களுடைய சந்ததிகளிலிருந்தும், இவர்களுடைய சகோதரர்களிலிருந்தும் (பலரை) நாம் தேர்ந்தெடுத்து, அவர்களை நேர் வழியில் செலுத்தினோம்.

இதுவே அல்லாஹ்வின் நேர் வழியகும். தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன் மூலம் நேர்வழி காட்டுகிறான் (பின்னர்) அவர்கள் இணை வைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்து விடும்.

இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம். ஆகவே இவற்றை இவர்கள் நிராகரித்தால் இதனை நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம் நிச்சயமாக பொறுப்பாக்குவோம். (அல்குர்ஆன் 6 : 84 - 89)

இவ்வசனங்களில் 1. இப்றாஹீம் 2. இஸ்ஹாக் 3. யஃகூப் 4. நூஹ் 5. தாவூத் 6. சுலைமான் 7. அய்யூப் 8. யூசுப் 9. மூஸா 10. ஹாரூன் 11. ஸக்கரிய்யா 12. யஹ்யா 13. ஈஸா 14. இல்யாஸ் 15. இஸ்மாயீல் 16. அல்யஸவு 17. யூனுஸ் 18. லூத் ஆகிய நபிமார்களின் பெயர்களைக் குறிப்பிட்டு விட்டு 87 ஆம் வசனத்தில் இவர்களது முன்னோர்கள், இவர்களின் சந்ததிகள் இவர்களது சகோதரர்களில் தோன்றிய நபிமார்களைப் பொதுவாகவும் கூறுகிறான்.

அதாவது நபிமார்கள் எனப்படும் அனைவரையும் பொதுவாகவும் சிலரைக் குறிப்பாகவும் கூறிவிட்டு "இவர்களுக்கு கிதாபையும் வழங்கினோம். ஹுக்மையும் வழங்கினோம். நுவுவ்வத்தையும் வழங்கினோம்'' என்று அல்லாஹ் 89வது வசனத்தில் கூறுகிறான்.

கிதாபு என்பதன் பொருள் நமக்கு விளங்குகிறது. நுபுவ்வத் என்பதன் (நபி எனும் தகுதி) பொருளும் விளங்குகிறது. இவ்விரண்டை மட்டுமின்றி மூன்றாவதாக "ஹுக்மை' வழங்கியதாகக் கூறுகிறானே அது என்ன?

ஹுக்மு என்பதற்கு அதிகாரம் என்பது பொருள். இவர்களில் தாவூத், சுலைமான், யூசுப், மூஸா போன்ற சிலருக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டது என்றாலும் அனைத்து நபிமார்களும் ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டவர்களாக இருக்கவில்லை. எனவே ஹுக்மு என்பதற்கு ஆட்சியதிகாரம் என்று பொருள் கொள்ள முடியாது. மாறாக மார்க்க ரீதியிலான சட்ட திட்டங்கள் குறித்த அதிகாரமே இங்கே குறிப்பிடப்படுகிறது.

அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஹிக்மத் என்னும் ஞானத்தின் மூலம் ஹுக்மு எனும் சட்டமியற்றும் அதிகாரத்தையும் நபிமார்கள் பெற்றார்கள். அல்லாஹ்வே அதை நபிமார்களுக்கு வழங்கியிருந்தான் என்பதை இதிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

வேதம் தவிர வேறு எதுவும் நபிமார்களுக்கு வழங்கப் படவில்லை என்றிருந்தால் வேதத்தையும் நுவுவ்வத்தையும் ஹுக்மையும் என்று அல்லாஹ் கூறியிருக்க மாட்டான்.

இறுதியாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறும் செய்தி முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டியதாகும். "இந்த நபிமார்கள் இம்மூன்றையும் மறுப்பார்களானால் மறுக்காத - காஃபிர்களாக இல்லாத - ஒரு கூட்டத்தாரிடம் இவற்றை ஒப்படைப்போம்'' என்பது தான் அந்தப் பகுதி.

வேதம் மட்டும் தான் நமக்கு அருளப்பட்டது. ஹுக்மு என்ற அதிகாரமோ, ஹிக்மத் என்ற ஞானமோ தமக்குத் தேவையில்லை என்று அந்த நபிமார்கள் கருதுவார்களானால் இம்மூன்றையும் ஏற்கக் கூடிய மற்றவர்களுக்கு அதைக் கொடுத்து அனுப்புவேன் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

"இந்த நபிமார்கள் இம்மூன்றையும் மறுப்பார்களானால் மறுக்காத (காபிராக இல்லாத) வேறு கூட்டத்தாரிடம் இவற்றை ஒப்படைப்பேன்'' என்று அல்லாஹ் கூறுவது மூன்றுமே சமமானவை என்பதற்கும் மூன்றில் எதையும் நபிமார்களே மறுக்கக் கூடாது என்பதற்கும் மிகத் தெளிவான சான்றாக உள்ளது.

மூன்றையும் சேர்த்து வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். மூன்றில் ஒன்றோ இரண்டோ தான் வேண்டும் எனக் கூறினால் வேறு யாருக்காவது மூன்றையும் தந்து விடுவேன் என்ற தோரணையில் இவ்வசனம் அமைந்துள்ளது. குர்ஆன் மட்டும் போதும் என்போர் காபிர்கள் தான் என்று திட்டவட்டமாக குர்ஆனே அறிவிக்கிறது.

أَمْ يَحْسُدُونَ النَّاسَ عَلَى مَا آتَاهُمْ اللَّهُ مِنْ فَضْلِهِ فَقَدْ آتَيْنَا آلَ إِبْرَاهِيمَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَآتَيْنَاهُمْ مُلْكًا عَظِيمًا(54) سورة النساء

அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்றாஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஹிக்மத்தையும் கொடுத்தோம். அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம். (அல்குர்ஆன் 4 : 54)

இவ்வசனத்தில் இப்றாஹீம் நபிக்கும் அவரது வழித் தோன்றல்களாக வந்த நபிமார்களுக்கும் கிதாபையும் ஹிக்மத்தையும் வழங்கியிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

பொதுவாக எல்லா நபிமார்களுக்கும் குர்ஆனுடன் ஹிக்மத்தும் அருளப்பட்டதாகக் கூறும் இறைவன் இதே முறையில் தான் இதே மாதிரியாகத் தான் நபிகள் நாயகத்துக்கும் வஹீ அருளியிருப்பதாகக் கூறுகிறான்.

إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ وَأَوْحَيْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَى وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا(163) سورة النساء

(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம். இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். (அல்குர்ஆன் 4 : 163)

இந்த நபிமார்களுக்கு எவ்வாறு வஹீ அருளப்பட்டதோ அந்த வழி முறைக்கு மாற்றமாக புது முறையில் குர்ஆன் அருளப்படவில்லை. மாறாக குர்ஆனுடன் ஹிக்மத்தும் சேர்த்தே அருளப்பட்டது என்பதை இவ்வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

எனவே நபிமார்கள் புத்தகத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கும் தபால்காரர் போல் அனுப்பப் படவே இல்லை. மாறாக அதற்கு விளக்கம் சொல்லி, செய்து காட்டும் அதிகாரம் படைத்தவர்களாகவே அனுப்பப்பட்டனர். அதே அதிகாரத்துடன் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அனுப்பப்பட்டனர்.

குர்ஆனைத் தவிர வேறு வஹீ இல்லை என்போர் உண்மையில் அவர்கள் மறுப்பது மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனங்களையும் கடந்த மூன்று தொடர்களாகச் சுட்டிக் காட்டிய குர்ஆன் வசனங்களையும் தான் மறுக்கிறார்கள். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

குர்ஆன் மட்டுமின்றி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் மார்க்கத்தின் மூலஆதாரமே என்பதற்கான சான்றுகள் இவ்வளவு தானா! இன்னும் உள்ளன.

எல்லா இறைத் தூதர்களுக்கும் இறைவனிடமிருந்து வேதத்தைப் பெற்று மக்களுக்குச் சேர்ப்பிக்கும் பணியுடன் அவ்வேதத்துக்கு விளக்கவுரை அளிக்கும் பணியும் சேர்த்தே ஒப்படைக்கப்பட்டன.

இறைத் தூதர்களின் விளக்கவுரை தேவைப்படாத எந்த வேதமும் இறைவனால் அருளப்படவில்லை என்பதைத் திருக்குர்ஆனே தெளிவாக அறிவிக்கின்றது.

இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது வழித் தோன்றல்களில் ஒரு இறைத்தூதரை அனுப்ப வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். அந்தப் பிரார்த்தனை திருக்குர்ஆனிலும் இறைவனால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمْ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ(129) سورة البقرة

எங்கள் இறைவா! இவர்களுக்கு உன் வசனங்களை ஓதிக் காட்டி இவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்து இவர்களைத் தூய்மை படுத்தக் கூடியவராக இவர்களுக்கு இவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்புவாயாக! நிச்சயமாக நீ மிகைத்தவன். ஞானமிக்கவன் (அல்குர்ஆன் 2 : 129)

இப்ராஹீம் நபியவர்களின் இப்பிரார்த்தனை வேதம் அல்லாத இன்னொரு வஹீ இருப்பதை மேலும் உறுதி செய்கின்றது.

"உனது வசனங்களை அந்தத் தூதர் அவர்களுக்கு ஓதிக் காட்டுவார்''

"அவர்களுக்கு வேதத்தைக் கற்றுத் தருவார்''

என்று இப்ராஹீம் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். வசனங்களை ஓதிக் காட்டியவுடன் மக்களுக்கு விளங்கி விடும் என்றிருந்தால் - வசனங்களை ஓதிக் காட்டுவது மட்டுமே இறைத்தூதர்களின் பணியாக இருந்திருந்தால் - இப்றாஹீம் (அலை) அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்திருக்க மாட்டார்கள்.

உனது வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுவார் என்று மட்டும் கூறியிருப்பார்கள் அல்லது வேதத்தை அவர்களுக்கு கற்றுத் தருவார் என்று மட்டும் கூறியிருப்பார்கள். இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் கூறாமல் இரண்டையும் சேர்த்துக் கூறியதிலிருந்து வசனங்களை ஓதிக் காட்டுவது வேறு. ஓதிக் காட்டிய பின் வேதத்தைக் கற்றுக் கொடுப்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையை எப்படி ஆதாரமாகக் கொள்ள முடியும்? அல்லாஹ் இவ்வாறு கூறவில்லையே என்று யாரும் நினைத்து விடக்கூடாது. ஏனெனில் அல்லாஹ்வும் இப்படித் தான் கூறியுள்ளான்.

كَمَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِنْكُمْ يَتْلُو عَلَيْكُمْ آيَاتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمْ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ(151) سورة البقرة

உங்களுக்கு உங்களிலிருந்தே ஒரு தூதரை நாம் அனுப்பினோம். அவர் உங்களுக்கு நமது வசனங்களை ஓதிக் காட்டுவார். மேலும் உங்களைத் தூய்மை படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுத் தருவார். மேலும் நீங்கள் அறியாதிருந்தவற்றையும் உங்களுக்குக் கற்றுத் தருவார். (அல்குர்ஆன் 2 : 151)

இது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப் பட்டது குறித்து கூறுகின்ற வசனமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பையும் அதிகாரத்தையும் தெளிவாகப் பறைசாற்றும் வகையில் இவ்வசனம் அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழி பேசுகின்ற சமுதாய மக்களுக்கே தூதராக முதலில் அனுப்பப் பட்டார்கள். அவர்களுக்கு அருளப்பட்ட வேதமும் தெளிவான அரபு மொழியிலேயே அருளப் பட்டது.

அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களுக்கு அரபு மொழி வேதத்தை ஓதிக் காட்டியவுடன் அதன் பொருள் நிச்சயம் விளங்கி விடும்.

ஆனால் மேலே கண்ட வசனம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.

1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசனங்களை ஓதிக் காட்டுவார்களாம்.

2. பின்னர் வேதத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பார்களாம்!

3. ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார்களாம்.

4. பின்னர் அம்மக்கள் அறியாமல் இருந்த பல விஷயங்களை கற்றுக் கொடுப்பார்களாம்.

5. அவர்களைப் பரிசுத்தம் செய்யும் பணியையும் செய்வார்களாம்.

இப்படி ஐந்து பொறுப்புக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக இவ்வசனம் கூறுகிறது.

அல்லாஹ்வுடைய வார்த்தையில் வீணான ஒரு சொல்லும் இருக்காது, இருக்கக் கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தால் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ இருப்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

வசனங்களை ஓதிக் காட்டியவுடன் பெரும்பாலான வசனங்களின் பொருள் புரிந்து விடும் என்றாலும் நபிகள் நாயகம் விளக்கம் சொன்னபிறகு விளங்கக் கூடிய வசனங்களும் குர்ஆனில் உள்ளன. அவ்வாறு இருப்பதால் தான் வசனங்களை ஓதிக் காட்டுவார். மேலும் வேதத்தைக் கற்றுத் தருவார் என்று இறைவன் கூறுகிறான்.

ஹஜ் செய்யுங்கள் என்பதன் பொருள் விளங்கலாம். ஹஜ் என்றால் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் விளக்கினால் தான் புரியும். உம்ராச் செய்யுங்கள் என்று குர்ஆன் கூறுவதன் பொருள் விளங்கலாம். அதை எவ்வாறு செய்வது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் விளக்க வேண்டும்.

இப்படி ஏராளமான வசனங்களுக்கு எவ்வாறு செயல் வடிவம் கொடுப்பது என்பதை விளக்கும் அதிகாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறான் என்பதைத் தான் மேற்கண்ட வசனம் தெளிவாக்குகிறது.

لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُوا عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمْ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ(164) سورة آل عمران

அவனது வசனங்களை ஓதிக் காட்டி மேலும் அவர்களைத் தூய்மைப் படுத்தி மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அல்லாஹ் மூமின்களுக்கு பேரருள் புரிந்து விட்டான் (3 : 164)

வெறும் வேதத்தை மட்டும் அருளியதை அருட்கொடையாக அல்லாஹ் கூறவில்லை. மாறாக தூதரை அனுப்பியது தான் அருட் கொடை என்கிறான். அதுவும் அந்தத் தூதர் வேதத்தை வாசித்துக் காட்டுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதற்கு விளக்கம் கூறும் அதிகாரமும் பெற்றவராக இருப்பதையும் கூறி விட்டு இதைத் தனது அருட்கொடை என அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

இதே போன்று ஜும்ஆ அத்தியாயத்தின் இரண்டாம் வசனத்திலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாசித்துக் காட்டிய குர்ஆன் எங்கே என்றால் இதோ என்று கூறி விடுவோம். அந்த வேதத்துக்கு விளக்கம் அளித்தார்கள் என்று அல்லாஹ் கூறுகிறானே அந்த விளக்கம் எங்கே? அறியாதவற்றை எல்லாம் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறானே அவையெல்லாம் எங்கே?

இறைவன் அந்தப் பணிகளைச் செய்வதற்காகவே அனுப்பியுள்ளான் என்பதிலிருந்து அவர்களின் விளக்கம் இன்றியமையாத ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அந்த இன்றி அமையாத விளக்கம் எங்கே? குர்ஆன் மட்டும் போதும் என்போர் அதை ஒருக்காலும் எடுத்துக் காட்ட முடியாது.

வேதத்தைக் கற்றுக் கொடுப்பதும் வசனங்களை ஓதிக் காட்டுவதும் ஹிக்மத்தைக் கற்றுக் கொடுப்பதும் எல்லாம் ஒன்றுதான் என்று உளறுவதைத் தவிர அவர்களிடம் இதற்கு பதில் கிடையாது.

அல்லாஹ் தேவையில்லாத வார்த்தைகளைப் பயன் படுத்தியிருக்கிறான் என்று அல்லாஹ்வின் தகுதியைக் குறைத்தாவது தங்கள் மனோ இச்சையை நிலை நாட்டப் பார்க்கிறார்கள்.

பயனற்ற தேவையற்ற ஒரே ஒரு சொல்லும் அல்லாஹ்வின் வேதத்தில் இருக்காது என்ற நம்பிக்கையுடன் வேதத்தை ஆராய்ந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை வெறுமனே வாசித்துக் காட்ட மட்டும் வரவில்லை. வாசித்துக் காட்டும் போது ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் அதிகாரம் பெற்றவர்களாகவும் நடைமுறைப்படுத்திக் காட்டும் அதிகாரம் பெற்றவர்களாகவுமே வந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ - இறைச் செய்தி உள்ளது என்பதற்கான சான்றுகள் இத்துடன் முடியவில்லை. இன்னும் பல வசனங்கள் உள்ளன.

No comments:

Post a Comment