பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, August 22, 2010

இறைவனை இவ்வுலகில் காண முடியுமா?

இறைவனை இவ்வுலகில் காண முடியுமா?

 அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது! அவனது சாந்தியும் சமாதானமும் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தார்கள், தோழர்கள் மற்றும் முஸ்லிமான நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக!.


இறைவனை இந்த உலகில் பார்க்க இயலுமா என்பதைக் காணுவதற்கு முன்னர் இறைவன் தன்னுடைய பண்புகளாக தன்னுடைய திருமறையில் கூறுவதைச் சற்று பார்ப்போம்.

அல்லாஹ் கூறுகிறான்: -
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது: உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான். (அல்-குர்ஆன் 2:265)

நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 4:58)

அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை; இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்; மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்; அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன். (அல்-குர்ஆன் 39:67)

‘அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது’ என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; (அல்-குர்ஆன் 5:64)

அல்லாஹ் தன்னுடைய திருமறையின் பல இடங்களில் தான் அனைத்தையும் பார்க்கக் கூடியவன் என்றும், எல்லாவற்றையும் கேட்கக் கூடியவன் என்றும் கூறுகிறான். மேலும் தன்னுடைய கைகளைப் பற்றியும் கூறுகிறான். ஆனால் அவைகளைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவைகள் மனிதக் கற்பனைக்கு கூட மிக மிக அப்பாற்பட்டதாகும்.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசித்த ஒரு முஃமின் அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தன்னைப் பற்றிக் கூறியவற்றை உள்ளது உள்ளவாறே நம்பிக்கைக் கொண்டால் போதுமானது. அதாவது அல்லாஹ் தன்னுடைய வல்லமையைக் கொண்டும் ஆற்றலைக்கொண்டும் அனைத்தையும் பார்ப்பவன் மற்றும் எல்லாவற்றையும் கேட்பவன் என்றும் அவன் தன்னுடைய கைகளாக குறிப்பிடப்பட்டவை அவனுடைய படைப்பினங்களில் எதற்கும் ஒப்பானவை அல்ல என்பதையும் நம்பிக்கைக் கொண்டால் போதுமானது.

மேலும் அல்லாஹ் தனது பண்புகளாக திருமறையில் எதைக் குறிப்பிட்டுள்ளானோ அதை அப்படியே நம்பிக்கைக் கொள்ள வேண்டும். அதில் எவ்வித கூடுதலோ அல்லது குறைவோ செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது. மேலும் அவற்றிற்கு சுய விளக்கம் கொடுக்கவும் கூடாது.

அல்லாஹ் கூறுகிறான்: -

வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (அல்-குர்ஆன் 42:11)

இறைவனை இவ்வுலகில் பார்க்க இயலுமா?

அல்லாஹ் கூறுகிறான்: -

6:102 அவன்தான் அல்லாஹ் – உங்கள் இறைவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்; ஆகவே, அவனையே வழிபடுங்கள் – இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.

6:103 பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (அல்-குர்ஆன் 6:102 ரூ 103)

மேலே குறிப்பிடப்பட்ட திருமறை வசனத்தில் ‘பார்வைகள் அவைன அடைய முடியாது, ஆனால் அவனே எல்லபப் பார்வைகளையும் சுழ்ந்து அடைகின்றான் என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே அல்லாஹ்வின் படைப்பினங்களில் யாருமே அவனைப் பார்த்ததில்லை என்றும் அறிய முடிகின்றது.

நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் இரவின் போது இறைவனைப் பார்த்தார்களா?
மஸ்ரூக் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் முஃமின்களின் அன்னையே! முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஃராஜ் – விண்ணுலகப் பயணத்தின் போது நேரில் பார்த்தார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்து விட்டது.

மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார்.

முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் யார் கூறினாரோ அவர் பொய் சொல்லிவிட்டார் என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக) கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது. அவனோ அனைத்தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான். எனும் (6:103 ஆவது) வசனத்தையும், எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை எனும் (42:51 ஆவது) வசனத்தையும் ஓதினார்கள்.

மேலும் எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றை அறிவார்கள் என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார் என்று கூறிவிட்டு பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக) எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகின்றான் என்பதை அறிவதில்லை, எனும் (31:34 ஆவது) வசனத்தை ஓதினார்கள்.

மேலும் எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்து விடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்து விட்டார்கள், என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார், என்று கூறிவிட்டு பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் இறைவன் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள் எனும் (5:67ஆவது) வசனத்தை ஓதினார்கள். மாறாக முஹம்மது (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள் என்று சொன்னார்கள்.

ஸஹீஹ் புகாரியில் இடம் பெற்றுள்ள ஆதாரப் பூர்வமான இந்த ஹதீஸே நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்க்க வில்லை என்பதைத் தெளிவு படுத்துகிறது. மேலும் அவனுடைய படைப்பினங்களில் யாரும் இதுவரை அல்லாஹ்வைப் பார்த்ததில்லை, இனி பார்க்கவும் முடியாது.

எனவே மஹான்கள் பல முறை இறைவனைக் கண்டார்கள், அவனிடம் உரையாடினார்கள் என்றெல்லாம் சூஃபியாக்களின் போலிக் கொள்கைப் பரப்பு புத்தகங்களிலும் மத்ஹப்களின் பிக்ஹ் புத்தகங்களிலும் கூறப்பட்டிருப்பவை அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற இட்டுக் கட்டப்பட்ட பொய்யான செய்திகளாகும்.

ஆனால் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் பல மறுமையில், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்ற அவனுடைய நல்லாடியார்களுக்கு அல்லாஹ் காட்சி தருவான் என்று கூறுகிறது.

இறைத்தூதர் அவர்களே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! இல்லை’ என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் ‘இல்லை’ என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இதே போல்தான் நீங்கள் உங்களின் இறைவனைக் காண்பீர்கள்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

அல்லாஹ் நம் அனைவருக்கும் மறுமையில் அவனுடைய திருமுகத்தைக் காணும் நற்பேற்றினைத் தந்தருள்வானாகவும்.



http://suvanathendral.com/portal/?p=179

No comments:

Post a Comment