புனிதமிகு ரமளான்
இந்தப் பரந்த பூமியைப் படைத்து, அதில் மிகச் சிறந்த படைப்பினமாக உருவாக்கப்பட்டுள்ள மனிதனுக்கு இறைவன் ஏராளமான அருள்களைப் புரிந்துள்ளான். அவனது மாபெரும் அருளுக்கு எடுத்துக்காட்டாக இந்த ரமளான் மாதமும் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடந்து, அவன் தவிர்ந்திருக்குமாறு கூறியவற்றை விட்டும் விலகியிருந்து, சொர்க்கத்தைப் பெற வேண்டிய மனிதன் தவறான காரியங்களில் அதிகம் ஈடுபட்டு ஏராளமான பாவங்களைச் சுமப்பவனாக மாறி வருகிறான். மேலும் மிக மிக சொற்பமான நல்லறங்களையே செய்கின்றான்.
இவர்களைப் போன்றவர்களுக்கு அளவற்ற அருளான் தரும் மாபெரும் சலுகைக் காலம் தான் இந்த ரமளான் மாதம். இந்த மாதத்தில் செய்கின்ற ஒவ்வொரு நல்லறத்திற்கும் ஏராளமான நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான். ஏராளமான பாவங்களை அழிக்கின்றான். அதிலும் குறிப்பாக இரவுத் தொழுகையைத் தொழுபவருக்கு முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
மேலும் ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் செய்கின்ற நல்லறங்கள் ஆயிரம் மாதங்கள் செய்த நன்மைக்கு ஒப்பானதாகும். இவ்வாறு இந்த மாதத்தில் செய்யப்படும் நல்லறங்கள் கூடுதல் சிறப்பைப் பெற்றிருப்பதால் மற்ற மாதங்களில் செய்கின்ற நல்லறங்களை விடக் கூடுதலாக செய்து சொர்க்கத்தை கடமையாக்கிக் கொள்ள வேண்டும்.
அருள் நிறைந்த மாதமாக ரமளான் மாதம் திகழ்வதால் நபி (ஸல்) அவர்கள், ''ரமளான் மாதம் வந்துவிட்டால் ரஹ்மத்தின் (அருளின்) வாசல்கள் திறக்கப்படுகின்றன'' என்று குறிப்பிட்டார்கள். எனவே இந்த அருள் நிறைந்த மாதத்தில், நன்மைகளை இழந்து விடும் செயல்களில் ஈடுபடாமல் நல்லறங்களிலேயே ஈடுபட்டு சொர்க்கத்திற்குரியவர்களாக மாறுவோம்.
No comments:
Post a Comment