துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள்
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்:
எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே சகல புகழும்! முஹம்மத் (ஸல்) மற்றும் அவர்களது குடும்பத்தினர் தோழர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் கருணையும் சாந்தியும் நிலவட்டுமாக!
அல்லாஹ் தனது நல்லடியார்கள் மீது அருளியிருக்கின்ற பேருபகாரங்களில் குறைந்த காலத்தில் நிறைந்த நன்மைகளை பெறுவதற்கான குறிப்பிட்ட சந்தர்ப்பங்களை வழங்கியிருப்பதுவும் ஒன்று. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் மகத்தானதுதான் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும். அதன் சிறப்புக்களைப் பற்றிய விபரங்கள் இதோ!
1. அதிகாலையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீது சத்தியமாக! (அல்குர்ஆன் 89:1,2) பத்து இரவுகள் என்பது துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும் என இப்னு கஸீர் (ரஹ்) கூறுகிறார்கள்.
2. (துல்ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களை விட மிகச் சிறந்தது எது? என நபி (ஸல்) கூறியதும் தோழர்கள், '(அதைவிட) அறப்போர் மிகச் சிறந்ததல்லவா? எனக் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) 'அறப்போர் கூட மிகச்சிறந்ததல்ல. ஆயினும் போர்க்களம் சென்று தனது உயிரையும் உடமைகளையும் அர்ப்பணித்துவிட்ட (திரும்பியவராக)வரின் அறப்போரை விடச் சிறந்ததல்ல' எனக் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள் (புகாரி)
3. (துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களைவிட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதும் மகத்தானதும் வேறு எதுவும் இல்லை எனவே அந்த நாட்களில் லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹுஅக்பர், அல்ஹம்து லில்லாஹ் அதிகமாகக் கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்னு உமர் (ரழி) அறிவிக்கிறார்கள். (தப்ரானி)
4. ஸயீதுப்னு ஜுபைர் (ரழி) (3 - வது எண்ணில் இடம் பெற்றுள்ள இப்னு அப்பாஸ் - ரழி அறிவிக்கும் ஹதீஸை இவர்களும் அறிவிக்கிறார்கள்) அவர்கள் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்கள் வந்துவிட்டால் அவர்களால் செய்ய இயலாமல் போகுமோ என்று எண்ணுகின்ற அளவுக்கு அதிகமான அமல்களைச் செய்ய அதிகமாக முயற்சிப்பார்கள். (தாரிமி)
5. '(துல்ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களுக்குத் தனி அந்தஸ்து வழங்கப்படுவதற்குக் காரணம் தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகிய தலையாய வணக்கங்கள் அனைத்தும் அந்நாட்களில் ஒருங்கே அமையப் பெற்றிருப்பது தான் எனத் தோன்றுகிறது. மற்ற தினங்களில் இவ்வாறு அமைவதில்லை' என்பதாக அப்னு ஹஜர் (ரஹ்) தமது ஃபத்ஹுல் பாரியில் குறிப்பிட்டுள்ளார்.
6. நாட்களில் மிகச் சிறந்தவை துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும். இரவுகளில் சிறந்தவை ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்களாகும் என மார்க்க ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இந்நாட்களில் ஆற்ற வேண்டிய நல்லறங்கள்:
1. தொழுகை: கடமையான தொழுகைகளுக்காக முற்கூட்டியே தயாராகி அதிகமாக உபரியான தொழுகைகளை நிறைவேற்றுதல் இறைவனின்பால் மனிதனை நெருக்கி வைப்பவற்றில் மிகச் சிறந்தது. 'நீர் அல்லாஹ்வுக்கு அதிகமாக ஸஜ்தா செய்வீராக! நீர் ஒரு ஸஜ்தா செய்தால் அல்லாஹ் அதன் மூலம் உமக்கு ஓர் அந்தஸ்தை அதிகப்படுத்துவதுடன் ஒரு தீமையை அழித்து விடுகிறான்' என்பது நபிமொழி. (முஸ்லிம்) இது எல்லா காலத்திற்கும் பொதுவானதுதான்.
2. நோன்பு: இதுவும் நல்லறங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜின் ஒன்பது தினங்களும் நோன்பு நோற்றார்கள் என அண்ணலாரின் மனைவியரில் ஒருவர் கூறியதாக தமது மனைவி குறிப்பிட்டார் என ஹுனைதா பின் காலித் என்பவர் அறிவிக்கிறார் (அஹ்மத், அபூதாவூத், நஸயீ). இமாம் நவவீ (ரஹ்) அவர்கள், இத்தினங்களில் நோன்பு நோற்பது மிகவும் விரும்பத் தக்கதாகும் எனக் கூறியுள்ளனர்.
3. தஹ்லீல், தக்பீர், தஹ்மீது கூறுதல்: 'இத்தினங்களில் லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹுஅக்பர், அல்ஹம்து லில்லாஹ் ஆகியவற்றை அதிகப்படுத்துங்கள்!' என்ற இப்னு உமர் (ரழி) அவர்களின் ஹதீஸ் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி புகாரி (ரஹ்), 'இந்த தினங்களில் இப்னு உமர் (ரலி), அபூஹுரைரா (ரழி) ஆகியோர் கடைத்தெருவுக்குச் சென்று தக்பீர் கூறுபவர்களாக இருந்தனர். இவர்களது தக்பீரைக் கேட்டு மக்களும் தக்பீர் கூறியுள்ளனர்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
4. அரஃபா தின நோன்பு: அந்த வருடம் ஹஜ் செய்யாதவர்களுக்கு அந்த நோன்பு மிகவும் வலியுறுத்தப்பட்டதாகும். ஏனெனில், 'அரஃபா (துல்ஹஜ் 9 -ஆம்) தினத்தன்று நோன்பு நோற்பதன் மூலம் ஒருவருடைய கடந்த ஒருவருட கால (சிறிய) பாவங்களும் அடுத்து வரும் ஒருவருட கால (சிறிய) பாவங்களும் மன்னிக்கப்படும் என நான் கருதுகின்றேன்' என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)
5. யவ்முந் நஹ்ர்: துல்ஹஜ் 10,11 ஆம் தினங்கள் மிகச் சிறந்த நாட்களாகும். அவற்றில் அல்லாஹ்விடம் அதிகமாக பாவமன்னிப்பும் பிரார்த்தனையும் செய்யலாம். ஏனெனில் 'அல்லாஹ்விடம் நாட்களில் மிகச் சிறந்தது எவ்முந் நஹ்ர் - துல்ஹஜ் 10 - ஆம் நாளாகும். அதையடுத்து துல்ஹஜ் 11 - ஆம் தினம் சிறப்புக்குறியதாகும் என்பது நபிமொழி. (அபூதாவூத்)
நல்லறங்களின் பருவகாலத்தை வரவேற்பது எவ்வாறு?:
பொதுவாக ஒரு முஸ்லிம் பாவங்களிலிருந்து முழுமையாக விடுபடுவதுடன் கலப்பற்ற பாவமன்னிப்பை எதிர்பார்த்த நிலையில் நல்லறங்களின் குறிப்பிட்ட பருவங்களை வரவேற்கத் தயாராக வேண்டும். ஏனெனில் ஓர் அடியான் இறையருளைப் பெறுவதற்குப் பெரும்பாலும் பாவங்களே தடையாக அமைகின்றன. அதுபோல அந்தப் பருவத்தில் இறைவனுக்கு விருப்பமான நல்லறங்களை அதிகமாக செய்ய முயற்சிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடனும் வரவேற்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: யார் நமது விஷயத்தில் முயற்சி செய்கின்றார்களோ அவர்களுக்கு நாம் நிச்சயமாக நமது வழிகளைக் காண்பிப்போம். (29:69) உங்கள் இரட்சகனின் மன்னிப்பின்பாலும் இறையச்சம் உள்ளவர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ள வானங்கள் மற்றும் பூமியின் அகலத்தையுடைய மாபெரும் சுவனத்தின் பாலும் விரையுங்கள்! (3:133) அவர்கள் நன்மைகளின்பால் விரையக்கூடியவர்களாகவும் ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திக்கக் கூடியவர்களாகவும் இருந்தனர். மேலும் அவர்கள் நம்முன் பணிந்தவர்களாகவும் திகழ்ந்தவர்கள். (21:90) இத்தகைய கூட்டத்தில் சேருவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.
No comments:
Post a Comment