பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, November 25, 2009

உள்ஹிய்யாவின் சட்டங்கள்

உள்ஹிய்யாவின் சட்டங்கள்


அல்லாஹ்வைத் தொழுது வணங்குங்கள்! மேலும் அவனுக்கே அறுத்துப் பலியிடுங்கள்! (106:2) மேலும் பலியிடப்படும் ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் புனிதச் சின்னங்களாக நாம் ஆக்கியுள்ளோம் (22:36) ஆகிய வசனங்களின் மூலம் அல்லாஹ் குர்பானியை மார்க்கமாக்கியுள்ளான். நபி (ஸல்) அவர்கள் கொழுத்த, கொம்புள்ள இரு ஆடுகளை 'பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர்' எனக் கூறித் தாமே அறுத்துக் குர்பானி கொடுத்தார்கள் என அனஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி புகாரி - முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு அதிகம் வலியுறுத்தப்பட்டுள்ள இந்த நபிவழியை வசதியள்ளவர்கள் நிறைவேற்றுவது அவசியம்.

உள்ஹிய்யா பிராணிகள்:

ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகள் மட்டுமே உள்ஹிய்யாவிற்குத் தகுதியானவை. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: ஒவ்வொரு சமூகத்தாருக்கும் பலியிடும் முறையை நாம் ஏற்படுத்தியுள்ளோம் - அவர்கள் அல்லாஹ் தங்களுக்கு வழங்கியுள்ள ஆடு - மாடு - ஒட்டகம் ஆகிய பிராணிகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி(ப் பலியி)ட வேண்டும் என்பதற்காக...(22:34)

மேலும் உள்ஹிய்யா பிராணிகள் குறைகள் இல்லாதவைகளாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். எனெனில் 'நான்கு விதமான குறையுள்ள பிராணிகள் உள்ஹிய்யாவுக்குத் தகுதியற்றவை: அதிகக் குருடானது, அதிக வியாதியுள்ளது, அதிகம் நொண்டியானது, அதிகம் மெலிந்தது ஆகியவை' என நபி (ஸல்) கூறியுள்ளார்கள் (திர்மிதி)

குர்பானியின் நேரம்:

பெருநாள் தொழுகை நிறைவேற்றப்பட்டதன் பிறகிலிருந்து குர்பானிக்கான நேரம் ஆரம்பமாகின்றது. யார் பெருநாள் தொழுகைக்கு முன்பாக அறுக்கின்றாரோ அவர் தமக்காகவே அறுத்தவறாகின்றார். யார் தொழுகை(யும் குத்பா-உரையும்) முடிந்த பின் அறுக்கின்றாரோ அவர் சுன்னத்தைப் பரிபூரணப் படுத்தியவரும் முறையாக நிறைவேற்றியவருமாவார் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)

முறையாக அறுக்கத் தெரிந்தவர் தாமே தமது கையால் அறுப்பதும், அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் எனக் கூறுவதுடன் அந்தக் குர்பானி யார் சார்பாக நிறைவேற்றப்படுகின்றது என்பதைக் குறிப்பிடுவதும் நபிவழியாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டைக் குர்பானியாக பலியிட்ட போது 'பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர்' எனக் கூறியதுடன் 'அல்லாஹ்வே இது என் சார்பாகவும் எனது சமுதாயத்தில் யார் குர்பானி கொடுக்க(இயல)வில்லையோ அவர்கள் சார்பாகவுமாகும்' எனவும் குறிப்பிட்டார்கள். (அபூதாவூத், திர்மிதி) முறையாக அறுக்கத் தெரியாதவர்கள் பிறர் மூலம் அறுக்கும் போது அவ்விடத்திற்குச் சமூகமளிக்கவாவது வேண்டும்.

உள்ஹிய்யா மாமிச வினியோகம்:

உள்ஹிய்யா கொடுப்பவர் அதன் இறைச்சியைத் தாம் உண்பதுடன் உறவினர்கள், அண்டைவீட்டார், ஏழைகள் ஆகியோருக்கு வழங்குவதும் நபிவழியாகும். ஏனென்றால் 'அவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள்! தேவையுடையோருக்கும் உண்ணக் கொடுங்கள் (22:28) என்றும் அவற்றிலிருந்து நீங்களும் புசியுங்கள்! இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவோருக்கும் தேவையுள்ளோருக்கும் உண்ணக் கொடுங்கள்! (22:36) என்றும் அல்லாஹ் கூறுகிறான். குர்பாணிப் பிராணிகளின் எந்தப் பகுதியையும் அதன் தோலை உறிக்கும் பணியாளுக்குக் கூலியாகக் கொடுக்கலாகாது.

குர்பானி கொடுக்க நாடுபவர் செய்யக்கூடாதவை:

உள்ஹிய்யா கொடுக்க நாடியவர் துல்ஹஜ் மாதம் துவங்கியதிலிருந்து உள்ஹிய்யா கொடுக்கின்ற வரை தமது மேனியிலுள்ள முடிகளையோ நகங்களையோ களையக் கூடாது. ஏனெனில் 'துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்கள் வந்துவிட்டால் உள்ஹிய்யா கொடுக்க விரும்புபவர் தமது நகங்களையும் முடிகளையும் (களையாமல்) தடுத்துக் கொள்ளட்டும்' என நபி (ஸல்) கூறியதாக உம்மு ஸலமா (ரலி) அறிவிக்கும் செய்தி அஹ்மத், முஸ்லிமில் உள்ளது. வேறொரு அறிவிப்பில் உள்ஹிய்யாவை நிறைவேற்றும் வரை தமது முடிகளையோ நகங்களையோ தீண்ட வேண்டாம் என்றுள்ளது.

உள்ஹிய்யா கொடுப்பதாக அந்த பத்து தினங்களுக்கிடையே முடிவெடுத்தாலும் முடிவெடுத்ததிலிருந்து அதை நிறைவேற்றும் வரை முடிகளையும் நகங்களையும் களையாமலிருக்க வேண்டும். அவ்வாறு முடிவெடிக்கும் முன்பு அவற்றைக் களைந்திருந்தால் குற்றமில்லை.

மேலும் இந்தக் கட்டுப்பாடு உள்ஹிய்யா கொடுக்க நாடியுள்ள குடும்பத் தலைவருக்கு மட்டும் தான். அவருடைய குடும்பத்தினர் அக்குறிப்பிட்ட தினங்களில் தங்களின் மேனியிலுள்ள முடிகளையோ நகங்களையோ களைவது தவறில்லை. உள்ஹிய்யா கொடுக்க நாடியவர் காயங்கள், மற்ற இயற்கைத் தொல்லைகள் காரணமாக முடிகளையோ நகங்களையோ களைந்தால் தவறில்லை. அதற்காக பரிகாரம் தேட வேண்டியதும் இல்லை.

முடிவாக... முஸ்லிம் சகோதரரே! சொந்தபந்தங்களுக்கு உபகாரம் செய்தல், நெருங்கிய உறவினர்களைச் சந்தித்தல் போன்ற நல்ல காரியங்களில் ஆர்வம் காட்ட மறந்து விட கூடாது. பொறாமை, துவேஷம், வெறுப்பு ஆகியவற்றை இதயத்திலிருந்து அகற்றி அதைத் தூய்மைப்படுத்த வேண்டும். குறிப்பாக ஏழைகள், தேவையுள்ளோர், அனாதைகள் ஆகியோர் மீது கருணை காட்டி அவர்களுக்கு உபகாரம் செய்து இந்த நாட்களில் - பெருநாள் தினங்களில் அவர்களின் மனதில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிலவச் செய்ய வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தான் விரும்பியவாறு நம் அனைவருக்கும் அருள்புரியப் போதுமானவன்!

No comments:

Post a Comment