ஹஜ் செய்பவர்கள் குர்பானி கொடுக்க வேண்டுமா? – இதப்படிங்க முதல்ல…
முஸ்லிம்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ஹஜ் கிரியை 35 லட்சத்திற்கும் மேலதிகமான மக்களால் ஒவ்வொரு ஆண்டும் நிறைவேற்றப்படுகின்றது. இன, மொழி, நாடு, நிற வேறுபாடுகளைக் கடந்து, உலகம் முழுவதிலிருந்தும் ஆண்களும், பெண்களுமாக ஹஜ் கடமையை நிறைவேற்ற, ஒவ்வொரு வருடம் சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்குச் செல்கின்றனர். குறிப்பிட்ட நாட்களில், மக்கா மற்றும் மக்காவை சுற்றியுள்ள சில இடங்களில் தங்கி, சில வணக்க வழிபாடுகளைச் செய்வதே ஹஜ் எனப்படுகின்றது. அவற்றுள், ஓர் ஆட்டையோ அல்லது மாடு, ஒட்டகங்களை கூட்டாகவோ குர்பானி என்ற பெயரில் இறைவனுக்காக பலியிட்டு தேவையுள்ளவர்களுக்கும், ஏழைகளுக்கும் விநியோகிப்பதும் ஒன்றாகும்.
இந்த வருடம், இந்தியாவிலிருந்து 1,60,491 பேர் ஹஜ் செய்ய இருக்கின்றனர். இவர்களுள், 1,15,000 பேர் இந்தியா ஹஜ் கமிட்டி மூலமும், 45,491 பேர் தனியார் ஹஜ் டிராவல்ஸ் மூலமும் மக்கா வர இருக்கின்றனர்.
பல்வேறு நாடுகள், நகரங்களில் இருந்து ஹஜ்ஜுக்கு செல்பவர்கள், பலிப்பிராணிகளை நேரடியாக சென்று வாங்கி, பலி கொடுத்து, விநியோகம் செய்வது இயலாததாகையால், தங்களை ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லும் ஏஜெண்டுகளிடம் அதற்கான தொகைகளை ஒப்படைப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், பெரும்பாலான ஏஜண்டுகள் அந்த தொகைகளை ஏப்பம் விட்டு விடுகின்றார்கள் என்பது நிதர்சனமான அதே நேரம் கசப்பான உண்மை. பேருக்கு சில ஆடுகளை பலியிட்டு, அந்த இறைச்சியை ஹஜ் செய்பவர்களுக்கு உணவாக வழங்குகின்றனர். மீதத் தொகை, ஏஜண்டுகள் மற்றும் குர்பானி விநியோகம் செய்பவர்களிடையே பங்கிடப்படுகின்றது. இதை அறியாத ஹாஜிகள் தங்களின் பணத்தைக் கொண்டு, குர்பானி கொடுக்கப்பட்டு விட்டதாக எண்ணி ஏமாந்த வண்ணம் உள்ளனர். மேலும், பல மக்களை கூட்டிச் செல்லும் ஹஜ் ஏஜெண்டுகள், தங்கள் கூடாரங்களில் உணவுத் தேவைக்கு இறைச்சி தேவைப்படுவதால், அரசாங்கம் மூலம் குர்பானி கொடுக்க விரும்புவர்களையும் அவ்வாறு கொடுக்க விடுவதில்லை. குர்பானி இறைச்சியை கண்டிப்பாக ஹாஜிகள் சாப்பிட வேண்டும் என பொய்யான மார்க்கத் தீர்ப்பைக்(!) கூறி, தடுக்கின்றனர். மேலும், தங்கள் மூலம் கொடுத்தால் குறைந்த விலையில் குர்பானி கொடுக்கலாம் எனவும் ஆசை காட்டுகின்றனர்.
மேலும், இவ்வாறு தனியார் மூலம் அறுக்கப்படும் பலிப்பிராணிகள் சுத்தமான இடத்தில் வைத்து அறுக்கப்படுவதில்லை; அறுக்கப்பட்ட பிராணிகளின் இறைச்சியும் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை.
இந்நிலையை களையும் பொருட்டு, சவூதி அரசானது, ஹஜ் இறைச்சி உபயோகத்திற்கான சவூதி திட்டம் (Saudi Project for Utilization of Haj Meat SPUHM) – என்ற பெயரில் மக்காவைச் சுற்றி பல பகுதிகளில், பலிக்கூடங்களை நிறுவியுள்ளது. ஹாஜிகளின் சார்பில் குர்பானி கொடுக்க சவூதி அரசால் அங்கீகாரம் பெற்ற ஒரே அமைப்பு இதுவே. பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்யும் இக்கூடங்களில், ஒரு நாளைக்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பலிப்பிராணிகளை – இஸ்லாமிய முறைப்படி பலியிட்டு, சுகாதாரமாகவும், இறைச்சிகளை வீணாக்காமலும் விநியோகிக்க முடியும். இஸ்லாமிய வளர்ச்சி வங்கி (IDB) – இன் மேற்பார்வையில் நடைபெறும் இந்த ஏற்பாடு, ஹஜ் செல்லும் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எண்ணிக்கைக்கும், எடைக்கும், நியாயமான விநியோகத்திற்கும் IDB உத்தரவாதம் அளிக்கின்றது.
சவூதியில் உள்ள பிற நகரங்களில் இருந்து வருபவர்களும், வெளிநாடுகளில் இருந்து ஹஜ் செய்ய வருபவர்களும், சவூதியில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் கிடைக்கக் கூடிய SR 430 மதிப்பிலான கூப்பன்களை பெற்றுக் கொள்ளலாம். ஹாஜிகளின் சார்பாக IDB மூலம் குர்பானி கொடுக்கப்பட்டு, இறைச்சியானது தரை-கடல்-வான் மார்க்கமாக மக்கா, மதீனா மற்றும் சவூதியின் பிற நகரங்களில் உள்ள ஏழைகளுக்கும், மேலும் 25 -க்கும் அதிகமான நாடுகளில் உள்ள ஏழை மக்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது. இதன் மூலம், ஹாஜிகள் தங்கள் கடமையை சரியாக இறைவழியில் நிறைவேற்றிய திருப்தி கிடைக்கும். மேலும், ஏஜெண்டுகளிடம் ஏமாறாமல், தேவையுள்ளோருக்கு குர்பானி இறைச்சியும் சென்றடையும்.
No comments:
Post a Comment