நபியைக் கடவுளாக்கும் மௌலித்
மவ்துப் பாடல்களில் நபி (ஸல்) அவர்களைக் கடவுளாக்கும் கவிதை வரிகள் இடம் பெறுகின்றன.
இறைவனுக்கு மட்டுமே உரித்தான பண்பு பாவங்களை மன்னிக்கும் ஆற்றலாகும்.
அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். அல்குர்ஆன் 3:135
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)
படைத்த ரப்புல் ஆலமீனின் பண்பான இந்த மன்னிக்கும் ஆற்றலை, மவ்தை இயற்றியவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்து மகிழ்கிறார்கள்.
اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ
பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் !
கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !
اَنْتَ غَفَّارُ الْخَطَايَا وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ
தவறுகளை மன்னிப்பது தாங்களன்றோ,
அழிவேற்படுத்தும் பாவங்களை மன்னிப்பது தாங்களன்றோ
كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ
என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!
சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!
اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ
மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்
إِنَّا بِهِ نَسْتَجِيْرُ فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ
நிச்சயமாக நாம் ஒவ்வொரு தண்டனையையும் தடுத்திடும் விஷயத்தில் இவர்களிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்.
இவை அனைத்தும் சுப்ஹான மவ்தில் இடம் பெறும் கவிதை வரிகள். இது போன்ற ஏராளமான கருத்துக்கள் இந்த மவ்துகளில் இடம் பெற்றுள்ளன.
முஹம்மத் (ஸல்) அவர்களைக் கடவுளாக்கும் இந்தக் கவிதை வரிகளைப் படிப்பவருக்கு மறுமையில் என்ன நிலை?
”மர்யமின் மகன் ஈஸாவே! ‘அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!’ என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?” என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, ”நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்” என்று அவர் பதிலளிப்பார். ”நீ எனக்குக் கட்டளையிட்ட படி ‘எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.” (அல்குர்ஆன் 5:116, 117)
மறுமை விசாரணையின் போது, தம்மைக் கடவுளாக்கியது பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று ஈஸா (அலை) அவர்கள் பதிலளிக்கிறார்கள். இதே பதிலைத் தான் நபி (ஸல்) அவர்களும் கூறுவார்கள் என்று புகாரியில் (3349) இடம் பெற்றுள்ள ஹதீஸ் கூறுகின்றது.
மவ்துப் பாடல்கள் நபி (ஸல் அவர்களைக் கடவுளாக்குகின்றன. எனவே இந்த மவ்துகளை ஓதுபவர்களுக்கு நிரந்தர நரகம் தண்டனையாகக் கிடைக்கிறது. எனவே இந்த மவ்து, மீலாதுகளைக் கொண்டாடலாமா? என்பதை ஒருமுறை நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.
மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் விருப்பு வெறுப்பின்றி சிந்தித்துப் பார்த்து, இனியாவது இந்தக் கொடும் பாவத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
No comments:
Post a Comment