அருள்மிகு ரமளானுக்கு ஆயத்தமாவோம்
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும்.
அல்குர்ஆன் 9:36
மாதங்கள் பன்னிரண்டு என்று சொல்கின்ற வல்ல நாயன் அந்த மாதங்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. ஒரேயொரு மாதத்தைத் தவிர! அந்த மாதம் புனிதமிக்க ரமளான் மாதம் தான். ரமளான் மாதத்தின் பெயரை மட்டும் அல்லாஹ் குறிப்பிடுவது ஏன்?
அந்த மாதத்தில் தான் புனிதமிகு திருக்குர்ஆனை அல்லாஹ் அருளினான்.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான். எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது)
அல்குர்ஆன் 2:185
அருள்மிகு ரமளான் மாதத்தில் அல்குர்ஆன் இறங்கியது என்றவுடன் அடுத்து நமது உள்ளத்தில் உதிக்கின்ற கேள்வி, ரமளான் மாதத்தில் குர்ஆன் இறங்கிய அந்த நாள் எது? அதற்கும் அல்லஹ் பதில் சொல்கிறான்.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.
அல்குர்ஆன் 98:1-5
வேதத்தை இறக்கிய அந்த நாளை முன்னிட்டே அந்த மாதம் முழுவதையும் அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான். ஆயினும் ரமளான் மாதத்தில் அந்தக் குறிப்பிட்ட நாள் எது என்பதை மட்டும் குறிப்பிடாமல் விட்டு விட்டான்.
அந்த நாளை அவன் அடையாளப்படுத்தியிருந்தால் அடியார்கள் அந்நாளில் மட்டும் வந்து தொழுது, அதை அமர்க்களப்படுத்தி விட்டு மற்ற நாட்களை அலட்சியப்படுத்தி விடுவார்கள்.
பத்து இரவுகளில் ஓர் இரவுக்குள் அந்த லைலத்துல் கத்ரைப் பொத்திப் பொதிந்து வைத்து, அந்தப் பத்து இரவுகளுக்கும் ஒரு மகத்துவத்தை வழங்குகிறான்.
தன் அடியார்கள் அந்த ஓர் இரவின் நன்மையை மட்டும் பெற்றுச் சென்று விடாமல் மீதி ஒன்பது இரவுகளிலும் வணங்கி அந்த இரவுகளின் நன்மைகளையும் அல்லாஹ் பெறச் செய்கிறான்.
இப்படி ரமளான் மாதத்தின் பிந்திய பத்து இரவுகளையும் கிளைமாக்ஸாக, அதாவது நன்மைகளைப் பெறுகின்ற உச்சக்கட்டமாக ஆக்கியிருக்கின்றான்.
இவ்வளவு சிறப்பும் அருள்மிகு குர்ஆன் இறங்கியதற்காகத் தான்.
சுவனத்தின் வாசல்களைத் திறந்து வைத்து, நரகத்தின் வாசல்களை மூடி, ஷைத்தான்களுக்கு விலங்கிட்டு, குர்ஆன் இறங்கிய இந்த மாதத்தைக் கண்ணியப்படுத்துகின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதம் வந்துவிட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1899
ரமளான் வந்ததைப் பயன்படுத்தித் தன் அடியான் சுவனவாசியாகி விட வேண்டும் என்பதற்காகத் தான் இப்படியொரு ஏற்பாட்டைச் செய்கின்றான்.
இம்மாபெரும் ரமளானை அடைவதற்காக நபி (ஸல்) அவர்கள் ஷஅபானிலேயே ஆயத்தமாகி விடுவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேறெந்த மாதத்திலும் மேற்கொள்ளாத கவனத்தை ஷஅபான் மாதத்தில் மேற்கொள்வார்கள். பிறகு ரமளான் பிறை பார்த்து நோன்பு நோற்பார்கள். (பிறை தென்படாது) மேக மூட்டமாக இருந்தால் (அம்மாதத்தை) முப்பது நாட்களாகக் கணக்கிட்டு (அதற்கு மறுநாள்) நோன்பு நோற்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அபூதாவூத் 1980
இந்த அடிப்படையில் நாமும் ரமளானுக்கு ஆயத்தமாக வேண்டும். ரமளானை அடைவதற்காக நாம் முன்கூட்டியே திட்டம் தீட்டிக் கொள்ள வேண்டும். ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலத்துல் கத்ரை அடைவதற்காக அது அடங்கியுள்ள ரமளானின் பிந்திய பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க முயற்சிக்க வேண்டும். அதற்காக நமது பணிகளை ஓரம் கட்டி விட்டு, இந்தப் பத்து நாட்களையும் மறுமைக்காக ஒதுக்க வேண்டும்.
காரணம், நம்முடைய வாழ்க்கையின் மொத்தப் பகுதியையும் உலகமே ஆக்கிரமித்துக் கொள்கின்றது. இதில் மறுமைக்குக் கிடைப்பது அதன் ஓரம் தான்.
ரமளானின் பிந்திய பத்துக்களில் தான் ஒட்டு மொத்த ஈடேற்றம் அமைந்திருக்கின்றது. அந்தப் பிந்திய பத்து நாட்களில் வியாபாரம் சூடு பிடிக்கத் துவங்கி உலகம் நம்மை ஓய்த்து விடுகின்றது.
இதற்காக உலகத்தையும் மறந்து விடாமல், மறுமையையும் இழந்து விடாதவாறு முற்கூட்டியே திட்டம் தீட்டி ரமளானை அடைவோமாக! ரம்மியமிகு இனிய சுவனத்திற்குள் நுழைவோமாக!
No comments:
Post a Comment