பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, April 29, 2018

கொள்கை உறவு

தவ்ஹீத்வாதிகளே!

கே.எம். அப்துந் நாசிர் MISC

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக எங்கு நோக்கிலும் இணைவைப்புக் கொள்கைகள் ஆட்சி செய்த காலகட்டம். ஒரு கையில் இறைவேதம் மறுகையில் நபிபோதம் என்று பாடிக்கொண்டே நெருப்பை நோக்கிச் செல்லும் விட்டில் பூச்சிகளாய் இந்த இஸ்லாமிய சமுதாயம் நரகத்தை நோக்கி இழுத்துச் செல்லும் காரியங்களில் மூழ்கிக் கிடந்தது.

இறைவனின் பேரருளால் அல்லாஹ் தன்னுடைய ஏகத்துவ ஒளியை மக்களின் உள்ளங்களில் பாய்ச்சினான். ஐந்தும் பத்துமாய் இருந்தவர்கள் இலட்சக்கணக்கில் கொள்கையை நோக்கி அணிதிரண்டார்கள். தவ்ஹீதை நிலைநாட்ட தவ்ஹீத் சொந்தங்கள் வாரி வழங்கிய அற்பக் காசுகள் ஒன்று திரட்டப்பட்டு பெரும் பெரும் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.

ஒன்றுமே இல்லாமல் இருந்த போது இருந்த கொள்கைப் பிடிப்பு பெரும் பெரும் சொத்துக்களைப் பார்த்தவுடன் சிலரது உள்ளங்களை இன்றைக்கு சறுகச் செய்துள்ளது. சத்தியத்தைப் போதிக்க வேண்டும், இணை வைப்பை ஒழிக்க வேண்டும், அனாச்சாரங்களை அழிக்க வேண்டும் என்று பேசிய நாவுகளில் சில இன்று ஊர் வாதம் பேசத் துவங்கியுள்ளது. கொள்கையில் சறுகத் துவங்கியுள்ளது. கொள்கைவாதிகளை வீழ்த்திட கொடுமைவாதிகளோடும் கைகோர்க்கத் தயங்கவில்லை அவர்கள்.

இத்தகைய ஷைத்தானிய சக்திகளிடமிருந்து கொள்கைவாதிகளை அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். தவ்ஹீத் சொந்தங்கள் தங்களுக்கு மத்தியில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நம்முடைய தலைவர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள்.

சகோதரா! இது குருதி உறவல்ல. இவ்வுலகோடு முடிந்து போவதற்கு! மாறாக இது இறப்பிற்குப் பிறகும் தொடரும் கொள்கை உறவு. நம்மை பிளவுபடுத்தத் தான் எத்தனை எத்தனை ஷைத்தானின் சதிவலைகள், அவதூறுகள்,  விமர்சனங்கள். நம்மை பிளவு படுத்துவதன் மூலம் நம் கொள்கையை நசுக்கிவிடலாம் என நாசக்காரன் நினைக்கின்றான்.

ஆனால் நம்முடைய அழகிய முன்மாதிரி, நம் உயிரினும் மேலான நாயகத்தின் வழிகாட்டல்கள் நம்மோடு இருந்தால் நம்மை யார் தான் பிரித்திட இயலும். இதோ நாயகத்தின் வழிகாட்டல்களில் நம் உள்ளங்களை லயிக்கச் செய்வோம். அதில்தான் நம் எதிர்கால வெற்றி கனியவிருக்கிறது.

கொள்கை உறவு ஒரு கட்டிடம். சிறு மழை வெள்ளத்தில் சரியக்கூடிய கட்டிடமல்ல. புயலடித்தாலும் பூமியே நடுங்கினாலும் தளராத கட்டிடம்.  இதோ நம் கொள்கைத் தலைவர் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று வழிகாட்டுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர்கள்  ஒருவருக்கொருவர் (துணைநிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.

(இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைவிரல்களை ஒன்றுடன் ஒன்றை கோத்துக் காட்டினார்கள்.  (நூல்: புகாரி 481)

நம் கொள்கை உறவு வெறும் பேச்சோடு, புன் சிரிப்போடு முடிந்து விடக்கூடியதல்ல. இது உயிரோடும். உள்ளத்தோடும் கலந்த உறவு. இதோ நம் வழிகாட்டி நன்குரைப்பதைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டு வதிலும் (உண்மையான) இறைநம்பிக்கை யாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உட-ன்) ஓர் உறுப்பு சுகவீனம டைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டு விடுகிறது.

அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி), நூல்: புகாரி 6011

நாம் ஓரிறையையும். இறைத்தூதர் நெறியையும் உண்மையில் பிசகற அறிந்த இறை நம்பிக்கையாளர்கள் என்றால், நம் கொள்கைச் சகோதரனை தன்னைப் போல் பாவிக்க வேண்டும் என நம் தலைவர் நமக்கு வழிகாட்டுவதைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.

அறிவிப்பவர்:  அனஸ் (ரலி),
நூல்: புகாரி 13

இந்த நேசம் என்பது காசுக்காகவோ, சுய லாபத்திற்காகவோ, உலக ஆதாயத்திற்காகவோ ஏற்பட்ட நேசமல்ல. மாறாக கொள்கைச் சகோதரன் என்பதால் ஏற்பட்ட நேசம். எங்கள் இணைவும், பிரிவும் ஏகத்துவத்திற்காகவே, ஏகனுக்காகவே என்பதைப் பறைசாற்றும் நேசம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் (கொள்கை)ச் சகோதரரைச் சந்திப்பதற்காக வேறோர் ஊருக்குச் சென்றார். அல்லாஹ், அவர் செல்லும் வழியில் அவரை எதிர்பார்த்தபடி வானவர் ஒருவரை அமரச் செய்தான். அந்த மனிதர் அவரிடம் வந்தபோது, "எங்கே செல்கிறாய்?'' என்று அந்த வானவர் கேட்டார்.

அதற்கு அந்த மனிதர், "இந்த ஊரிலுள்ள என் சகோதரர் ஒருவரைச் சந்திப்பதற்காகச் செல்கிறேன்'' என்று கூறினார்.

அதற்கு அவ்வானவர், "அவர் உமக்குச் செலுத்த வேண்டிய பிரதியுபகாரம் ஏதேனும் உள்ளதா?'' என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், "இல்லை; எனினும் நான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன்'' என்று கூறினார்.

அதற்கு அந்த வானவர், "நீ அல்லாஹ்வுக்காக அவரை நேசித்ததைப் போன்றே அல்லாஹ்வும் உன்னை நேசிக்கிறான் என்பதைத் தெரிவிக்க அல்லாஹ்வால் உம்மிடம் அனுப்பப்பெற்ற தூதர் ஆவேன் நான்'' என்று சொன்னார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 5016

நம் கொள்கைக் கட்டிடம் சரிந்திடாமல் காப்பதற்காக அதன் இரும்புக் கம்பிகளாய், கான்கிரீட் கலவையாய், கற்பாறையாய் நமக்குள் மலர வேண்டியது நேசம். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிதென்பது போல் அற்பமென்றாலும் அன்பைத் தருமென்றால் அம்முறையே நம் சகோதரர்களின் சுவாசமாக வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி),
நூல்:  முஸ்லிம்

கொள்கையில் ஒன்றான நாம் ஓர் உடலென்றால் நம் விரலே நம் கண்ணைக் குத்தலாகுமா? நம் பற்களே நமது நாவை பதம் பார்க்கலாமா? கூடாது. நம் உடலிற்குள் எந்த விஷக்கிருமியும் நுழைந்து விடக்கூடாது. நாமே நம்மை அழித்துக் கொள்ளக்கூடாது. நம் கிளைகள் முறிந்து விடக்கூடாது. இதுதான் நம் ஏகத்துவ மார்க்கத்தில் தலையாயது. இதோ நம் நேசர் விடையளிப்பதைப் பாருங்கள்.

மக்கள், "இஸ்லாத்தில் சிறந்தது எது, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்; அவரது செயலே சிறந்தது)'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா (ரலி),
நூல்: புகாரி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும்; அவர்கள் இருவரும் போரிட்டுக் கொள்வது (கொலை செய்வது) இறை நிராகரிப்பாகும்''

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி),
நூல்: புகாரி 48

யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். அது போல் கொள்கைக் குடும்பத்திற்குள்ளும் சில சறுகல்கள் தோன்றக்கூடும். அதில் நாம் சறுகிவிடக் கூடாது. நம் ஆணிவேரான கொள்கை அறுந்து விடக்கூடாது. நம் பிடிமானம் நம் கொள்கை உறவே. அதில் நம் பிடி தளர்ந்திடலாமா? தீயில் எரித்தாலும் உயிர் பெறும் ஃபீனிக்ஸ் என்பார்கள். அது கற்பனையென்றாலும் நம் கொள்கையுறவில் அது உண்மையாகட்டும்.

நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக் கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.

அல்குர்ஆன் 49:9,10

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் தம் (கொள்கைச்)  (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்திக்கும் போது (இவரைவிட்டு) அவரும், (அவரை விட்டு) இவரும் முகத்தைத் திருப்பிக் கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) இவ்விருவரில் சிறந்தவர் யாரெனில், யார் முகமனை (சலாமை) முதலில் தொடங்குகிறாரோ அவர் தான்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி), நூல்: முஸ்லிம் 5003

நம் ஏகத்துவப் பூந்தோட்டத்தை நாசமாக்கும் எந்தக் களைகளும் முளைத்து விடக்கூடாது. களைகள் வளர்ந்தால் நம் மலர்த்தோட்டமே மணமற்றுப் போய்விடும். இறையச்சம் எனும் உரம் தான் களைகளை வேரறுக்கும் பூச்சிக் கொல்லியாகும். நம் கொள்கைத் தோட்டத்தின் செழிப்பிற்கு அடிப்படையாய் இறையச்சம் திகழ வேண்டும். இதோ இறுதித்தூதின் இறைச் செய்தி இயம்புவதைப் பாருங்கள்.

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள். நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 49:11,12

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். "அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான் இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 5010

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவுமாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கை விட்டுவிடவுமாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபடுகின்றான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புகாரி 6951

நம் சகோதரன் நமக்கு அநீதி இழைத்தாலும் நாம் அவருக்கு உதவியே செய்ய வேண்டும். உதவி என்பது கொட்டக் கொட்ட குனிவதல்ல. மாறாக அநியாயக்காரனின் கரம் பிடித்து அவனை நம் வழிக்கு வரவழைப்பது தானே தவிர அவனைப் பகைப்பதல்ல. அது நம் நோக்கமுமல்ல.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்'' என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவனுக்கு நான் உதவி செய்வேன். (அது சரிதான்.) அக்கிரமக்காரனுக்கு எப்படி நான் உதவி செய்வேன்? கூறுங்கள்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், "அவனை அக்கிரமம் செய்ய விடாமல் நீ தடுப்பாயாக! இதுவே நீ அக்கிரமக்காரனுக்குச் செய்யும் உதவியாகும்'' என்றார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 6952

தியாகத் திருநாளின்போது உரையாற்றிய நம் இறுதித் தூதின் இறுதியுரையில் நாம் படிப்பினை பெறுவோம். இனிவரும் காலம் நம் வசந்த காலமாக வேண்டும். இனி தென்றல் தான் தவழ வேண்டும். நம் கொள்கைச் சகோதரர்கள் ஓர் உடலாக, ஒரு கூட்டுக் கிளிகளாக என்றும் வலம் வர சபதமேற்போம்.

(துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இது எந்த நாள்?'' என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். "இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா?'' என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்' என்றோம். அடுத்து "இது எந்த மாதம்?'' என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் "இது துல்ஹஜ் மாதமல்லவா?'' என்றார்கள். நாங்கள் "ஆம்' என்றோம். நபி (ஸல்) அவர்கள் "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம் மரியதைகளும் உங்களுக்குப் புனிதமானவையாகும்'' என்று கூறிவிட்டு, "(இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிடவேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மைவிட நன்கு புரிந்து நினைவில் கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும்'' என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
நூல்: புகாரி 67

Friday, April 27, 2018

சூனியத்தால் தாக்கம் உண்டா?

*சூனியத்தால் தாக்கம் உண்டா ?*

 சூனியத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்த முடியாது.சூனியக் காரர்கள் சில தந்திர வித்தைகளை காட்டி தனக்கு மந்திர வித்தைகள் தெரியும் என்று மக்களை ஏமாற்றி வருகின்றனர், புர சாதனங்கள் இன்றி எங்கோ இருக்கும் ஒருவன் இன்னொருவனுக்கு பாதிப்பை ஏற்பத்த முடியும் என்பது இஸ்லாமிய நம்பிக்கைக்கே மாற்றமானது என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் எடுத்தியம்பி வருகிறோம்.. இதற்கு சான்றாக ஏராளமான ஆதாரங்களை முன்வைத்த போதிலும் சூனியத்தை நம்பக்கூடியவர்கள் அதற்கு ஒரு புரட்டி வாதங்களை கற்பித்து மக்களை குழப்பி வருகின்றனர்...

*أحمد – (ج 45 / ص 477)*

*26212 – حدثنا أبو جعفر السويدي قال حدثنا أبو الربيع سليمان بن عتبة الدمشقي قال سمعت يونس بن ميسرة عن أبي إدريس عائذ الله عن أبي الدرداء عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة عاق ولا مؤمن بسحر ولا مدمن خمر ولا مكذب بقدر*

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*

*விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன் (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழைய மாட்டார்கள்.*

*அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)* 

*நூல் : அஹ்மது (26212)*

சூனியம் இல்லை என்பதற்கு இந்த நபிமொழியை நாம் சான்றாக காட்டினால்...

"அது இந்த ஹதீஸில் வரும் مؤمن بسحر என்கிற வார்த்தை சூனியம் செய்பவனைதான் குறிக்கிறது.. சூனியம் இருக்கிறது என்று நம்புவது பாவமல்ல, சூனியக்காரனை அணுகி அதை செய்தால் தான் பாவம் என்று ஒரு மேதாவித்தனமான வாதத்தை ஸலஃபுகள் என சொல்லிக்கொள்வோர் முன்வைக்கின்றனர்.. 

முஃமின் பிஸிஹ்ர் என்ற வார்த்தையை விளங்கிக் கொள்ள ஒரு எளிமையான உதாரணம் கூறுகிறேன்.

"ஆமன்த்து பில்லாஹ்" என்ற வார்த்தையை சிறுவயதிலிருந்து அதிகம் உச்சரித்து இருப்போம். "அல்லாஹ்வை நம்பினேன்" என்று பொருள்."ஆமன "آمن" - நம்பிக்கைக் கொண்டான் என்பதன் பெயர்ச் சொல் வடிவம் தான் முஃமின். முஃமின் என்பதற்கு நம்பிக்கைக் கொண்டவன் என்று பொருள் என்பதை அறிந்திருப்பீர்கள்.

ஆமன்த்து பில்லாஹ் - அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன் அல்லது முஃமின் பில்லாஹ் - அல்லாஹ்வை நம்பியவன் என்றால், அல்லாஹ் இருக்கிறான், அவனுக்கு அனைத்து ஆற்றலும் உள்ளது, என அல்லாஹ்வை குறித்த நம்பிக்கை அனைத்தும் அதில் அடங்கும்.

இப்போது முஃமின் பிஸிஹ்ர் என்பதற்கு என்ன அர்த்தம் வைப்பீர்கள் ???

முஃமின் பிஸிஹ்ர் சூனியத்தை நம்பியவன் என்றால் சூனியம் இருக்கிறது, அதற்கு புறசாதனங்களின்றி தாக்கம் ஏற்படுத்தும் ஆற்றல் இருக்கிறது என அவை குறித்த அனைத்து நம்பிக்கையும் அதில் அடங்கும் என்பதுதானே சரியான அர்த்தம். இத்தகைய நம்பிக்கை வந்தாலே அது வழிகேடு தானே.. பிறகென்ன சூனியம் செய்தால் தான் பாவம், நம்பினால் பாவமல்ல என்கிற வாதம்..!!

அல்லாஹ்வுக்கு இணையாக ஒருவன் அல்லது ஒன்று இருக்கிறது என நம்பினால் பாவமல்ல, இணைவைத்தால் தான் பாவம் என்று சொல்வதுபோல் உள்ளது உங்களின் வாதம்.

இப்போது யார் தவறான அர்த்தம் வைக்கிறார், யார் ஆதாரமின்றி தர்க்கத்தின் அடிப்படையில் போராடுகிறார் என புரிகிறதா ? 

மேலும் ஒருப்பேச்சுக்கு இந்த ஹதீஸை இவர்களின் தவறான வாதப்படியே எடுத்துக் கொண்டாலும் சூனியம் பொய் வித்தை என்பதற்கு இதை மட்டுமே நாம் ஆதாரமாக காட்டவில்லையே.. இதைவிட தெளிவான இறைவசனங்கள் சான்றாக உள்ளனவே...

உதாரணத்திற்கு இரண்டை குறிப்பிடுகிறேன்..

*فَأَلْقَى مُوسَى عَصَاهُ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ* 

*உடனே மூஸா தமது கைத்தடியைப் போட்டார். அவர்கள் "பொய்யாக செய்தவற்றை" அது விழுங்கி விட்டது.*

*திருக்குர்ஆன் 26:45*

*وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ* 

*உமது கைத்தடியைப் போடுவீராக!” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த "வித்தையை" விழுங்கியது.* 

*திருக்குர்ஆன் 7:117*

இதுபோன்ற வசனங்களை குறிப்பிட்டால் பிஜெ மொழிபெயர்ப்பில் தனக்கு சாதகமாக மாற்றிவிட்டார், சூனியம் என மொழிபெயர்க்க வேண்டிய இடங்களில் பொய் வித்தை, வித்தை என்று மொழிபெயர்த்துள்ளார் எனக் கூறுவீர்கள்.. ஆனால் 26:45 வசனத்திற்கு IFT மொழிபெயர்ப்பில் கூட *يأفكون* என்ற வார்த்தைக்கு பொய்யான வித்தை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது..

குர்ஆனிலும் இந்த *يأفكون* என்கிற வார்த்தை வேறுசில வசனங்களிலும் திசை திருப்புதல் என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. அகராதியிலும் *يأفكون* என்ற வார்த்தைக்கு பொய், திசை திருப்புதல் போன்ற அர்த்தங்களுக்கு இணையான சொல்லாகவே குறிப்பிடப் பட்டுள்ளது.. 

ஆனால் இக்பால் மதனியின் தவறான மொழிபெயர்ப்பை எடுத்து வைத்துக் கொண்டு ஆய்வு செய்யாமல் பேசுவதல்திலிருந்து சஃலபு கூட்டம் கண்மூடித்தனமாக அவரை தக்லீது செய்கிறது என்பதை விளங்களாம்..

இது எல்லாம் அறிந்த பின்னும் பிஜெ குர்ஆன் மொழிபெயர்ப்பை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் என்று கூறினால், மக்கள் விளங்கிக் கொள்வார்கள் யார் பொய்யர்கள் என்று.

சூனியம் அற்புதம் மாயஜால மண்ணாங்கட்டியெல்லாம் ஒன்றுமில்லை . மேஜிக் போன்ற கண்கட்டி தந்திரை வித்தை மட்டுமே என்பதற்கு ஏராளமான சான்றுகள் இதுபோல் உள்ளன.

*அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.*

*திருக்குர்ஆன் 39:9*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*திருநறையூர் நாச்சியார்கோயில் கிளை*

Thursday, April 26, 2018

பராஅத்தும் மத்ஹபுகளும்

பராஅத்தும் மத்ஹபுகளும்

நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.

இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)

மற்றொரு ஹதீஸில் வருகிறது
நபி (ஸல்) அவர்கள் : ” என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.” என்று கூறினார்கள். மக்கள் ” அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்.” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ரலி) நூல் : புகாரி (7280)

நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களை நன்மை என்று எண்ணி நாம் செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அவ்வாறு செய்பவர்கள் நபியவர்களுக்கு மாறுசெய்தவர்கள், நரகவாசிகள் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

அன்பிற்குரிய பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் ” பராஅத் இரவு” என்ற பெயரில் மூன்று யாசீன்கள் ஓதுகிறீர்களே இவ்வாறு நபி (ஸல்) செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸாவது இருக்கின்றதா? அல்லது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா? அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா? நிச்சயமாக ஒருபோதும் அவ்வாறு உங்களால் கூறமுடியாது. வேறு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்,

மேலும் ”பராஅத் இரவு” என்பதற்கு அரபியில் ”லைலத்துல் பராஅத்” என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் இப்படி வார்த்தையைக் கூட கூறியது கிடையாது. இவையெல்லாம் நபியவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட வழிகேடுகளாகும்.

மேலும் பிறை பதினைந்தாம் நாள் அன்று மட்டும் சிறப்பாக நீங்கள் ” பராஅத் நோன்பு” என்று வைக்கிறீர்களே இதையாவது நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்று உங்களால் , காட்ட முடியுமா?நிச்சயமாக முடியாது . மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிர வேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இவ்வாறு நீங்கள் ஏற்றுள்ள மத்ஹப நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்

وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273)

ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)

மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.

ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)

ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )

فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)

(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )

وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)

பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)

அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம் பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது . பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து