பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, September 29, 2017

சூனியத்தை உண்மை என்று நம்பலாமா

*சூனியத்தை உண்மை என்று நம்பலாமா? – ஹதீஸ் ஆய்வு.*

சில மார்க்க அறிஞர்கள் குர்ஆன் ஹதீஸை சரியான முறையில் அனுகாத காரணத்தால் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுகின்றார்கள். இதனால் மக்கள் குழம்பும் நிலைக்கு ஆளாகின்றார்கள்.

இதுபோன்ற நேரங்களில் மக்களுக்கு தெளிவு கிடைக்க இவர்களின் குழப்பத்தை தெளிவுபடுத்துவது நம் மீது கடமை. நாம் தெளிவுபடுத்திய பிறகு பெரும்பாலும் அறிஞர்கள் என்று தங்களை கூறிக்கொள்பவர்கள் தெளிவடைந்த வரலாறு இல்லை. ஆனால் மக்கள் தெளிவடைந்து இவர்களின் குழப்பத்திலிருந்து மீண்டு விடுகின்றனர்.

தற்போது சூனியம் விசயத்தில் நமது நிலைபாட்டைச் சிலர் அறைகுறையான ஆய்வோடு விமர்சனம் செய்து வருகின்றனர். இப்படி அறைகுறையாக செய்யப்பட்ட விமர்சனங்களில் ஒரு விமர்சனத்தைப் பற்றி பார்க்கப் போகின்றோம்.

சூனியம் விசயத்தில் நாம் நமது நிலைபாட்டை நிரூபிப்பதற்கு பலவீனமான ஹதீஸை ஆதாரமாக்க் காட்டுவதாக நம்மீது இலங்கையச் சார்ந்த சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இதை நாம் படித்தபோது இந்தக் குற்றச்சாட்டு அவர்களின் அறைகுறை ஆய்வினால் ஏற்பட்ட விளைவு என்பதை தெள்ளத் தெளிவாக அறிய முடிந்தது.

சூனியத்தில் உண்மை இல்லை. அது ஒரு கண்கட்டி வித்தை தான் என்று குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது. மேலும் சூனியத்தை உண்மை என்று நம்பக்கூடாது என்பதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஒரு நபிமொழியையும் நாம் கூறியிருந்தோம்.

حدثنا علي بن عبد الله حدثنا المعتمر بن سليمان قال قرأت على الفضيل بن ميسرة عن حديث أبي حريز أن أبا بردة حدثه عن حديث أبي موسى أن النبي صلى الله عليه وسلم قال ثلاثة لا يدخلون الجنة مدمن خمر وقاطع رحم ومصدق بالسحر ومن مات مدمنا للخمر سقاه الله عز وجل من نهر الغوطة قيل وما نهر الغوطة قال نهر يجري من فروج المومسات يؤذي أهل النار ريح فروجهم

நிரந்தரமாக மது அருந்துபவன், உறவுகளைப் பேணாதவன், சூனியத்தை உண்மை என்று நம்பியவன் ஆகிய மூவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி), நூல்: அஹ்மத் 18748

அபூ மூசா (ரலி) அவர்களின் வழியாக அறிவிக்கப்படும் இந்த செய்தி பலவீனமான செய்தி. இதில் அபூ ஹரீஸ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரை அறிஞர்கள் பலவீனமானவர் என்று குறைகூறியுள்ளனர். இப்படிப்பட்ட பலவீனமான செய்தியை ஆதாரமாகக் காட்டலாமா? என்று நம்மிடம் கேட்கின்றனர்.

மேலும் இந்தச் செய்தி அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டு அஹ்மதில் பதிவாகியுள்ளது.

حدثنا معاوية بن عمرو حدثنا أبو إسحاق عن الأعمش عن سعد الطائي عن عطية بن سعد عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة صاحب خمس مدمن خمر ولا مؤمن بسحر ولا قاطع رحم ولا كاهن ولا منان

இந்த அறிவிப்பில் வரும் அதிய்யா பின் சஅத் என்பவர் இடம்பெறுகின்றார். இவர்  பலவீனமானவர் என்பதால் இதுவும் ஆதாராமாகாது என்று வாதிடுகின்றனர்.

ஆதாரப்பூர்வமான அறிவிப்பு.

இவர்கள் கூறுவது போல் இந்தச் செய்தி இவ்விரண்டு வழிகளில் மாத்திரம் அறிவிக்கப்பட்டு வேறு ஆதாரப்பூர்வமான வழியில் வரவில்லை என்றால் இது பலவீனமான செய்தி என்று முடிவெடுக்கலாம். ஆனால் உண்மை நிலை அவ்வாறு இல்லை.

அபூ சயீத் (ரலி) அபூ மூசா (ரலி) ஆகிய இருவர் வழியாக மட்டுமே இந்தச் செய்தி வந்துள்ளதாக இவர்கள் கருதியது தான் இந்தத் தவறான முடிவுக்குக் காரணம்.

அபுத்தர்தா (ரலி) அவர்களின் வழியாகவும் இந்தக் கருத்தில் ஒரு அறிவிப்பு அஹ்மதில் பதிவாகியுள்ளது. இது ஆதாரப்பூர்வமானதாகும். இதை இவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.

مسند أحمد – (ج 45 / ص 477)

26212 – حدثنا أبو جعفر السويدي قال حدثنا أبو الربيع سليمان بن عتبة الدمشقي قال سمعت يونس بن ميسرة عن أبي إدريس عائذ الله عن أبي الدرداء عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة عاق ولا مؤمن بسحر ولا مدمن خمر ولا مكذب بقدر

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன் (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி), நூல் : அஹ்மது (26212)

இது ஆதாரப்பூர்வமான அறிவிப்பாகும். இதில் இடம்பெறும் நபர்கள் அனைவரும் நம்பகமானவர்கள்.

இதில் சுலைமான் பின் உத்பா திமஸ்கீ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைக் குறித்து சில அறிஞர்கள் குறைகூறி விமர்சனம் செய்துள்ளனர். எனவே இவரைப் பற்றி சற்று விரிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

சுலைமான் பின் உத்பா திமஸ்கீ.

இவர் நம்பகமானவர் என்று பலர் நற்சான்று அளித்துள்ளனர். துஹைம் என்பாரும் அபூ முஸ்ஹிர் என்பாரும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார்.

மேலும் ஹைசம் பின் காரிஜா, ஹிசாம் பின் அம்மார், இப்னு ஹிப்பான் ஆகியோரும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.

அபூஹாதிம் அவர்கள் இவரால் பிரச்சனையில்லை. திமஸ்க்வாசிகளிடத்தில் இவர் மதிக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்கள்.

இமாம் அஹ்மது பின் ஹம்பள் அவர்கள் இவரைப் பற்றி எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். எனவே இதை ஒரு குறையாக எடுத்துக் கொள்ள முடியாது.

மொத்தத்தில் யஹ்யா பின் மயீன் ஸாலிஹ் பின் முஹம்மது ஆகிய இருவர் மட்டுமே இவர் விசயத்தில் குறை கூறியுள்ளனர்.

யஹ்யா பின் மயீன் அவர்கள் இவர் எதுவாகவும் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் குறைக்கான காரணத்தை அவர் தெளிவுபடுத்தவில்லை. எனவே இவருடைய விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்டு சுலைமான் பின் உத்பாவை பலவீனமானவர் என்று முடிவு செய்ய முடியாது.

ஸாலிஹ் பின் முஹம்மது என்பவர் சுலைமான் பின் உத்பா சில பிழையான தகவல்களை அறிவித்துள்ளார் என்று குறைகூறியுள்ளார். இதன் காரணத்தாலும் இவர் பலவீனமானவராக மாட்டார்.

எத்தனையோ நம்பகமானவர்கள் சில ஹதீஸ்களில் தவறு செய்து அதைப் பிழையாக அறிவித்துள்ளனர். இந்தப் பிழை சிறிய அளவில் இருந்தால் பிரச்சனையில்லை. கணக்கின்றி அதிகமாகும் போதே அறிவிப்பாளர் பலவீனமானவராகி விடுவார்.

எனவே தான் இப்னு ஹஜர் அவர்களும் தஹபீ அவர்களும் இவரை பலவீனமானவர் என்று கூறவில்லை. அறிஞர்களின் ஒட்டுமொத்த கருத்தையும் கவனித்து முடிவைக் கூறும் இவ்விரு இமாம்களும் இவரை சதூக் (நேர்மையானவர்) என்றே கூறியுள்ளனர்.

அபூசுர்ஆ, அவர்கள் அபூ மிஸ்ஹிர் அவர்களிடம் சுலைமான் பின் உத்பா குறித்து விசாரித்தார். அதற்கு அபூ மிஸ்ஹிர் இவர் நம்பகமானவர் என்று கூறினார். இவர் அபுத்தர்தா (ரலி) அவர்களின் வழியாக சில செய்திகளை அறிவித்துள்ளாரே என்று அபூ சுர்ஆ கேட்ட போது அவை சிறிய அளவில் உள்ளது. இவர் நம்பகமானவர் தான். ஆட்சியாளருடன் சேர்ந்து கொண்டதைத் தவிர இவரிடம் வேறு எந்த குறையும் இல்லை என அபூ மிஸ்ஹிர் பதிலளித்தார்.

(தஹ்தீபுல் கமால்)

நாம் தற்போது ஆதாரமாகக் காட்டியுள்ள அறிவிப்பு அபுத்தர்தா (ரலி) அவர்களின் வழியாக இவர் அறிவிக்கும் அறிவிப்பாகும். இவ்வாறு அபுத்தர்தா வழியாக இவர் அறிவிக்கும் அறிவிப்புகளை அபூ மிஸ்ஹிர் குறை கூறவில்லை. மாறாக நம்பகமானவர். எந்தக் குறையும் இவரிடத்தில் இல்லை என்று கூறி ஏற்றுக் கொள்கிறார்கள்.

கடினப்போக்குள்ளவர் என்று அறியப்பட்ட இமாம் அபூஹாதிம் அவர்கள் கூட இவரை பலவீனமானவர் என்று கூறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

எனவே அபுத்தர்தா (ரலி) அவர்களின் வழியாக அறிவிக்கப்படும் இந்த அறிவிப்பு சரியாக இருப்பதால் சூனியத்தை உண்மை என்று நம்புபவன் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்ற ஹதீஸ் ஏற்றுக் கொள்ளதக்கதாகும்.

குர்ஆனை மறுக்க முடியுமா?

நாம் சுட்டிக்காட்டிய ஹதீஸ் சூனியத்தை உண்மை என்று நம்பக்கூடாது எனக் கூறுகின்றது. இது அவர்களின் நிலைபாட்டிற்கு எதிராக உள்ளது.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள் குறித்து விமர்சனம் செய்ய வாய்ப்பு இருந்ததால் இதனடிப்படையில் இந்த ஹதீஸை விமர்சனம் செய்தால் இந்த ஹதீஸ் பலவீனமாகிவிடும். சூனியத்தை உண்மை என்று நம்பக்கூடாது என்ற கருத்து தவறான கருத்தாக ஆகிவிடும் என்று நினைத்து இந்த ஹதீஸை பலவீனமானது என்று கூறியுள்ளனர்.

ஒரு பேச்சிற்கு இந்த ஹதீஸ் பலவீனமானது என்ற இவர்களின் வாதத்தை ஒப்புக் கொண்டாலும் இதனால் நம்முடைய நிலைபாட்டிற்கு எந்தப் பாதிப்பும் வராது. சூனியத்தை உண்மை என்று நம்பக்கூடாது என்ற கருத்து ஆதாரமற்ற கருத்து என்றும் சொல்ல முடியாது.

ஏனென்றால் சூனியத்தை உண்மை என்று நம்பக்கூடாது என்ற நமது கூற்றுக்கு ஹதீஸை விட வலுவான ஆதாரமாக திகழும் குர்ஆன் வசனங்கள் நமக்கு மிகப்பெரிய ஆதாரங்களாக அமைந்துள்ளன. இதை இவர்களால் மறுக்க முடியுமா என்ன?

சூனியம் என்பது ஒரு பித்தலாட்டம்

சூனியம் என்றொரு கலை இருக்கின்றது என்பதை நாம் மறுக்கவில்லை. அப்படி ஒரு கலை இருப்பதாகவே குர்ஆனும் நபிமொழியும் கூறுகிறது. ஆனால் அந்தக் கலையால் எத்தகைய பாதிப்புகளை செய்ய முடியும் என்பதில் தான் பலர் தவறு செய்கின்றனர். சூனியத்தால் பிறரது கை கால்களை முடக்க முடியும். பிறருக்கு பைத்தியத்தை ஏற்படுத்த முடியும். மன அமைதியை குலைக்க முடியும் என்று நம்புகின்றனர். சுருங்கச் சொல்வதென்றால் சூனியக்காரன் தனக்கு எந்தெந்த ஆற்றல்கள் இருப்பதாகக் கூறுகின்றானோ அவையனைத்தும் அவனுக்கு இருப்பதாகவே நம்புகின்றனர்.

சூனியத்தை இவ்வாறு நம்புவது மார்க்கத்திற்கு முரணான நம்பிக்கையாகும். தந்திரங்களைச் செய்து பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது தான் சூனியக்காரனின் சூழ்ச்சியாகும். உதாரணமாக தற்காலத்தில் போலிச் சாமியார்கள் அற்புதங்கள் செய்வதாகக் கூறி தந்திர வித்தைகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் உண்மையில் இவர்கள் அற்புதம் செய்யவில்லை. கண்கட்டி வித்தையைச் செய்து அற்புதம் செய்வது போல் மக்களை நம்ப வைக்கின்றனர். இந்த பித்தலாட்ட வேலையே சூனியமாகும்.

ஒரு மேஜிக்காரன் என்ன செய்வானோ அதையே இந்த சூனியக்காரர்கள் செய்வார்கள். மேஜிக்காரனோ தான் செய்தது உண்மையல்ல. அது தந்திரம் என்று கூறுவான். ஆனால் இந்த சூனியக்காரர்களோ தாங்கள் செய்தது மந்திர சக்தி மறைமுகமான ஆற்றல் என்று பொய் கூறுவர்.

அறிவாளிகள் இவர்களின் மோசடி வேலையைக் கண்பிடித்து விடுவார்கள். இவர்கள் பொய்யர்கள் என்பதை உறுதியாக நம்புவார்கள். விபரமற்ற பாமரர்கள் இவர்களின் மாயவலையில் விழுந்து இந்தப் பொய்யர்களை உண்மையாளர்கள் என்று நம்புவார்கள்.

சூனியத்தால் அடுத்தவரின் கை கால்களை முடக்க முடியும் உடலில் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று குர்ஆனோ நபிமொழியோ கூறவில்லை. மாறாக இவ்வாறெல்லாம் தங்களால் செய்ய முடியும் என்று பொய்யர்களான சூனியக்காரர்களே கூறுகின்றனர். இதை விபரமற்றவர்கள் உண்மை என்று நம்புகின்றனர்.

திருக்குர்ஆனிலும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் இது பற்றி கூறப்படுவது என்ன என்று நாம் ஆராயும் போது மக்களை ஏமாற்றுவதற்காகவும் கவர்வதற்காகவும் செய்து காட்டப்படும் தந்திர வித்தைகள் தான் சூனியம். உண்மையில் சூனியம் மூலமாக எந்த அதிசயமும் நிகழ்வதில்லை என்பதை அறியலாம்.

சூனியம் என்பதற்கு அரபுமொழியில் “ஸிஹ்ர்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இந்தச் சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரண்டிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்ட பகுதிகளை நாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்தால் ஸிஹ்ர் என்பதற்குப் பித்தலாட்டம், மோசடி, பொய் ஏமாற்றும் தந்திர வித்தை கண்கட்டி வித்தை என்பது தான் பொருள் என்பதைச் சந்தேகமின்றி அறிந்து கொள்ளலாம்.

சூனியம் என்பது ஒரு பொய்.

பொய் சொல்லுவதே சூனியக்காரனின் தன்மை. அவன் கூறுவதும் செய்வதும் பொய்யாகவே இருக்கும் என்று இறைமறுப்பாளர்கள் கருதிவந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது.

وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآَيَاتِنَا وَسُلْطَانٍ مُبِينٍ (23) إِلَى فِرْعَوْنَ وََامَانَ وَقَارُونَ فَقَالُوا سَاحِرٌ كَذَّابٌ (24) 40

மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். “பெரும் பொய்யரான சூனியக்காரர்” என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன் (40 : 24)

وَعَجِبُوا أَنْ جَاءَهُمْ مُنْذِرٌ مِنْهُمْ وَقَالَ الْكَافِرُونَ هَذَا سَاحِرٌ كَذَّابٌ(4)38

அவர்களிலிருந்தே எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததில் ஆச்சரியப்பட்டனர். “இவர் பெரும் பொய்யரான சூனியக்காரர்” என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறினர். (அல்குர்ஆன் (38 : 4)

சூனியம் என்றால் அது பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்தது என்ற கருத்திலே இந்த வார்த்தை குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது

فَلَمَّا جَاءَهُمْ مُوسَى بِآيَاتِنَا بَيِّنَاتٍ قَالُوا مَا هَذَا إِلَّا سِحْرٌ مُفْتَرًى وَمَا سَمِعْنَا بِهَذَا فِي آبَائِنَا الْأَوَّلِينَ(36)28

மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது இது இட்டுக்கட்டப்பட்ட சூனியம் தவிர வேறில்லை. இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை என்றனர்.

அல்குர்ஆன் (28 : 36)

هَذِهِ النَّارُ الَّتِي كُنتُمْ بِهَا تُكَذِّبُونَ(14)أَفَسِحْرٌ هَذَا أَمْ أَنْتُمْ لَا تُبْصِرُونَ(15)اصْلَوْهَا فَاصْبِرُوا أَوْ لَا تَصْبِرُوا سَوَاءٌ عَلَيْكُمْ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ(16)52

அந்நாளில் அவர்கள் நரகில் ஒரேயடியாகத் தள்ளப்படுவார்கள். நீங்கள் பொய்யெனக் கருதிக்கொண்டிருந்த நரகம் இதுவே. இது சூனியமா? அல்லது நீங்கள் பார்க்காதவர்களா? “இதில் கருகுங்கள்! (இதைச்) சகித்துக் கொள்ளுங்கள்! அல்லது சகிக்க முடியாமல் இருங்கள்! (இரண்டும்) உங்களுக்குச் சமமே. நீங்கள் செய்து கொண்டிருந்ததற்கே கூலி கொடுக்கப் படுகின்றீர்கள்” (எனக் கூறப்படும்). (அல்குர்ஆன் (52 : 13)

மேற்கண்ட வசனத்தில் கூறப்படும் நரகவாசிகள் இந்த உலகத்தில் வாழும் போது நரகவாழ்வு பொய் என கருதிக்கொண்டிருந்தனர். நரகத்தை அவர்கள் சிஹ்ர் அதாவது சூனியம் என்று கூறி மறுத்துள்ளார்கள். எனவே சிஹ்ர் என்றால் பொய் கற்பனை என்பதே அதன் அர்த்தம்.

சூனியம் என்பது ஒரு கண்கட்டி வித்தை.

கண்கட்டி வித்தை என்ற பொருளிலும் சிஹ்ர் என்ற வார்த்தை குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

وَلَوْ فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا مِنْ السَّمَاءِ فَظَلُّوا فِيهِ يَعْرُجُونَ(14)لَقَالُوا إِنَّمَا سُكِّرَتْ أَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَسْحُورُونَ(15)15

அவர்களுக்காக வானத்தில் ஒரு வாசலை நாம் திறந்து விட்டு, அதன் வழியாக அவர்கள் மேலேறிச் சென்றாலும், “எங்கள் பார்வைகள் மயக்கப்பட்டு விட்டன. இல்லை நாங்கள் சூனியம் செய்யப்பட்ட கூட்டமாகி விட்டோம்” என்றே கூறுவார்கள்.

மக்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கு, தம்மை இறைத் தூதர்கள் என்று நிரூபிக்க சில அற்புதங்களை இறைவன் வழங்கினான். உதாரணமாக மூஸா நபியவர்கள் இறைவனின் கட்டளைப்படி தமது கைத்தடியைக் கீழே போட்டவுடன் அது சீறும் பாம்பாக உருமாறியது. கைத்தடி பாம்பாக உருமாறிய நிலையில் அதைத் தொட்டுப் பார்த்தாலும் எந்த வகையான சோதனைக்கு உட்படுத்தினாலும் அது பாம்பு தான் என்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகும். இது தான் அற்புதமாகும்.

கைத்தடி பாம்பு போல் தோற்றமளித்து, அதைத் தொட்டுப் பார்த்தாலோ அல்லது சோதனைக்கு உட்படுத்தினாலோ அது கைத்தடியாகவே இருந்தால் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து அது தந்திர வித்தை மேஜிக் என்று கூறுவோம். இறைத் தூதர்கள் செய்து காட்டியது முதல் வகையானது. அதில் எந்த விதமான தில்லுமுல்லும் ஏமாற்றுதலும் கிடையாது.

ஆனாலும் இறைத் தூதர்கள் தமது தூதுத்துவத்தை நிரூபிக்கும் வகையில் அற்புதங்களைச் செய்துகாட்டிய போது அதனை அந்த மக்கள் அற்புதம் என்று நம்பவில்லை. மாறாக இவர் நமக்குத் தெரியாதவாறு தந்திரம் செய்கிறார். நம்மை ஏமாற்றுகிறார் என்று அவர்கள் நினைத்தனர். இதைக் குறிப்பிட ஸிஹ்ர் (சூனியம்) என்ற சொல்லையே பயன்படுத்தினர்.

ஸிஹ்ர் என்பதற்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட அற்புதம் என்பது பொருள் என்றால் இறைத் தூதர்களை நிராகரிப்பதற்கு ஸிஹ்ர் என்ற காரணத்தைக் கூறியிருக்க மாட்டார்கள். இவர் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. தந்திரம் செய்து நம்மை ஏமாற்றப் பார்க்கிறார். நடக்காததை நடந்தது போல் நம்ப வைக்கிறார் என்ற கருத்தை உள்ளடக்கித் தான் நபிமார்களின் அற்புதங்களை ஸிஹ்ர் (சூனியம்) என்று கூறி நிராகரித்தனர்.

இறைத்தூதர்கள் செய்து காட்டிய அற்புதங்கள்.

இறைத்தூதராக அனுப்பப்பட்டவர்களுக்கு அற்புதங்களை அல்லாஹ் வழங்கியிருந்தான். அவற்றை ஏற்க மறுத்தவர்கள் அதை ஸிஹ்ர் (சூனியம்) என்று கூறியே மறுத்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது.

அப்போது அவர் தமது கைத் தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது. “இவர் தேர்ந்த சூனியக்காரராக (ஸிஹ்ர் செய்பவராக) உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?” என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 7:107

“மக்களை எச்சரிப்பீராக” என்றும், “நம்பிக்கை கொண்டோருக்குத் தம் இறைவனிடம் அவர்கள் செய்த நற்செயல் (அதற்கான கூலி) உண்டு என நற்செய்தி கூறுவீராக” என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? “இவர் தேர்ந்த சூனியக்காரர்” (ஸிஹ்ர் செய்பவர்) என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 10:2)

5:110, 6:7, 7:116, 10:75, 20:66, 20:69, 21:3, 26:31, 28:36, 28:48, 34:43, 37:14, 38:4, 40:23, 43:30, 46:7, 61:6 ஆகிய வசனங்களிலும் ஸிஹ்ர் என்ற வார்த்தை தந்திரம் என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சூனியத்தை தெளிவாக விவரிக்கும் நிகழ்வு

சூனியம் என்றால் என்ன? சூனியத்தால் அதிகபட்சமாக என்ன செய்ய முடியும்? என்பதை தெள்ளத் தெளிவாக மூசா (அலை) அவர்களின் சம்பவம் எடுத்துரைக்கின்றது.

மூசா (அலை) அவர்களின் காலத்தில் சூனியக் கலை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக இருந்தது. இக்கலையில் பாண்டித்துவம் பெற்ற எத்தனையோ பேர் இக்கலையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சமுதாயத்தில் மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அனுமதியுடன் அற்புதங்களை செய்துகாட்டிய போது அதை அற்புதம் என்று எதிரிகள் நம்ப மறுத்தனர். மூசா செய்வது தந்திர வித்தை தான் அதாவது சூனியம் தான் என நம்பினர். ஃபிர்அவ்னுடன் இருந்த சூனியக்காரர்களும் முசா நம்மைப் போன்ற ஒரு சூனியக்காரர் என்றே நம்பினர்.

எனவே சூனியக் கலையில் மூசா நபியை தங்களால் வென்றுவிட முடியும் என நம்பினர். மூசா (அலை) அவர்களை போட்டிக்கு அலைத்தனர். இந்தப் போட்டியில் சூனியக்கலையில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த அத்தனை சூனியக்காரர்களும் அழைக்கப்பட்டனர்.

وَقَالَ فِرْعَوْنُ ائْتُونِي بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ(79)10

“திறமையான ஒவ்வொரு சூனியக் காரனையும் என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று ஃபிர்அவ்ன் கூறினான்.

அல்குர்ஆன் (10 : 79)

يَأْتُوكَ بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ(112)7

“இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! (சூனியக்காரர்களைத்) திரட்டி வருவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்புவீராக! அவர்கள் தேர்ந்த சூனியக்காரர் ஒவ்வொருவரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்றும் (ஃபிர்அவ்னிடம்) கூறினர். (அல்குர்ஆன் (7 : 111)

உலத்தில் உள்ள திறமையுள்ள அனைத்து சூனியக்காரர்களும் மூசா (அலை) அவர்களுக்கு எதிராக ஒன்று திரள்கிறார்கள். இவ்வாறு திரண்ட இவர்களால் மூசா (அலை) அவர்களுக்கு பைத்தியமாக்கவோ அவர்களது கை கால்களை முடக்கவோ முடியவில்லை. மாறாக போலி வித்தையைத் தான் செய்ய முடிந்தது.

قَالَ أَلْقُوا فَلَمَّا أَلْقَوْا سَحَرُوا أَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوهُمْ وَجَاءُوا بِسِحْرٍ عَظِيمٍ(116)7

“மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?” என்று கேட்டனர். “நீங்களே போடுங்கள்!” என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தை களைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.

“உமது கைத்தடியைப் போடுவீராக!” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின. அங்கே அவர்கள் தோற்கடிக்கப் பட்டனர்; சிறுமையடைந்தனர்.

சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். “அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்” என்றும் கூறினர். (அல்குர்ஆன் (7 : 115)

قَالَ بَلْ أَلْقُوا فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى(66)20

“இல்லை! நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. (அல்குர்ஆன் (20 : 66)

சூனியக்காரர்கள் கயிறுகளையும் கைத்தடிகளையும் பாம்பாக மாற்றிக்காட்டவில்லை. மாறாக சீறுவது போல் ஒரு பொய்யான தோற்றத்தையே ஏற்படுத்தினர். இதைத் தான் பிரம்மாண்டமான சூனியம் என்று அல்லாஹ் வர்ணிக்கிறான்.

இன்றைக்கு இதையெல்லாம் விட பன்மடங்கு விஞ்சும் வகையில் மேஜிக்காரர்கள் வியத்தகு வித்தைகளை செய்து வருகின்றனர். எனவே சூனியம் என்பது சாதாரண கண்கட்டி வித்தையாகும் என்பதை இந்த சம்பவம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

சூனியம் என்பது ஒரு சூழ்ச்சி.

மூசா நபிக்கு எதிராக சூனியக்காரர்கள் செய்தது பொய்யானது என்றும் அது வெறும் சூழ்ச்சி தான் என்றும் அல்லாஹ் கூறுவதை கவனித்தால் சூனியத்தை உண்மை என்று நம்பக்கூடாது என்பதை தெளிவாக அறியலாம்.

{فَأَلْقَى مُوسَى عَصَاهُ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ (45)26

உடனே மூஸா தமது கைத்தடியைப் போட்டார். அவர்கள் பொய்யாக செய்தவற்றை அது விழுங்கி விட்டது.

அல்குர்ஆன் (26 : 45)

{ وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ (117)7

“உமது கைத்தடியைப் போடுவீராக!” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. (அல்குர்ஆன் (7 : 117)

{وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى (69) 20

“உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்.) (அல்குர்ஆன் (20 : 69)

ஆகையால் சூனியத்தை உண்மை என்று நம்பக்கூடாது என்ற கருத்தை குர்ஆன் பல இடங்களில் ஒளிவு மறைவில்லாமல் கூறுகின்றது. இது மறுக்கமுடியாத உண்மையாகும்.

எனவே தற்போது நாம் சுட்டிக்காட்டிய ஹதீஸை பலவீனமானதா? சரியானதா? என்பது முக்கியமான விசயமல்ல. ஒரு பேச்சுக்கு அது பலவீனமான செய்தி தான் என்று ஏற்றுக்கொண்டாலும் மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள குர்ஆன் வசனங்கள் இவர்களுக்கு எதிரான ஆதாரங்களாக உள்ளது. இதற்கு இவர்கள் பதிலளிப்பது கடமை.

அல்லாஹ் நன்கறிந்தவன்.

No comments:

Post a Comment