- அரசியல் ஓர் சாக்கடை
தொட முடியாத அருவெருப்பும்
அணுக முடியா துர்நாற்றமும்
தேள்களும்
பல்லிகளும்
விஷபூச்சிகளும்
எலிகளும்
பெருச்சாளிகளும்
நிறைந்த அரசியல் சாக்கடை.
இதை சுத்தம் செய்யப் போகிறோம் என்று போனவர்கள் அதிலேயே குடியிருக்கக் கற்றுக் கொண்டார்கள்.
நீதி, நேர்மை, நாணயம், சுயமரியாதை அனைத்தையும் இழந்து பணத்தையும், பதவியை மட்டும் தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
பதவி என்பது தோளில் போடும் துண்டு, மானம் என்பது இடுப்பில் கட்டும் துண்டு என்பார்கள். ஆனால் அரசியல்வாதிகளுக்கு மானம் என்பது தோளில் போடும் துண்டைப் போன்றது. உதறிவிட்டுப் போய் விடுவார்கள். ஆனால் பதவி என்பது இடுப்பில் கட்டும் துண்டைப் போன்று ஒரு போதும் இழந்துவிடத் துணிய மாட்டார்கள்.
எவ்வளவு கேவலம் வந்தாலும் சரி, பதவியும், பணமும் வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்பவர்கள்.
கொள்கை என்றால் என்ன விலை என்று கேட்பார்கள். நேற்று காரி உமிந்தவர்களுடன் இன்று காரில் இணைந்து போவார்கள். கேட்டால் அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தரப் பகைவனும் கிடையாது என்று அருவருக்கத்தக்க பழமொழியைச் சொல்வார்கள்.
இது பொதுவான அரசியல்வாதிகளுக்குப் பொருந்தும். சமுதாயக் கடமை செய்பவர்களுக்கு பொருந்தாது. அவர்கள் மானம் மிக்கவர்கள், மரியாதை உள்ளவர்கள், சமுதாயத்திற்காக எதையும் இழப்பார்களே தவிர, பதவிக்காக சோரம் போக மாட்டார்கள் என்று முஸ்லிம் சமுதாயம் நம்பிக் கொண்டு வந்ததை தற்போதைய அரசியல் நிலவரம், இவர்கள் அரசியலில் கொட்டை போட்டவர்களைத் தூக்கி முழுங்கி விடுவார்கள் என்பதை முஸ்லிம் சமுதாயத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.
முதலில் தி.மு.க. பின்னர் அ.தி.மு.க. பின்னர் தி.மு.க. பின்னர் அ.தி.முக. பின்னர் தி.மு.க. என்று நேரத்திற்கு ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து தாங்களும் கைதேர்ந்த அரசியல்வாதிகள் என்று நிரூபித்து விட்டார்கள்.
அரசியலில் கரைகண்டவர்கள் கூட இவர்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்புவரை ஒரு கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வருவதுதான் எங்கள் லட்சியம், அதற்குத்தான் இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம் என்று பேசிவிட்டு, அந்தக் கட்சியின் கதவுகள் திறக்காததால் இமாலய ஊழல் செய்தவர்கள் இவர்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்தால் தமிழகம் தாங்காது என்று விமர்சித்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்துவிட்டார்கள்.
அரசியலுக்குப் போனார்கள், சமுதாயத்திற்காக எதையாவது சாதிக்க முடிந்ததா? ஜால்ரா அடிக்க மட்டும்தான் முடிந்தது. ஜால்ரா அடித்தால் சாதிக்கலாம் என்று எண்ணியவர்களுக்கு சாவுமணிதான் அடித்தார்களே தவிர, சமுதாயத்திற்கு எதையும் செய்யவில்லை.
இவற்றை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? "அரசியலுக்குப் போகாதீர்கள் என்று சொன்ன நல்லவர்களின் அறிவுரையைக் கேட்காமல் சாதித்துக் கிழிப்போம் என்று போய் மண்ணைக் கவ்விக் கொண்டு வந்துவிட்டோம். இனி அரசியலுக்குப் போக மாட்டோம்" என்று சொல்லியிருந்தால், சமுதாய மக்கள் ஏற்றிருப்பார்கள்.
ஆனால் கொள்கையை விட சீட்டு முக்கியம், பதவி முக்கியம் என்று பேசினால் இவர்களை விட மோசமானவர்கள் யார் இருக்க முடியும்?
அரசியல் என்று யார் போனாலும் அவர்கள் அந்த சாக்கடையில் மூழ்கிப் போவார்கள் என்பதற்கு இன்றைய அரசியல் நிகழ்வு தெளிவான சான்று. எனவே அரசியலில் போனால் நல்லது என்று எண்ணியவர்களுக்கு தெளிவான எச்சரிக்கை. அது போன்ற சமுதாய இயக்கங்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
No comments:
Post a Comment