பெற்றோர்கள் சம்பந்தமாக நபிமொழிகளின் தொகுப்பு
وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ (15)
தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும்போது "என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறுகிறான்.
(அல்குர்ஆன் 46 : 15 )
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், '' நான் நபி (ஸல்) அவர்களிடம் '' அல்லாஹ்வின் நபியே நற்செயல்களில் சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது எது?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது?'' என்று கூறினார்கள். ''அடுத்து எது? அல்லாஹ்வின் நபியே என்று கேட்டேன். அதற்கு ''தாய் தந்தையருக்கு நன்மை புரிவது'' என்றார்கள். ''அடுத்தது எது? அல்லாஹ்வின் நபியே'' என்று கேட்டபோது, ''அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது'' என்றார்கள்.
நூல் : முஸ்லிம் (138)
உலக மக்களிலேயே அழகிய முறையில் நட்பு கொள்வதற்கு முதல் தகுதியானவர்கள் பெற்றோர்கள்தான்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து '' நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''உன் தாய் என்றார்கள்''. அவர் ''பிறகு யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''உன் தாய்'' என்றார்கள். அவர், ''பிறகு யார்?'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''பிறகு, உன் தந்தை '' என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : புகாரி (5971)
பெற்றோருக்கு பணிவிடை செய்தல் மாபெரும் ஜிஹாத் ஆகும்
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''உன் தாயும், தந்தையும் உயிருடன் இருக்கிறார்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ''ஆம் (உயிருடனிருக்கின்றனர்)'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள் ''அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடைசெய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) நூல் : புகாரி (3004)
பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வது
"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி "சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு!
அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! "சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!'' என்றுகேட்பீராக!
(அல்குர்ஆள் 17 : 23 , 24)
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
(அல் குர்ஆன் 31 : 14)
பெற்றோருக்காகச் செலவிடுதல்
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். "நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக!
(அல் குர்ஆன் 2 : 215 )
நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்றவர்களாக மக்களுக்கு உரையாற்றும் போது ''கொடுப்பவரின் கரம்தான் உயர்ந்ததாகும். உன்னுடைய குடும்பத்தவர்களாகிய உன்னுடைய தாய், உன்னுடைய தந்தை, உன்னுடைய சகோதரி, உன்னுடைய சகோதரன் பிறகு உனக்கு நெருக்கமானவர்கள் இவர்களிடமிருந்து நீ ஆரம்பம் செய்'' என்று கூறினார்கள்
அறிவிப்பவர் : தாரிக் (ரலி) நூல் : நஸாயீ (2485)
மரணித்து விட்ட பெற்றோருக்காக தர்மம் செய்தல்
பனூ சாயிதா குலத்தைச் சார்ந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்த போது அவர்களது தாயார் இறந்துவிட்டார். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து , '' அல்லாஹ்வின் தூதரே நான் வெளியே சென்றிருந்தபோது என் தாயார் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''ஆம் (பலனளிக்கும்)'' என்று கூறினார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், எனது மிக்ராஃப் (எனும்) தோட்டத்தை அவர்களுக்காக தர்மம் செய்து விடுகிறேன் என்பதற்குத் தங்களை நான் சாட்சியாக்குகிறேன்,'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி (2762)
பெற்றோர்களின் மூலம் ஏற்பட்ட உறவை அவர்களின் மரணத்திற்குப் பிறகும் இணைத்து வாழுதல்
மக்காவிற்கு செல்கின்ற வழியில் ஒரு கிராம வாசி இப்னு உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள் அவருக்கு ஸலாம் கூறி அவரை தன்னுடைய கழுதையில் ஏற்றினார்கள். தன்னுடைய தலையில் இருந்த தலைப்பாகையை அவருக்கு வழங்கினார்கள். (இதைக்கண்ட நாங்கள்) அல்லாஹ் உங்களை நன்றாக்குவானாக. இவர்கள் கிராமவாசிகள் கொஞ்சத்தையும் கூட பொருந்திக்கொள்வார்களே (அவர்களிடம் ஏன் நீங்கள் இவ்வாறு மிகுதியாக நடந்து கொள்ளவேண்டும்) என்று கேட்டோம். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் '' இவருடைய தந்தை (என்னுடைய தந்தையாகிய) உமர் (ரலி) அவர்களுக்கு நண்பராக இருந்தார். (தந்தைக்கு செய்யும்) பணிவிடைகளிலேயே மிகச் சிறந்தது மகன் தன் தந்தையின் நண்பரின் குடும்பத்தார்களை இணைத்து வாழ்வதுதான் என்று நபியவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு தீனார், நூல் : முஸ்லிம் (4629)
பெற்றோருக்கு செய்யும் பணிவிடைகள் இறையுதவியைப் பெற்றுத் தரும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது, அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள் , ''நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்றனர்.
அவர்களில் ஒருவர், ''இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டுப் பிறகு வந்து பால் கறந்து பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக நான் வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தைகள் பசியால் என் காலடியில் அழுதனர். விடியும் வரை இதே நிலை நீடித்தது இறைவா. நான் இதை உனது திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து '' எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி (2215)
பெற்றோர்களை நோவினை செய்வது பெரும்பாவமாகும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் '' பெற்றெடுத்த தாய்மார்களுக்கு துன்பம் தருவதை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமானதாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான்''
அறிவிப்பவர் : முகீரா பின் ஸுஹஃபா (ரலி) நூல் : புகாரி (2408)
'' தனக்கு அமுதூட்டியவர்களான (பெற்றோர்களை) சீரழிப்பதே ஒருவன் (நரகம்) செல்வதற்கு போதுமான பாவமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு பின் ஆஸ் (ரலி)
நூல் : அஹ்மத் ( 6208)
நபி (ஸல்) அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றி கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோருக்கு துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (2653)
பெற்றோர்களை சபிப்பது பெரும்பாவமாகும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : '' தன் பெற்றோரை சபிப்பவனை அல்லாஹ் சபித்து விட்டான். அல்லாஹ் அல்லாதவருக்கு அறுத்துப் பலியிட்டவனை அல்லாஹ் சபித்துவிட்டான். பித்அத் செய்பவனுக்கு அடைக்கலம் தருபவனை அல்லாஹ் சபித்துவிட்டான். நிலத்தின் எல்லைக்காக (வைக்கப்பட்ட) அடையாளக்கல்லை மாற்றியவனை அல்லாஹ் சபித்துவிட்டான் ''
அறிவிப்பவர் : அலீ (ரலி) நூல் : முஸ்லிம் (3657)
''ஒரு மனிதர் தன் தாய் தந்தையர்களை சபிப்பது பெரும்பாவங்களில் உள்ளதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது '' அல்லாஹ்வின் தூதரே ஒரு மனிதர் தன் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?'' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ''ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும், தாயையும் ஏசுவார். (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்.)'' என்றார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல் : புகாரி (5973)
பெற்றோருக்கு துன்பம் தருபவன் சுவனம் புகமுடியாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மூன்று நபர்களை அல்லாஹ் மறுமை நாளில் (கருணைக் கண்கொண்டு) பார்க்க மாட்டான். 1. தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவர். 2. ஆண்களைப் போன்று வேடமிடக்கூடிய பெண் 3. தன்னுடைய மனைவி தவறான நடத்தை கொண்டவளாக இருப்பதை அறிந்தும் ரோஷம் கொள்ளாத கணவன் ஆகியோராவர். இன்னும் மூன்று நபர்கள் சுவர்க்கம் புகமாட்டார்கள் 1.தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவர் 2. நிரந்தரமாக மது அருந்துபவன் 3. கொடுத்ததை சொல்லிக் காட்டுபவன்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : நஸயீ (2515)
பெற்றோர்கள் இணை வைப்போராக இருந்தாலும் அவர்களையும் இணைத்து வாழவேண்டும்.
அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : என்னிடம் என்தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணை வைப்போராக இருந்தார்கள்.நான் அல்லாஹ்வின் தூதரிடம் '' என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவைப்பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ''ஆம், நீ உன்தாயின் உறவைப்பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்'' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி (2620)
பாவமான காரியங்களில் பெற்றோருக்கு கட்டுப்படுவது கூடாது என்றாலும் மற்ற விஷயங்களில் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தி யுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.
(அல் குர்ஆன் 29 : 8)
உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விரு வரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்
. (அல் குர்ஆன் 31 :, 15 )
ஸஃது (ரலி) அவர்களுடைய தாயார் அவர்கள் (ஸஃதாகிய) அவர் தன்னுடைய மார்க்கமாகிய (இஸ்லாத்தை) மறுக்கின்றவரை அவரிடம் நான் ஒருபோதும் பேசமாட்டேன், சாப்பிடமாட்டேன், எதையும் அருந்தமாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள். மேலும் அவர் (ஸஃத் (ரலி) அவர்களுக்கு '' அல்லாஹ் பெற்றோர்களுக்கு நல்லுபகாரம் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டிருப்பதாக நீ கூறினாய். நான் உன்னுடைய தாய் நான் நீ இவ்வாறு (இஸ்லாத்தை விட்டும் வெளியேற வேண்டும்) என்று கட்டளையிடுகிறேன்'' என்று கூறிளாள்.
இவ்வாறு அவள் மூன்று நாட்கள் (பேசாமல், சாப்பிடாமல், பருகாமல்) இருந்தாள். அவளுக்கு கடுமையான பலவீனம் ஏற்பட்டது. அவருடைய (மற்றொரு மகனாகிய) உமாரா என்பவர் அவருக்கு நீர் புகட்டினார். அவள் ஸஃது (ரலி) அவர்களை சபிப்பவளாக ஆகிவிட்டாள். அப்போதுதான் அல்லாஹ் ''தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தி யுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.'' (அல் குர்ஆன் 29 : 8) என்று வசனத்தை அருளினான்.
அறிவிப்பவர் : முஸ்அப் பின் ஸஃது (ரலி) நூல் : முஸ்லிம் (4432)
பெற்றோர்களுக்காக செய்ய வேண்டிய பிரார்த்தனைகள்
"சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!''
(அல் குர்ஆன் 17 : 28)
எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக!
(அல் குர்ஆன் 14 : 41)
"என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக''
(,அல் குர்ஆன் 71 : 28)
"என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்''
(அல் குர்ஆன் 46 : 15)