வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
ஆஹா! இதோ பார்! சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி!
தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா? சாதி சமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி சர்வ சமயத்தவரும் சங்கமமாகி தங்கியிருக்கும் அரபு நாட்டின் அறைகளில் தான்.
(அரபு நாடு என்றவுடன் அங்கு பணிபுரியும் எல்லோருமே இப்படித் தான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மார்க்கப் பணிகளுக்காகவும், மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்பதற்காகவும் மட்டுமே தங்கள் விடுமுறை நாட்களை அர்ப்பணிக்கும் சகோதரர்களும் அரபகத்தில் இருக்கின்றார்கள். இங்கு நாம் குறிப்பிடும் சங்கதிகளும் அரபகத்தில் நடக்காமல் இல்லை. வீடியோவில் பெண்கள் போஸ் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்)
ஆக அந்த அறையே ஒரு சிறிய வீடியோ திரையரங்காக மாறி நிற்கும். இந்த வீடியோ படப்பிடிப்பு எங்கு நிகழ்ந்தவை? எல்லாம் நம் வீட்டுத் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான்.
நம் வீட்டில் கல்யாணம் என்றதும் வீடு களைகட்டி நிற்கின்றது. வீடியோ இல்லாத திருமணமா? என்று கேட்கும் அளவுக்கு வீடியோ கலாச்சாரமும் அநாச்சாரமும் கொடி கட்டிப் பறக்கின்றது.
வீதியில் உலாவரும் வீடியோ கேமரா
கல்யாணம் வீட்டில் நடந்தாலும் முதன்முதல் காட்சியாவது முச்சந்தியில் நிற்கும் பள்ளிவாசல் அல்லது தர்ஹா மற்றும் ஊரின் புகழைச் சொல்கின்ற புராதனச் சின்னங்கள் தான். இதன் பின் காலையில் கல்யாண வீட்டுக்குள் கேமரா நுழைந்து டீ காப்பி சப்ளை, டிபன், மணமகன் மணமகள் அலங்காரம் என்று மணமகனும் மணமகளும் மணவறையில் நுழைகின்ற வரை கேமரா பின் தொடர்ந்து சென்று ஒரு வழியாக்கி விட்டுத் தான் வெளியேறும்.
மணமகன் இல்லத்திருந்து துவங்கி, வீதி வீதியாகச் சென்று மணமகள் இல்லத்திற்கு அல்லது மண்டபத்திற்குச் சென்று திருமண ஒப்பந்தம் முடியும் வரையிலும் அத்தனையும் படமாக்கப்படுகின்றன.
குறிப்பாக இந்தக் கேமரா, பெண்கள் விருந்து பரிமாறும் போது, அங்க அசைவுகள் அனைத்தையும் கிளிக் செய்யத் தவறுவதில்லை. அதாவது அங்கிங்கு அசைந்து, வந்த விருந்தாளிகளை விழுந்தடித்துக் கவனிக்கும் பெண்களை கேமராமேன் குறி தவறாது பார்த்துக் கொண்டிருக்கின்றான். பற்றாக்குறைக்கு அவனுக்குப் பக்க துணையாக லைட் பிடிக்க இன்னொரு எடுபிடியாள் வேறு!
வேலை செய்கின்ற பெண்களுக்கு நிர்ப்பந்தமாக ஆடை விலகல் நடைபெறத் தான் செய்யும். ஆனால் இவையெல்லாம் ஒளிப்பதிவாகிக் கொண்டிருக்கின்றன என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.
திருமணத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் முதல் கேமரா மேன்களின் பார்வைகளுக்கு செழிக்க செழிக்க விருந்தாகின்றனர்.
அதன் பின்னர் துவக்கத்தில் நாம் கூறியது போல் அறைகளில் பலரும் உட்கார்ந்து கிரிக்கெட் கமென்டரியைப் போன்ற வர்ணனையுடன் ரசித்துப் பார்க்கும் ஆடவர்களின் பார்வைக்கு இப்பெண்கள் விருந்தாகின்றனர். இவ்வாறு பார்வைகளில் படரவும் தொடரவும் இந்த வீடியோப் பதிவுகள் வகை செய்கின்றன.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக திருமணம் செய்து கொள்ளப் போகும் மணமகன் கூட பெண்ணைப் பார்த்திருக்க மாட்டான். அதற்கு முன்பாகவே கேமராமேன் மணப்பெண்ணை ரசித்துப் பார்த்து விடுகின்றான். பவுடர் பூசி, நகைகள் அணிந்து, வண்ண ஆடைகளுடன் முழு நிலவைப் போல் அமர வைக்கப்பட்டிருக்கும் இந்த மணப்பெண்ணை நோக்கித் தான் கேமரா நிலைகுத்தி நிற்கின்றது.
இப்படி மணப்பெண் முதற்கொண்டு, நமது மனைவி, மக்கள், சகோதரிகள், கொழுந்தியாக்கள் என்று அனைவர் மீதும் பாயும் கேமராவைப் போன்றே இந்த கேமராமேனின் பார்வையும் வளைத்து நிற்கின்றது. இதில் மிகமிக வேதனைக்குரிய விஷயமும் வெட்கக்கேடான விஷயமும் என்னவென்றால் இந்த வீடியோக்களுக்கு நம் வீட்டுப் பெண்கள் கூச்ச நாச்சமின்றி போஸ் கொடுப்பது தான்.
ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! ''(நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!) தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்'' என்ற (24:31) வசனத்தை அல்லாஹ் அருளிய போது, அவர்கள் தங்கள் கீழாடை(யின் ஒரு பகுதி) யைக் கிழித்து அதைத் துப்பட்டா ஆக்கிக் கொண்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 4758
இதே கருத்தைக் கொண்ட செய்தி அபூதாவூதில் 3577வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது. அதில் ஆயிஷா (ரலி) அவர்கள் அன்சாரிப் பெண்களைப் பாராட்டுவதாக இடம் பெற்றுள்ளது.
தன்னை மறைத்துக் கொள்வதில் முன்னணியில் நின்ற அந்த நபித்தோழியர் எங்கே? இன்று வீடியோவுக்குப் போஸ் கொடுக்கும் இந்தப் பெண்கள் எங்கே?
ஒரு காலத்தில் ஒரு பெண் சினிமாவில் காட்சியளிக்கின்றாள் என்றால் சமூகம் அவளைக் காறித் துப்பியது. ஆனால் இன்றோ நடிகைகளுக்கெல்லாம் சமூக அந்தஸ்து வழங்கப்பட்டது போல் ஒரு போலித் தோற்றம் ஏற்படுத்தப் பட்டுவிட்டது. இப்படி ஒரு போலித் தோற்றம் இருந்தாலும் மற்ற சமுதாய மக்களிடத்தில் கூட, ஒரு பெண் பல பேர் முன்னிலையில் நேரிலோ அல்லது வீடியோவிலோ காட்சியளிப்பது வெறுப்பிற்குரிய காரியமாகவே கருதப்படுகின்றது. இவர்களிடத்திலேயே வெட்கம் தன் வேலையைக் காட்டும் போது ஒரு முஸ்லிமிடத்தில் இந்த வெட்க உணர்வு எப்படி இருக்க வேண்டும்?
ஈமான் (இறை நம்பிக்கை) அறுபதுக்கும் மேற்பட்ட கிளையாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 9
இந்த ஹதீஸின் அடிப்படையில் ஓர் இறைநம்பிக்கை கொண்ட பெண் அடுத்தவர் முன் காட்சியளிக்க முன்வர முடியுமா? இப்படிப்பட்ட பெண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சுவனத்தின் வாடை கூட நுகர முடியாது என்று எச்சரிக்கை செய்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 3971
பெண்கள் ஆண்களின் முன்னால் காட்சிப் பொருளாகத் தோன்றுவதன் மூலம் சுவனத்தில் நுழையும் பாக்கியத்தை இழந்து விடக் கூடாது. இப்படி வீடியோவில் பதிவாகி காட்சிப் பொருளாகும் பெண்கள் ஒரு தடவை மட்டும் பாவம் செய்யவில்லை. அந்த வீடியோ கேஸட்டுகள் எப்போதெல்லாம் ஆண்களால் பார்க்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் பாவம் பதியப்படும் நிலையை அடைகின்றார்கள்.
ரோஷம் இழந்த ஆண்கள்
இஸ்லாம் மனிதர்களுக்கு ரோஷ உணர்வை ஊட்டுகின்றது. பின்வரும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இதைத் தெளிவாக உணர்த்துகின்றார்கள்.
''என் மனைவியுடன் ஓர் ஆண் இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்'' என்று ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறினார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டிய போது, ''ஸஅதின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரை விட அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் என்னை விடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால் தான் வெளிப்படையான மற்றும் மறைவான மானக்கேடான செயல்கள் அனைத்தையும் தடை செய்து விட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புபவர் அல்லாஹ்வை விட வேறெவரும் இல்லை. அதனால் தான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பி வைத்தான். அல்லாஹ்வை விட மிகவும் புகழை விரும்புபவர்கள் வேறெவருமில்லை. அதனால் தான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி), நூல்: புகாரி 6846, 7416
ஒரு மனிதனுக்கு ரோஷம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக உணர்த்துகின்றது. ஆனால் இந்த விஷயத்தில் ஆண்கள் ரோஷமிழந்து நிற்கின்றார்கள். அதனால் தான் மணம் முடிக்கப் போகும் தானே சரியாகப் பார்த்திராத நிலையில் ஒரு கேமராக்காரன் பார்த்து அவளது அழகை ரசிப்பதற்கு அனுமதிக்கின்றான். இதுபோன்று தனது வீட்டுப் பெண்கள் அனைவரையும் காட்சிப் பொருளாக ஆக்கி, அதை அடுத்தவர்களின் பார்வைகளுக்கு விருந்தாகப் படைக்கின்றான்.
இது இவனது ரோஷ உணர்வு முற்றிலும் உலர்ந்து போய் செத்து விட்டது என்பதையே காட்டுகின்றது. இதில் ஏகத்துவவாதி என்று கூறுவோர் கூட விதிவிலக்காக இல்லை. அவர்களது வீட்டிலும் திருமண உரை என்ற பெயரில் வீடியோ எடுக்கப்பட்டு, அதில் குடும்பப் பெண்களை எல்லாம் அரங்கேற்றும் அவலத்தை நடத்தி விடுகின்றார்கள்.
திருமணங்களில் வீடியோ கலாச்சாரம், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் இஸ்லாமிய சமூகத்தைத் தொற்றி நிற்கும் ஒரு கொடிய தொற்று நோயாகும். அந்நிய ஆடவர்களின் பார்வைகளில் நம்முடைய பெண்கள் விருந்தாகும் வீடியோ கலாச்சாரத்தையும் இதை அடிப்படையாகக் கொண்ட திருமணங்களையும் ஏகத்துவவாதிகள் புறக்கணிக்க வேண்டும். இத்தகைய கலாச்சார சீரழிவை விட்டும் நமது சமுதாயத்தைக் காக்க வேண்டும்.
No comments:
Post a Comment