தர்மத்தின் சிறப்புகளை உணர்த்தும் பொன்மொழிகள்
குடும்பத்திற்குச் செலவு செய்வதும் தர்மமே!
ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 55
அறம் செய்தோர் அர்ஷின் நிழல்..
அல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தனது நிழலை ஏழு பேருக்கு அளிக்கின்றான். அவர்கள்: நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளிவாசல்களுடன் தமது உள்ளத்தைத் தொடர்பு படுத்திக் கொண்ட ஒரு மனிதர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகின்ற இரு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கின்ற போது 'நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்' என்று சொல்லும் மனிதர், தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர், தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்துபவர் ஆகியோர் ஆவர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 660
இறந்தவருக்காக தர்மம்
ஸஅத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் வெளியே சென்றிருந்த போது அவருடைய தாயார் இறந்து விட்டார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் நான் வெளியே சென்றிருந்த போது மரணமடைந்து விட்டார். நான் அவர் சார்பாக தர்மம் ஏதும் செய்தால் இது அவருக்குப் பயனளிக்குமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம்! என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஸஅத் (ர) அவர்கள், ''நான் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தர்மம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகின்றேன்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1388, 2756
வங்கியில் வளரும் தர்மம்
அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1410
பெருநரகை விட்டு காக்கும் சிறு பேரீச்சம்பழம்
''அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் பேசாமல் இருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காண மாட்டார். பிறகு தமக்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்பு தான் வரவேற்கும். ஆகவே முடிந்தால், பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: புகாரி 6539
மனைவியின் தர்மத்தில் கணவனுக்குப் பங்கு
''ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் அவளது கணவனுக்கும் நன்மை கிடைக்கும். அது போலவே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்து விட முடியாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1425, 2065
சிறந்த தர்மம் எது?
''தேவை போக எஞ்சியதைத் தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதல் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1426
இறுக்கினால் இறுகி விடும்
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ''நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் அருள்) உனக்கு (வழங்கப் படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்'' என்று கூறினார்கள்.
அப்தாவின் அறிவிப்பில், ''நீ (இவ்வளவு தான்) என்று வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான்'' என்று கூறியதாக உள்ளது. அறிவிப்பவர்: அஸ்மா (ரலி), நூல்: புகாரி 1433, 1434
இறைவனிடம் கையேந்தும் இரு மலக்குகள்
ஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ''அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!'' என்று கூறுவார். இன்னொருவர், ''அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1442
சுவனத்தின் ஸதகா வாசல்
''ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, ''அல்லாஹ்வின் அடியாரே! இது நன்மையாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)'' என்று அழைக்கப் படுவார். தொழுகையாளிகளாக இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர். அறப்போர் புரிந்தவர்கள் ஜிஹாத் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ரய்யான் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். தர்மம் செய்தவர்கள் ஸதகா எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த வாசல்கள் அனைத்திருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே எவரேனும் எல்லா வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நான் நம்புகின்றேன்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1897
மரம் நடுதல்
ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து அதிருந்து (அதன் விளைச்சலை) ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி), நூல்: புகாரி 2320
உறவினருக்கு உதவுவதில் உயர்ந்த கூலி
நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தங்குகின்ற முறை வந்த போது, ''அல்லாஹ்வின் தூதரே! அடிமைப் பெண்ணை விடுதலை செய்து விட்டேனே! அறிவீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீ (விடுதலை) செய்து விட்டாயா?'' என்று கேட்க, நான், ''ஆம்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ''நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (அன்பளிப்பாக) அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி), நூல்: புகாரி 2592
அல்லாஹ் சொல்லும் சேதி
''ஆதமின் மகனே! (மற்றவர்களுக்காக) செலவிடு! உனக்கு நான் செலவிடுவேன்'' என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5352
தர்மமே நமது சொத்து
நபி (ஸல்) அவர்கள், ''உங்களில் யாருக்காவது தமது செல்வத்தை விட தமது வாரிசுகளின் செல்வம் விருப்பமுடையதாக இருக்குமா?'' என்று கேட்டார்கள். தோழர்கள், ''அல்லாஹ்வின் தூதரே! எங்கள் அனைவருக்குமே எங்களின் செல்வம் தான் விருப்பமானதாகும்'' என்று பதிலளித்தார்கள். ''அவ்வாறாயின் ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) எதைச் செலவிட்டாரோ அது தான் அவரது செல்வமாகும். (இறக்கும் போது) எதைச் விட்டுச் செல்கின்றாரோ அது அவருடைய வாரிசுகளின் செல்வமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 6442
அல்லாஹ்வின் மன்னிப்பு
மிஸ்தஹ் பின் உஸாஸா என்பவர் தமது உறவினர் என்பதால் அபூபக்கர் (ரலி) அவர்கள் அவருக்காக செலவிட்டு வந்தார்கள். ''அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒரு போதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிட மாட்டேன்'' என்று அபூபக்ர் (ரலி) கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், ''உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' எனும் (24:22) வசனத்தை அருளினான்.
அபூபக்கர் (ரலி) அவர்கள், ''ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்'' என்று கூறிவிட்டு மிஸ்தஹுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், ''அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு (செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்த மாட்டேன்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 6679
hai
ReplyDelete