பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, March 27, 2018

சபை களையும் போது ஸலவாத்து சொல்ல வேண்டுமா?

சபை களையும் போது ஸலவாத்து சொல்ல வேண்டுமா?

– மவ்லவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக்குரல் ஆசிரியர் இலங்கை.

மார்க்கம் சம்பந்தமான விடயங்கள் பேசி முடிக்கும் போது, அல்லது முஸ்லிம் பாடசாலைகள் விடும் போது ஸலவாத்து சொல்லி கூட்டங்கள் முடிக்கப் படுகின்றன. இது மார்க்கத்தின் அடிப்படையில் சரிதானா? என்பதை தொடர்ந்து அவதானிப்போம்.!

‘அந்த தூதர் இடத்தில் அழகிய முன் மாதிரி உள்ளது’. என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
இந்த தூதர் அவர்கள் எந்த சந்தர்ப்பத்தில் சரி சபை கலையும் போது ஸலவாத்தை சொல்லி முடித்துள்ளார்களா? என்றால் அப்படி ஒரு எந்த செய்தியையும் ஹதீஸ்களில் காணமுடியாது.

அப்படியானால் நபியவர்கள் சபை ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும், என்ன சொன்னார்கள் என்பதையும், நபியவர்கள் காட்டித்தராத ஒரு செயலை நாமாக செய்தால் ஏற்படும் விபரீதத்தையும் தொடர்ந்து கவனிப்போம்.

நபி (ஸல்) அவர்கள் எந்த கூட்டம் கூடினாலும் முதலில் அல்லாஹ்வை புகழ்ந்து கூட்டத்தை ஆரம்பிப்பார்கள். அக்கூட்டதை முடிக்கும் போது சுபஹானகல்லாஹும்ம என்ற பின் வரும் தஸ்பீஹை கூறி முடிப்பார்கள்.

سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ

ஸுப்ஹானகல்லாஹும்ம வபி ஹம்திக அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்த அஸ்தக்ஃபிருக வஅதூபு இலைக.

பொருள் : இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன். (ஆதாரம்: திர்மிதீ)

கூட்டம் முடியும் போது இந்த தஸ்பீஹை சொல்வதன் மூலம் கூட்டத்தில் ஏற்ப்பட்ட தவறுகளுக்கு பரிகாரமாக அமைந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இது தான் நபியவர்கள் காட்டித் தந்த (சுன்னத்) நடைமுறையாகும். சுன்னத்துக்கு முக்கித்துவம் கொடுக்கிறோம் என்று சொல்லக் கூடியவர்களே சுன்னாவை குழி தோண்டி புதைக்கும் அவல நிலையை காணலாம்.

பள்ளிகளிளோ, அல்லது வேறு இடங்களிளோ கூட்டத்தை ஆரம்பிக்கும் போது சூரத்துல் பாதிஹாவை ஓதி ஆரம்பிக்கிறார்கள்? கூட்டத்தை முடிக்கும் போது ஸலவாத்து சொல்லி முடிக்கிறார்கள்? இதற்கு முதல் காரணம் மார்கத்தின் போதிய அறிவின்மையேயாகும்.

சில சந்தர்ப்பங்களில் படித்த மௌலவிமார்கள் கலந்து கொள்ளும் சபைகளில் கூட ஸலவாத்து சொல்லி கூட்டத்தை முடிக்கும் அவல நிலை? அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும், அல்லது படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டங்கள் முடிக்கும் போது ஸலவாத்து சொல்லி முடிக்கும் அவல நிலை? அதே கூட்டத்தில் மௌலவிமார்கள் இருந்தாலும் மௌனமாகவே இருப்பார்கள்? அரசியல்வாதிகளையும், செல்வந்தர்களையும் திருப்தி படுத்துவதுற்காக இந்த மௌனம்?

சில சந்தர்பங்களில் சபை முடிக்கும் துஆவையும் ஓதுவார்கள், அதன் பிறகு ஸலவாத்தையும் ஓதுவார்கள்?
நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த அமைப்பிற்கு மாற்றமாக யார் செய்தாலும் அவர்கள் வழிகேடர்கள் என்று பின் வருமாறு அல்லாஹ் எச்சரிக்கிறான்.

‘அல்லாஹ்வும், அவனது தூதரும் இவ்வாறு தான் ஒரு விடயத்தை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்த பிறகு அதை மாற்றி அமைப்பதற்கு முஃமினான ஆணுக்கோ, பெண்ணுக்கோ எந்த அதிகாரமும் கிடையாது. அப்படி யார் மாற்றி செய்கிறார்களோ அவர்கள் தெளிவான வழிகேடர்கள். (அல்குர்ஆன் 33:36)

சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டும் தான் உள்ளது. மார்க்க விடயங்களில் நாம் நினைத்த மாதிரி மாற்றி அமல் செய்ய முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதன் முடிவு நரகமாக மாறிவிடும். அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல ஷிர்க்குல் அஸ்கர் என்ற சிறிய இணைவைத்தலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

சரியானதை விளங்கிக் கொண்டு பிறரை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக ஓர் அமலை செய்தால் அவர் மறுமையில் நரகில் தூக்கி வீசப்படுவார் என்பதை பின் வரும் ஹதீஸின் மூலம் விளங்கலாம்.

மறுமை நாளில் செல்வம், அறிவு, வீரம் கொடுக்கப்பட்டவர்கள் தனித்தனியாக விசாரிக்கப் படும் போது அவர் அவர்களுக்கு வழங்கப் பட்டதை சரியாக செய்திருந்தாலும், தன்னை பிறர் பாராட்ட வேண்டும் என்று பிறருக்காக செய்ததினால் நரகத்திற்கு வீசப்படுகிறார்கள்.

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதை செய்யும் போது, அதை பிறருக்காக என்ற தப்பான எண்ணத்திற்காக நரகம் என்றால், அனுமதிக்கப்படாத ஒன்றை பிறருக்காக செய்தால் எவ்வளவு பெரிய தண்டனை கிடைக்கும் என்பதை சற்று நிதானமாக சிந்தியுங்கள்.!

ஓர் இடத்தில் இப்படியான தவறுகள் நடக்கும் போது படித்த அறிஞர்கள் அதை திருத்திக் கொடுக்க வேண்டும். வேலியே பயிரை மேய்ந்த கதையாக போய்விடக் கூடாது.

தவறு நடக்கும் போது தன் கையினால் தடுக்கவும், அல்லது தன் வாயினால் தடுக்கவும், அல்லது வெறுத்து ஒதுங்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதில் நீங்கள் எந்த வகை? அல்லாஹ்விற்காக அமல் செய்கிறீர்களா? பிறருக்காக அமல் செய்கிறீர்களா? எனவே மார்க்கம் அமலாக எதை நமக்கு காடடித் தந்துள்ளதோ அதை நாம் நமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதே நேரம் நபி (ஸல்) அவர்கள் மீது அடிக்கடி ஸலவாத்து சொல்லக் கூடிய பழக்கத்தையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment