பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, December 20, 2018

ளுஹா தொழுகை

ளுஹா தொழுகை...
ஒருவருடை உடம்பில் சுமார் 360 மூட்டுக்கள் உள்ளன அவை ஒவ்வொன்றுக்கும் ஸதகா கொடுக்கவேண்டும் ஆனால் மனிதனால் முடியாது  எனவே இறைத்தூதர் 2 ரகாத் ளுஹாத்தொழும்படி கூறியுள்ளார்கள் அந்த 2 ரகாத்துகளும் அதற்குப்போதுமாகிவிடும்.

இதன் முக்கியத்துவம்

கண்மணி  நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:

"யாரேனும் ஒருவர் பன்னிரண்டு ரக்அத்துகள் ளுஹா தொழுதால் அல்லாஹ் அவருக்காக சுவர்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகிறான்"

நூல் - திர்மிதி

கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:

"சுவனபதியில் ஒரு நுழைவுவாயிலுக்கு ளுஹா என்று பெயர். ளுஹாத் தொழுகையினைத் தொடர்ந்து தொழுபவர்கள் இவ்வாயிலின் வழியாக நுழைந்து வருமாறு அழைக்கப்படுவார்கள்"

நூல் : தபரானி

கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:

"ளுஹாவின் இரண்டு ரக்அத்துகளை தொடர்ந்து தொழுபவரின் பாவங்கள் கடலின் நுரையளவு (அதிகமாக) இருப்பினும் அவை மன்னிக்கப்படும்.

நூல் : அபூதாவூத்

எப்போது தொழ வேண்டும்?

சூரியன் உதயமாகி ஒரு ஈட்டியின் அளவு உயர்ந்தது முதல் ளுஹர் தொழுகையின் நேரம் வரும் வரை ளுஹா தொழலாம். ஆனால் பகல் பொழுதின் நான்கில் ஒரு பகுதி (மூன்று மணிநேரம்) சென்றபின் தொழுவது சிறப்பானதாகும். சுமாராக காலை 9 மணி முதல் 11 மணிவரை என்று குறிப்பிடலாம்.

ளுஹா தொழுகை -ஒரு கண்ணோட்டம்

நபியவர்கள் காட்டித் தந்த பல சுன்னத்தான தொழுகைகளில் ளுஹா தொழுகையும் முக்கியமானதாகும். ளுஹா தொழுகையின் எண்ணிக்கைகள், அதுனுடைய ஆரம்ப நேரம், அதனுடைய முடிவு நேரம் என்பதை ஹதீஸின் வழியில் விடை காண்போம்.

ளுஹா தொழுகையின் ஆரம்ப நேரம்…
சூரியன் உதயமாகி பத்து நிமிடத்திற்கு பிறகிலிருந்து சூரியன் நடு உச்சிக்கு வருவதற்கு பத்து நிமிடத்திற்கு முன் உள்ள நேரம் வரை தொழலாம்.
ளுஹா என்றாலே முற்பகல் என்று பொருளாகும். குர்ஆனில் 93ம் அத்தியாயத்தில் முற்பகல் மீது சத்தியமாக என்று அல்லாஹ் கூறுகிறான். தமிழில் முற்பகல் என்று சொல்லும் போது காலை சூரியன் உதயமாகி நண்பகல் (12மணி வரை) உள்ள நேரத்திற்கு சொல்வதாகும்.

ளுஹா தொழுகையும், நபியவர்களும்…
குறிப்பிட்ட சில நபித் தோழர்கள் நபியவர்கள் ளுஹா தொழவில்லை என்று அறிவித்து இருந்தாலும், நபியவர்கள் ளுஹா தொழுகை தொழுததற்கான பல ஆதாரங்கள் மிகத் தெளிவாக உள்ளன. அவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

ளுஹா தொழுகை எட்டு ரக்அத்துகள்…
‘மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு, நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்றிருந்தபோது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குத் திரையிட்டார். நான் நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அப்போது, ‘யாரவர்?’ எனக் கேட்டார்கள். ‘நான் அபூ தாலிபின் மகள் உம்முஹானி’ என்றேன். உடனே, ‘உம்முஹானியே! வருக!’ என்றார்கள். நபி(ஸல்) குளித்து முடித்த பின்னர் ஒரே ஆடையைச் சுற்றியவர்களாக எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அவர்கள் தங்கள் தொழுகையை முடித்ததும் ‘இறைத்தூதர் அவர்களே! என்னுடைய சகோதரர் நான் அடைக்கலம் அளித்திருக்கும் ஹுபைராவின் மகனைக் கொலை செய்ய எண்ணியுள்ளார்’ என்று நான் கூறியபோது ‘உம்மு ஹானியே! நீ அடைக்கலம் அளித்திருப்பவருக்கு நாங்களும் அடைக்கலம் அளிக்கிறோம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இச்சம்பவம் முற்பகலில் நடந்தது’ என உம்மு ஹானி(ரலி) அறிவித்தார். (புகாரி 357,- 4292 முஸ்லிம் 562,- 563)

மேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் ளுஹா தொழுகை எட்டு ரக்அத்துகள் தொழலாம் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.

ளுஹா நான்கு ரக்அத்துகள்…
“ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் நான்கு ரக்அத்கள் (ளுஹா) தொழுவார்கள்; அல்லாஹ் நாடிய அளவு கூடுதலாகவும் தொழுவார்கள். இதை முஆதா அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம் 1297)

மேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் ளுஹா தொழுகை நான்கு ரக்அத்துகள் தொழலாம் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.

ளுஹா தொழுகை இரண்டு ரக்அத்துகள்…
“அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
‘ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும். ‘ளுஹா’ நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும். உறங்குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுது விடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் தோழர்(ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்!’ (புகாரி 1981)

மேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் ளுஹா தொழுகை இரண்டு ரக்அத்துகள் தொழலாம் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.

எனவே ளுஹா தொழுகையின் எண்ணிக்கை குறைந்தது இரண்டு ரக்அத்துகள், கூடியது எட்டு ரக்அத்துகள் தொழலாம் என்பதை நாம் புரியலாம். ஆகவே சுன்னது தானே என்று இந்த ளுஹா தொழுகை விடயத்தில் அலச்சியமாக இருந்து விடாமல், நாளாந்தம் தொடராக தொழக் கூடிய பழக்கத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
சுன்னத்தான, மற்றும் நபிலான வணக்கங்களின் மூலம் அல்லாஹ் நம்மை நெருங்குவதாக நபியவர்கள் உறுதிப் படுத்தியுள்ளார்கள். அல்லாஹ் மிக நன்கு அறிந்தவன்.


Sunday, December 16, 2018

குர்ஆன் கூறும் குற்றவியல் சட்டங்கள்

குர்ஆன் கூறும் குற்றவியல் சட்டங்கள்

ஏகத்துவம் செப்டம்பர் 2007

குர்ஆன் கூறும் குற்றவியல் சட்டங்கள்

கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்

இன்றைய உலகில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல வகையான தவறுகள் பெருகிக் கொண்டே செல்கின்றன. ஒரு நாட்டின் அரசாங்கம் எத்தகைய சட்டங்களைக் கொண்டு வந்தாலும் இவை குறைந்த பாடில்லை.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தவறு செய்வதைத் தூண்டக் கூடிய காரணிகள் ஒழிக்கப்படாமல் இருப்பது, இரண்டு, தவறு செய்தவனுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படாமலிருப்பது.

ஆபாசப் படங்களைத் திரையிடுவதற்கும், ஆபாசப் பத்திரிகைகள் வெளிவருவதற்கும், ஆபாசமாக உடையணிவதற்கும் அனுமதி வழங்கப்பட்ட நாட்டில் விபச்சாரத்தை ஒழிப்பதற்கு எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், சட்டங்களைக் கொண்டு வந்தாலும் அதனை ஒழிக்க முடியாது. ஏனென்றால் விபச்சாரத்திற்கு அடிப்படையே ஆபாசம் தான். இவற்றை இல்லாமல் ஆக்கினால் தான் இந்தத் தீமையை சட்டங்களால் கட்டுப்படுத்த முடியும்.

மது அருந்துவதும், போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதும், புகை பிடிப்பதும் உடல் நலத்திற்குத் தீங்கானது என்பதை உணர்ந்த நம்முடைய நாட்டிலே மது பாட்டில்களின் மீது, "குடி குடியைக் கெடுக்கும்’ என்றும் பீடிக் கட்டுகளில் மண்டை ஓட்டுப் படங்களை போடுவதன் மூலமும், பதினாறு வயதிற்குக் குறைந்தோர் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என விளம்பரம் செய்வதன் மூலமும் இவற்றை விட்டும் மக்களைப் பாதுகாத்து விடலாம் என நினைக்கின்றனர்.

ஆனால் இவற்றைக் கடைகளில் வைத்து வியாபாரம் செய்வதற்கு அனுமதியளித்த பிறகு இவற்றை விட்டும் மக்களைப் பாதுகாக்க விளம்பரம் செய்வது ஒரு பொருளை சாக்கடைக்குள் வைத்துக் கொண்டே அதன் நாற்றத்தைப் போக்க முயல்வதைப் போன்றதாகும்.

இரண்டாவது காரணம், குற்றங்களுக்குத் தகுந்த தண்டனைகள் வழங்கப்படாமல் இருப்பதாகும். இதனால் தவறு செய்பவன் மென்மேலும் தவறு செய்யத் தூண்டப்படுகிறான்.

மேலும் மனிதச் சட்டங்களில் குற்றங்களைச் செய்து விட்டுத் தப்பிப்பதற்குப் பல ஓட்டைகள் உள்ளன. இதன் காரணமாக, பல நிரபராதிகள் தண்டிக்கப்படுகின்றனர். பல குற்றவாளிகள் தண்டனை யிலிருந்து தப்பித்து விடுகின்றனர்.

படைத்த இறைவனால் வழங்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே தவறுகளைத் தூண்டக் கூடிய காரணிகளை அடியோடு ஒழிப்பதுடன் தவறுகளுக்குத் தகுந்த தண்டனைகளையும் வழங்குகிறது.

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை; மனிதாபிமானமற்றவை என்று பரவலாக விமர்சிக்கின்றனர். குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை இஸ்லாம் வழங்குவதே இதற்குக் காரணம்.

ஆனால் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் தாம் மனித குலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதை நடுநிலையோடு சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்வார்கள்.

குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப் பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.

கொலைக் குற்றம் செய்த ஒருவனுக்கு மரண தண்டனை வழங்குவதால், கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பக் கிடைத்து விடப் போவதில்லை; கற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்ப வரப் போவதில்லை; பொருளாதாரம் சம்பந்தப்பட்ட, திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறி போனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப் பட்டு விடுவதால் அவனால் பாதிக்கப்பட்டவனுக்குப் பயனேதும் கிடையாது.

இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை இதிலி-ருந்து விளங்கலாம். அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியதன் காரணம் என்ன?

1. குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை, மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதி-லிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.

2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.

3. குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். அவன் மன நிறைவு அடைய வேண்டும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.

குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும், குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதன் பால் நெருங்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் உலகமெங்கும் சிறைச் சாலைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன, குற்றவாளிகளுக்கு எந்த விதமான தண்டனையும் வழங்கக் கூடாது என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறுவதில்லை.

ஆனால் உலக நாடுகள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களால் குற்றங்களை குறைக்க இயலவில்லை.

அது மட்டுமின்றி குற்றவாளிகளுக்கு சிறைச் சாலைகளில் செய்து தரப்படுகின்ற வசதிகள் குற்றங்களை அதிகப் படுத்தவே வழி வகுக்கின்றன.

குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய சட்டங்களே குற்றம் செய்யத் தூண்டினால் என்னவாகும்?

திருட்டு, கற்பழிப்பு, கொலை, கொள்ளை, இன்ன பிற குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? சில மாதங்களோ, சில வருடங்களோ சிறைத் தண்டனை வழங்கப் படுகின்றது. பெரும்பாலான நாடுகளில் தண்டனையின் அளவு இது தான்.

சிறைத் தண்டனை என்பது என்ன? வெளியே வர முடியாது என்ற ஒரு அம்சத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் எத்தனையோ பரம ஏழைகளின் வாழ்வை விடச் சிறை வாழ்வு மேலானதாக உள்ளது.

நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் ஏழைகளுக்கு அன்றாடம் கால் வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லை. அநியாயமாகவும், அயோக்கியத்தனமாகவும் நடந்து கொண்ட குற்றவாளிகளுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் தரப்படுகின்றது. உயர் தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குச் செய்து தரப்படுகின்றன. அவர்களின் பொழுதைப் போக்குவதற்காக (?) சினிமா போன்ற வசதிகளும் சிறைச் சாலைகளுக்குள்ளேயே செய்து தரப்படுகின்றன.

இந்தக் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை எதுவும் செய்து விடாத அளவுக்குப் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இதில் வேதனையான அம்சம் என்னவென்றால், எந்த மக்களிடமிருந்து ஒருவன் திருடுகிறானோ, எந்த மக்களைக் கொலை செய்கிறானோ, எந்தப் பெண்களைக் கற்பழிக்கிறானோ, அந்த மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் இந்த அயோக்கியர்களுக்கு இவ்வளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

பெயரளவிலான இந்தத் தண்டனையால் ஒரு பயனும் ஏற்படாது; ஏற்படவில்லை.

53 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது!

15 முறை சைக்கிள் திருடியவன் மீண்டும் கைது!

என்றெல்லாம் அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகள் வருகின்றன. 53 தடவை வழங்கப்பட்ட தண்டனைகள் அவனுக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. அதை ஒரு தண்டனையாகவே அவன் கருதவில்லை.

சிறைச்சாலைகளில் கிடைக்கும் வசதிகள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொண்டதால், நேர்மையாக வாழ்ந்து கஞ்சிக்குக் கஷ்டப் படுவானேன்? ஏதேனும் குற்றம் புரிந்தால் சிறைச்சாலைகளில் மூன்று வேளை உணவு கிடைக்குமே என்று எண்ணி அவர்களும் குற்றங்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.

மேலும் குற்றவாளிகள் ஒருவரை ஒருவர் சிறைச்சாலைகளில் சந்தித்துக் கொள்வதற்கும், கூட்டாகத் திட்டமிடவும் வாய்ப்புக் கிடைப்பதால் மேலும் பெரிய அளவில் குற்றம் செய்வதற்குப் புதுப்புது யுக்திகளை வகுக்கின்றனர். சிறைச்சாலைகள் குற்றவாளிகளின் பல்கலைக் கழகங்களாகத் திகழ்வதை அனைவரும் அறிவர்.

ஆண்டுதோறும் குற்றவாளிகள் பெருகி வருகின்றார்கள்; குற்றங்கள் பெருகுகின்றன; குற்றவாளிகளை அதிகப்படுத்துவதற்காக மக்களின் வரிப் பணம் பாழாக்கப்படுகின்றது. மனிதாபிமான (?) சட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் இவை.

பாதிக்கப்பட்டவன் இந்தத் தண்டனைகளால் மனநிறைவு அடைவானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

திருட்டுக் கொடுத்தவனிடம் போய், திருடியவனை என்ன செய்யலாம் என்று கேட்டால் ஆறு மாதம் சோறு போடலாம் எனக் கூற மாட்டான். கொல்லப்பட்டவனின் மகனிடம் போய், கொலையாளியை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால் பதினான்கு வருடம் அரசாங்கச் செலவில் அவனைப் பராமரிக்க வேண்டும் என்று கூறுவானா? தலையைச் சீவ வேண்டும் என்பானா?

கற்பழிக்கப்பட்டவள், அதனால் தனது எதிர்காலமே இருண்டு விட்ட நிலையில் கற்பழித்தவனுக்கு எத்தகைய தண்டனை கொடுத்தால் மனம் நிறைவடைவாள்? என்றெல்லாம் பாதிக்கப் பட்டவர்களின் உணர்வுகளைச் சீர்தூக்கிப் பார்த்து, தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப் படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப் படுவதில்லை.

இஸ்லாமோ இதைக் கவனத்தில் கொள்கிறது. இஸ்லாம் கூறும் குற்றவியல் சட்டங்களைப் பற்றிப் பார்ப்போம்.

கொலைக் குற்றம் மற்றும் தாக்குதல்களுக்குண்டான தண்டனைகள்

ஒருவன் பத்துப் பேரை கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையை கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாமனோ, மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையைச் சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால், இஸ்லாத்தில் இதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.

அதே நேரத்தில் கண்ணை இழந்தவன் குற்றாவாளியை மன்னித்து விட்டால் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான். அல்லது குற்றவாளியிடம் நஷ்ட ஈட்டைக் கோரிப் பெற்றுக் கொண்டாலும் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான்.

அது போலவே கொல்லப் பட்டவரின் வாரிசுகளில் யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.

அதாவது உலக நாடுகள் ஜனாதிபதிக்கு வழங்கிய அதிகாரத்தை, பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.

நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப் பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (நஷ்ட ஈடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்.

அல்குர்ஆன் 2:178, 179

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன் 5:45

அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை, தக்க காரணமின்றி செய்யாதீர்கள்! அநியாயமாகக் கொல்லப்பட்டோரின் பொறுப்பாளருக்கு அதிகாரம் அளித்துள்ளோம். அவர் கொல்வதற்காக வரம்பு மீறிட வேண்டாம். அவர் உதவி செய்யப்பட்டவராவார்

அல்குர்ஆன் 17:33

கொலை செய்தனுக்கு அரசாங்கம் மரண தண்டனை விதித்தால், கொலை செய்ய எவருமே துணிய மாட்டார்கள். பல்லை உடைத்தால் தனது பல்லும் அரசாங்கத்தினால் உடைக்கப்படும் என்பதை அறிந்தால் எவருமே அடுத்தவனின் பல்லை உடைக்க மாட்டார்கள். சட்டங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது.

பாதிக்கப்பட்டவன் மன நிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப் பட்டவனே குற்றவாளியாகும் நிலைமையும் உருவாகும்.

கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும், சிறைச் சாலையி-லிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.

இந்த நிலைமைக்கு என்ன காரணம்? "கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது; தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது’ என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப் பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கிய காரணமாக உள்ளது எனலாம்.

குழப்பம் செய்பவர்கள்

கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்கு உரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.

அல்குர்ஆன் 5:33

தவறுதலாகக் கொலை செய்தல்

நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது. நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்று விட்டால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவனது (கொல்லப்பட்டவனது) குடும்பத்தார் தர்மமாக விட்டுக் கொடுத்தால் தவிர அவர்களுக்கு நஷ்ட ஈடு ஒப்படைக்கப்பட வேண்டும். அவர் உங்களுக்கு எதிராகவுள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவராகவும், நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவர், உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவரது குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கி, நம்பிக்கை கொண்ட அடிமையையும் விடுதலை செய்ய வேண்டும். (இதில் எதுவும்) கிடைக்காதோர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். (இது) அல்லாஹ்வின் மன்னிப்பாகும். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:92

ஒருவன் தவறுதலாக இன்னொருவனைக் கொன்று விட்டால் அதற்கான நஷ்ட ஈடு அளிக்கப்பட வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது. நஷ்ட ஈட்டின் அளவு திருக்குர்ஆனில் கூறப்படவில்லை.

ஆயினும் தவறுதலாக ஒருவர் இன்னொருவரைக் கொன்று விட்டால் நூறு ஒட்டகங்கள், அல்லது இரு நூறு மாடுகள், அல்லது இரண்டாயிரம் ஆடுகள் நஷ்ட ஈடாக அளிக்கப்பட வேண்டுமென்றும், இந்த நஷ்ட ஈடு கொலை செய்தவனின் அனைத்து வாரிசுகளிடமிருந்தும் கூட்டாக வசூலிக்கப்பட வேண்டுமென்றும், வசூலிக்கப்படும் நஷ்ட ஈட்டை கொல்லப்பட்டவனின் வாரிசுகள் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டப்படி பிரித்துக் கொள்ள வேண்டுமென்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

திருட்டுக் குற்றம்

திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்! இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும், அல்லாஹ்வின் தண்டனையுமாகும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 5:38

திருட்டுக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் ஆகியோரின் வலது கை மணிக்கட்டு வரை வெட்டப்பட வேண்டும் என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது.

இப்படிக் கையை வெட்டினால் அவன் தொடர்ந்து திருட மாட்டான்; திருடவும் முடியாது.

மீண்டும் திருடுவதற்கு மனதாலும் எண்ண மாட்டான் என்பது ஒரு நன்மை.

முதன் முதலாகத் திருட எண்ணுபவனும் அதற்குக் கிடைக்கும் தண்டனையை அறியும் போது திருடத் துணிவு பெற மாட்டான். இது மற்றொரு நன்மை.

கை வெட்டப்பட்டவனைப் பார்க்கும் போது அவன் திருடன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலும். எனவே அவனிடம் தங்கள் பொருட்களைப் பறி கொடுக்காமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.

"இவர்கள் இங்கே இருக்கிறார்களா?” என்று திருடர்களின் புகைப்படங்களைப் பொது இடங்களில் ஒட்டி வைப்பதால் அந்த முகங்களை யாரும் நினைவில் பதிய வைக்க இயலாது. ஆனால் கையை வெட்டினால் அதுவே திருடன் என்பதற்குச் சிறந்த அடையாளமாகி விடுகிறது. இது மூன்றாவது நன்மை.

தண்டனைகள் வழங்கப்படுவதன் நோக்கம் பரிபூரணமாக இப்போது நிறைவேறுகிறது. அது மட்டுமின்றி குற்றவாளியை வருடக்கணக்கில் சிறையில் போட்டு அவனைப் பராமரித்துப் பாதுகாக்கும் வகையில் ஏற்படும் பொருளாதாரச் செலவுகள் மிச்சமாகின்றன. மக்களின் வரிப் பணம் பாழாகாமல் இந்தச் சட்டம் தடுக்கின்றது. சிறைக் கூடங்களை ஒழித்து விட்டு இஸ்லாம் பரிந்துரைக்கின்ற தண்டனைகளை அமுல்படுத்தினால் பற்றாக்குறை பட்ஜெட் போடும் அவசியம் இராது.

"பாவம்! கையை வெட்டுகின்றீர்களே!” என்று பரிதாபப் படுவது தான் மனிதாபிமானம் என்று சிலர் எண்ணுகின்றனர்.

மரணப் படுக்கையில் கிடக்கும் தன் மனைவியின் உயிர் காக்கும் மருந்தை வாங்கச் செல்லும் ஒருவனிடமிருந்து திருடன் பணத்தைப் பறித்துக் கொள்கிறான். அந்த அயோக்கியனால் பணத்தை மட்டுமின்றி தன் மனைவியின் உயிரையும் பறி கொடுத்து நிற்கிறானே! அவனுக்காக யார் பரிதாபப்படுவது?

நேர்மையையும், ஒழுக்கத்தையும் விரும்பக் கூடியவன் பாதிக்கப்பட்டு நடுத் தெருவில் நிற்பதைப் பார்த்து பரிதாபப்படாமல், அவனை நடுத் தெருவில் நிறுத்தியவனைப் பார்த்து பரிதாபப்படுகிறார்கள்.

இப்படியே கையை வெட்டிக் கொண்டே போனால் கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகி விடுமே என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

நிச்சயமாக கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகாது. ஒரே ஒரு திருடனின் கையை வெட்டி விட்டால் மற்ற எவனுக்குமே திருடும் துணிவு ஏற்படாது. வெட்டப்படும் கைகளின் எண்ணிக்கை நிச்சயம் பெருகாது.

விபச்சாரக் குற்றம்

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப் படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.

அல்குர்ஆன் 22:2

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விபச்சாரத்திற்கான தண்டனையை இரு வகைகளாகப் பிரித்துள்ளனர்.

திருமணம் ஆனவர்கள் விபச்சாரம் செய்வார்களானால் அவர்களுக்கு மரண தண்டனையும், திருமணம் ஆகாதவர்கள் விபச்சாரம் செய்தால் நூறு கசையடி என்ற தண்டனையும் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

புகாரி – 2649, 2696, 2725, 6633, 6828, 6836, 6843, 6860, 7195, 7260, 2315, 5270, 5272, 6812, 6815, 6820, 6824, 6826, 6829 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களிலும், மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட ஏராளமான ஹதீஸ் நூல்களிலும் இதற்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன.

இது போன்ற தண்டனைகளை நிறைவேற்றும் போது மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாக நிறைவேற்றுவதை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில் தண்டனை வழங்குவதற்கான நோக்கம் அதைப் பார்த்து மற்றவர்கள் திருந்த வேண்டும் என்பது தான். எனவே மக்கள் முன்னிலையில் இது போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால் தான் தண்டனை வழங்கப்படுவதன் நோக்கத்தை எட்ட முடியும் என்பதால் "மக்கள் பார்த்துக் கொண்டிருக்கட்டும்’ என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுதல்

பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்துக்கும் எதிரான வதந்திகளை மட்டும் மக்கள் சர்வ சாதாரணமாக நம்பி விடுகின்றனர். பெண்களுடன் ஆண்களைத் தொடர்புபடுத்திக் கூறும் செய்திகளையும் ஆர்வமுடன் செவிமடுத்து அதை நம்பவும் செய்கின்றனர்.

"இருக்கும்! இருக்கும்!” என்று கூறி அதை ஆமோதிக்கின்றனர். இதனால் ஒரு பெண்ணுடைய எதிர்காலமே சூன்யமாகி விடுவதைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. தங்கள் மகளைப் பற்றியோ, சகோதரிகள் பற்றியோ மற்றவர்கள் இப்படிப் பேசினால் அவர்கள் அதை ரசிப்பார்களா?

செய்தி ஊடகங்களும் பெண்களின் ஒழுக்கம் குறித்து ஆராயாமல் பரபரப்புச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ஆனால் இஸ்லாம் மட்டும் பெண்களின் கற்பொழுக்கம் பற்றி அவதூறு பேசுவதைக் கடுமையான குற்றமாகக் கருதுகின்றது. ஒரு பெண் மீது அவதூறு சுமத்துவது என்றால் குறைந்த பட்சம் நான்கு நேரடி சாட்சிகள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது

நான்கு சாட்சிகள் இல்லாத நிலையில் பெண்களின் கற்புக்கு எதிராகக் குற்றம் சுமத்தினால், அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால் கூட குற்றம் சுமத்தியவர் களுக்கு எண்பது சவுக்கடிகள் தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.

அல்குர்ஆன் 24:4

இதற்கு நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா? சாட்சிகளை அவர்கள் கொண்டு வரவில்லையானால் அல்லாஹ்விடம் அவர்களே பொய்யர்கள்.

அல்குர்ஆன் 24:13

இஸ்லாம் வழங்கிய சட்டங்கள் தான் மனித சமுதாயத்திற்கு பாதுகாப்பானது என்பதை மேற்கண்ட வசனங்கள் நமக்கு தெளிவாக விளக்குகின்றன.

இவ்வுலக அமைதிக்கு இறைச்சட்டமே!

உலகில் எத்தனையோ அரசுகள் வந்து போய் விட்டன. மக்களின் உயிருக்கும், உடமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத் தான் தழுவி இருக்கின்றன. எப்போது என்ன நேருமோ? என்று அஞ்சியே மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். இஸ்லாம் சொல்கின்றது என்ற குறுகிய நோக்கில் இஸ்லாமியத் தண்டனைகளைப் புறக்கணிக்காமல் அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கருத்தில் கொண்டு அதை அமுல்படுத்த முன்வர வேண்டும்.

குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கெதிராகச் சாட்டையை உயர்த்தி, கடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால், உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும்.

திருடனைப் பிடித்தவுடன் அவன் கையை வெட்டி விட்டால் பிறகு அவன் நிரபராதி என்பது தெரிய வந்தால் போன கை திரும்பி வந்து விடுமா? என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர்.

இரண்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பின் எத்தனையோ பேர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இழந்த மூன்றாண்டுகளைத் திருப்பிக் கொடுக்க இயலுமா என்று கேட்டால் அதற்கு என்ன பதில்? என்பதைச் சிந்தித்தால் இப்படிக் கேட்க மாட்டார்கள்.

மேலும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று தண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறவில்லை. குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பின்பே தண்டனை வழங்குமாறு கூறுகின்றது.

மரண தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் விபச்சாரத்தை நான்கு நேரடியான சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். நான்குக்கும் குறைவானவர்கள் இக்குற்றத்தைச் சுமத்தினால் அவ்வாறு குற்றம் சுமத்தியவர் களுக்கு 80 கசையடி வழங்குமாறு இஸ்லாம் உத்தரவிடுகிறது.

இஸ்லாமிய ஆட்சி முறையில் தகுந்த சாட்சியங்களின்றி சில குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள முடியுமே தவிர நிரபராதிகள் தண்டிக்கப்படவே முடியாது என்பது தான் உண்மை.