நன்மையின் பக்கம் விரையுங்கள்
ரஹ்மத்தின் வாசல்கள் திறந்திருக்கும் அருள்மிக இம்மாதத்தில் நற்காரியங்கள் அதிகம் செய்வோம். குறிப்பாக ரமலான் மாதத்தின் கடைசி பத்துநாட்கள் நல்லறங்கள் கூடுதலாக ஈடுபடுவோம். ஆயிரம் மாதங்களை விட சிறந்த நாளாக்க் கருதப்படும் லைலத்துல் கத்ர் அன்று அதிகமதிகம் இறைதிருப்தியை ஏற்படுத்தும் காரியங்களில் ஈடுபட முயற்சிப்போம்.
நமது பாவங்கள் அழிக்கப்பட படைத்தவனிடம் நமது பாவங்களை முறையிட்டு நம்மை தூய்மைபடுத்திக் கொள்வோம்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்து விடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இந்த நபியையும் (முஹம்மதையும்) அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் இழிவுபடுத்தாத நாளில் அவர்களது ஒளி அவர்கள் முன்னேயும், வலப்புறமும் விரைந்து செல்லும். "எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவர்.
(அல்குர்ஆன் 66:8)
முழு மனதோடு நாம் செய்த பாவங்களை படைத்தவனிடம் முறையிட்டால் கண்டிப்பாக வல்ல அல்லாஹ் மன்னிப்பான். எனவே கடைசி பத்து இரவுகளில் அதிகமதிகம் நாம் இறைவனிடம் பாவமன்னிப்பு தேடவேண்டும்.
பாவமன்னிப்பை தேடித்தரும் தர்மத்தையும் அதிகமதிகம் செய்வோம்.
தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் 2:271)
வசதிபடைத்தவர்கள் அவர்கள் தகுதிக்கேற்பவும் வசதி குறைந்தவர்கள் அவர்களின் வசதிக்கேற்பவும் தர்மங்கள் செய்ய வேண்டும். மனத்தூய்மையோடு நாம் செய்யும் சிறிய தர்மம்கூட மலையளவு நன்மை பெற்றுத்தந்துவிடும்.
யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ -அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை- அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்துவிடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(புகாரி 1410)
இதைப்போன்று இரவு நேரங்களில் நம் குடும்பத்தினர் அனைவரும் தொழுகையில் ஈடுபடுத்த வேண்டும்.
(ரமளானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்!
(புகாரி 2024)
மொத்தத்தில் கடைசி பத்துநாட்களும் நல்லறங்களில் மூழ்கியிருக்க வல்ல அல்லாஹ் அருள்புரியட்டும்
No comments:
Post a Comment