பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, May 29, 2010

வட்டி


வட்டி



இன்று மக்கள் பெரும்பாலும் ஆடம்பர வாழ்க்கையையே விரும்புகின்றனர். இதன் காரணமாக, பொருளின் மீதுள்ள ஆசையும் பணத்தின் மீதுள்ள ஆசையும் மேலோங்கி விட்டது. பொருள்களின் மீதுள்ள ஆசையினால் ''தவணை முறை'' என்ற பெயரில் வட்டிக்குப் பொருளை வாங்குகின்றனர். இந்த வட்டி எனும் நரகப் படுகுழி எவ்வளவு ஆபத்தானது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வட்டியை வாங்கி உண்ணுபவன், அதனை உண்ணச் செய்பவன், அதற்கு சாட்சி கூறும் இருவர் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். இன்றும் அவர் அனைவரும் (குற்றத்தில்) சமமானவர்கள் என்றார்கள். நூல்: முஸ்லிம் 3258

ஒரு பொருளின் விலை நூறு ரூபாய் என்றால் அதைத் தவணை முறையில் வாங்கும் போது அந்தப் பொருளுக்கு வட்டியைப் போட்டுத் தருகின்றனர். இதனால் தவணை முறையில் வாங்கும் போது வட்டியைக் கொடுத்த குற்றத்திற்கு ஆளாகின்றோம். அல்லாஹ் தன் வேதத்தில் கூறுகின்றான்:

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். ''வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:275)

தவணை முறை என்ற பெயரில் மக்களைக் கவர்ந்து அவர்களை நரகத்தின் உறுப்பினர்களாக ஆக்க சில வியாபாரிகள் முனைகின்றனர். இதற்கு அதிகமாக விலை போகுபவர்கள் பெண்கள் தான். பெண்களே! உஷார்! நீங்கள் நரகத்தின் உறுப்பினர்களாக ஆகும் நிலை வேண்டுமா? பின்வரும் பொன்மொழியை சிந்தித்துப் பாருங்கள்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அதிக பொருட்கள் உடையவன் செல்வந்தன் அல்லன்; போதுமென்ற மனம் படைத்தவனே செல்வந்தன். நூல்:புகாரி 6446


ஒருவர் இஸ்லாத்தில் இணைந்து, போதுமென்ற தன்மையும் கொடுக்கப்பட்டு அல்லாஹ் வழங்கியதைப் போதுமாக்கி கொண்டால் அவர் வெற்றியடைந்து விட்டார் என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம் 1746

அடுத்து, பணம் தேவைப்பட்டவுடன் வீட்டிலுள்ள நகை, பொருள்களை அடைமானம் வைத்து வட்டிக்குப் பணம் வாங்குகின்றனர். இதுவும் மாபாதகச் செயல் தான். இதற்கு காரணம் அடைமானம் வைத்தால் அந்தப் பொருளை நாம் திருப்பிப் பெற்று விடலாம். அந்தப் பொருளை விற்று விட்டால் திரும்பப் பெறமுடியாது என்ற அவநம்பிக்கை!

ஆனால் பெரும்பாலும் அடகு வைக்கும் நகைகள் மூழ்கிப் போய், இறுதியில் ஏலத்திற்கு வருகிறது. மேலும் திருப்பும் நகையைக் கூட, அதன் மதிப்பை விடக் கூடுதலாக வட்டி கட்டித் தான் திருப்புகின்றனர். உதாரணமாக 5000 ரூபாய் மதிப்புள்ள நகையை அடகு வைத்து 3000 ரூபாய் வாங்குபவர், இறுதியில் வட்டி, குட்டி போட்டு 6000 அல்லது 7000 ரூபாய் கொடுத்து திருப்புகின்றனர். இதற்குப் பதிலாக 5000 ரூபாய்க்கு விற்று இருந்தால் இரண்டாயிரம் ரூபாய் இலாபம் என்பது யாருக்கும் தெரிவதில்லை.

மேலும் பொருளையும் நகையையும் தந்த அல்லாஹ், ஹராமான முறையில் பணம் பெறுவதை தவிர்த்துக் கொண்டு ஹலாலான முறையில் விற்று பணத்தைப் பெற்றால் அதை விடச் சிறந்ததைத் தருவான் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர் சிறந்த முஃமின் என்பதைப் பின்வரும் வசனம் எடுத்துக்காட்டும்!

யார் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வே போதுமானவன். (அல்குர்ஆன் 65:3)

ஒரு முஃமின் என்பவர் தொழுகையையும் நோன்பையும் மட்டும் கடைப்பிடிப்பவர் அல்லர். அல்லாஹ் தடை செய்ததை, தடுத்துக் கொண்டு மறுமை நாளின் தண்டனையை அஞ்சி வாழ்பவரே ஆவார்.

No comments:

Post a Comment