Ayyampet ALEEM
Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com
Ayyampet.
aleem_beatz@yahoo.com
Wednesday, September 8, 2010
சத்தியம் செய்யலாமா?
சத்தியம் செய்யலாமா?
அனைத்து மக்களிடமும் நேர்ச்சை செய்தல் எப்படி வழக்கமாக உள்ளதோ, அது போல் சத்தியம் செய்தலும் உள்ளது. தன்னை, தான் கூறும் வார்த்தைகளில், செய்யும் செயல்கள் உண்மையானவன் தான் எனக் காட்டிட இறைவன் மீது சத்தியமாக! என் தாயின் மீது சத்தியமாக! என் கண் மீது சத்தியமாக! இந்த வேதத்தின் மீது சத்தியமாக! என் குழந்தை மீது சத்தியமாக! என்று பல்வேறு முறைகளில், பலர் சத்தியம் செய்வர். சிலர் குழந்தைகளை தரையில் போட்டு அதை தாண்டி சத்தியம் செய்வர். இது போன்ற சத்தியம் செய்யும் பழக்கத்தில் முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல. குர்ஆன் மீதும், அன்னத்தின் (உணவின்) மீதும், அல்லாஹ் ரசூலுக்கு பொதுவில் என்றும், சத்தியம் செய்தல் இப்படி பலவிதமாக முஸ்லிம்களிடம் உள்ளன. இந்த சத்தியம் செய்யும் விஷயமாக இஸ்லாம் என்ன சொல்கிறது? என்பதை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் காண்போம்.
சத்தியம் செய்தல் ஆதி காலம் முதல் தொன்று தொட்டு வரும் பழக்கங்களில் உள்ளதாகும். இது மனிதனின் இயற்கை குணாதிசயங்களில் ஒன்றாகவும் உள்ளது. தான் கூறும் வார்த்தைகளை அம்மக்கள் நம்ப மறுக்கிறார்களே என்பதற்காக, இறுதியில் இதன் மீதாவது சத்தியம் செய்து நம்பச் செய்வோம் என்று கருதி, சத்தியம் செய்வதுண்டு, அல்லது சில விஷயத்தை வலுப்படுத்துவதற்காக சத்தியம் செய்வதுண்டு. சில அத்தியாவசிய தேவைகளுக்காக சத்தியம் செய்வதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
உதாரணமாக ஒருவன் பொருளை மற்றொருவன் அபகரித்துக் கொண்டான். பொருளைப் பறி கொடுத்தவனிடம் போதிய சான்று இல்லை. சாட்சிகள் இல்லையாயின் பொருளை தன் பொருள் தான் என உறுதிப்படுத்த சத்தியம் செய்யச் சொல்கிறது இஸ்லாம்.
எமன் நாட்டில் உள்ள நிலத்தில் எனக்கும் இன்னொருவருக்கும் வழக்கு இருந்தது. நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்த வழக்கை கொண்டு சென்றேன். உன்னுடையதுதான் என்பதற்கு உன்னிடம் ஆதாரம் உண்டா? எனக் கேட்டார்கள். நான் இல்லை என்றேன் அப்படியானால் உன்னுடைய எதிரி (யின் கைவசத்தில் அந்த நிலம் இருப்பதால்) அது தன்னுடையதே என்று சத்தியம் செய்யக் கோருவதே வழி என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்படியானால் அவர் சத்தியம் செய்யட்டும் என்று நான் கூறினேன்.
அறிவிப்பவர் :- அஷ்அஸ் (ரலி), நூல் :- முஸ்லிம்
இதுபோன்ற மிக அவசியமான சந்தர்ப்பங்களில் சத்தியம் செய்வதை இஸ்லாம் அனுமதித்தாலும், சில ஒழுங்கு முறைகளை இதில் வலியுறுத்துகிறது.
சத்தியம் செய்யும் முறை!
சத்தியம் எந்தப் பொருள் மீது வேண்டுமானாலும் எவர் மீது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. அல்லாஹ் மீது மட்டுமே சத்தியம் செய்யக் கட்டளையிடுகிறது.
ஒருவர் அல்லாஹ் அல்லாத (மற்ற)வை மீது சத்தியம் செய்தால் அவர் காஃபிராகி விட்டார் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு உமர் (ரலி), நூல் :- அபூதாவூத், திர்மிதீ, ஹாகிம்
ஒருவர் சத்தியம் செய்தால், அல்லாஹ் மீது தவிர சத்தியம் செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு உமர் (ரலி) நூல்கள் :- புகாரி, முஸ்லிம்
அல்லாஹ்வைக் கொண்டே தவிர சத்தியம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூஹ{ரைரா (ரலி) நூல்கள் :- அபூதாவூத், நஸயீ, இப்னுஹிப்பான், பைஹகீ
உமர் (ரலி) அவர்கள் தன் தந்தையைக் கொண்டு சத்தியம் செய்வதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தந்தைகள் மீது சத்தியம் செய்வதைத் தடை செய்து விட்டான். ஒருவர் சத்தியம் செய்தால், அவர் அல்லாஹ்வைக் கொண்டே சத்தியம் செய்யட்டும். அல்லது மவுனமாய் இருக்கட்டும்
என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு உமர் (ரலி) நூல்கள் :- முஸ்லிம், அஹ்மத், நஸயீ
ஒரு யூதப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கஃபாவின் மீது சத்தியமாக என்றும், அல்லாஹ்வும் நீங்களும் நாடினால்.... என்று உங்களை நோக்கி உங்கள் தோழர்கள் கூறுகிறார்கள். (இதன் மூலம்) நீங்கள் இணை வைக்கிறீர்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் கஃபாவின் ரப்பின் மீது சத்தியமாக என்று கூறும்படியும் அல்லாஹ்வும் நாடி, அதன் பின் நீங்களும் நாடினால்.. என்று தம்மை நோக்கி கூறும் படியும் அவர்களுக்கு (ஸஹாபாக்களுக்கு) கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் :- குதைலத் பின்த் ஸைஃபீ (ரலி) நூல்கள் :- அஹ்மத் நஸயீ, இப்னுமாஜா
ஒருவர் தான் சத்தியம் செய்யும் போது, லாத் உஸ்ஸாவை (மக்கா காஃபிர்களின் தெய்வங்களை) கொண்டு சத்தியம் செய்தால் அவர் (ஈமான் இழந்து விட்டார். எனவே) லாயிலாஹ இல்லல்லாஹ்
என்று கூறட்டும்! என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூஹ{ரைரா (ரலி) நூல் :- புகாரி
சிலைகள் மீதும், உங்கள் தந்தைகள் மீதும் சத்தியம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துர் ரஹ்மான் இப்னு ஸமுரா (ரலி) நூல் :- முஸ்லிம்
மேற்கொண்ட ஹதீஸ்கள் யாவும் இறைவன் பெயர் கொண்டு மட்டுமே சத்தியம் செய்ய அனுமதிக்கிறது. எனவே இன்று முஸ்லிம்கள், அந்த அவ்லியா மீது சத்தியமாக! இன்ன நாதா மீது சத்தியமாக! குழந்தை மீது சத்தியமாக! உணவு மீது சத்தியமாக! என்றெல்லாம் சத்தியம் செய்கின்றனர். அல்லாஹ் அல்லாத எந்தப் பொருளின் மீது சத்தியம் செய்தாலும் அவை கூடாது. அப்படிக்கூறி சத்தியம் செய்வது மாபெரும் குற்றம் என்பதையும் அறியலாம். எனவே அல்லாஹ்வின் பெயர் கூறி மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்.
குர்ஆன் மீது சத்தியம் செய்தல்!
குர்ஆன் என்பது இறைவன் இறக்கிய திருமறை தானே அதில் சத்தியம் செய்தால் தவறா? என்ற எண்ணம் தவறாகும். இன்றும் கூட நீதிமன்றங்களில் முஸ்லிம்கள் விசாரிக்கப்படும் போது, அதற்கு முன்பாக குர்ஆன் மீது சத்தியம் செய்யச் சொல்லி கேட்கிறார்கள். இவ்வாறு குர்ஆன் மீது சத்தியம் செய்வது கூடாததாகும். ஆனால் குர்ஆனை இறக்கியருளிய ரப்பின் மீது சத்தியமாக!
என சத்தியம் செய்வது தவறில்லை. இதை மேற்கண்ட குதைலத் பின்த் ஸைஃபீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்களின் சத்தியம்!
நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்துள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவு படுத்துகின்றன.
நபி (ஸல்) அவர்கள் இதயங்களை புரட்டுபவன் மீது சத்தியமாக! என்ற வார்த்தையை சத்தியம் செய்யும் போது அதிகம் குறிப்பிடுவார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு உமர் (ரலி) நூல்கள் :- இப்னுமாஜா, புகாரி, திர்மிதீ, அபூதாவூத் நஸயீ
முஹமமத் (ஸல்) சமுதாயமே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் (மட்டும்) நான் அறிந்தவற்றை அறிந்தால் அதிகம் அழுவீர்கள். குறைவாக சிரிப்பீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா (ரலி) நூல் :- புகாரி
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். உமர் (ரலி) அவர்கள் கையை, அவர்கள் பிடித்திருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே! என்னை நான் விரும்புவது தவிர, மற்ற எல்லா விஷயங்களையும் விட, நீங்கள் எனக்கு மிக விருப்பமானவர்கள்! என்று கூறினார்கள். ~அப்படி அல்ல! என் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக உம்மையும் விட நான் உமக்கு மிக விருப்பம் உள்ளவராக இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்களே எனக்கு என்னை விட மிக விருப்பமானவர்கள்! என்று உமர் (ரலி) கூறினார்கள். உமரே! இப்போது தான் (நீர் சரியாகக் கூறினீர்) என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லா இப்னுஹிஷாம் (ரலி) நூல் :- புகாரி
நபி (ஸல்) அவர்கள் சத்தியம் செய்துள்ளபடி அல்லாஹ்வின் மீதும் அல்லது அல்லாஹ்வின் தன்மைகள் மீதும் சத்தியம் செய்யலாம் என்பதை அறிய முடிகிறது.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து இஸ்லாத்தை பற்றி சில கேள்விகள் கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் அதற்கு விளக்கம் தந்தார்கள். அதன் பின் அந்த கிராமவாசி இதைவிட நான் எதனையும் அதிக மாக்கவும் மாட்டேன் குறைக்கவும் மாட்டேன்
என்று சொன்னார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் இவருடைய தந்தையின் மீது சத்தியமாக! இவர் உண்மை கூறினால் வெற்றியடைந்து விட்டார் என்று குறிப்பிட்டார்கள். (ஹதீஸ் சுருக்கம்)
அறிவிப்பவர் :- தல்ஹா இப்னு உபைதுல்லா (ரலி) நூல் :- முஸ்லிம்
இந்த ஹதீஸ்படி நபி (ஸல்) அவர்கள் ~தந்தை மீது சத்தியம் செய்து உள்ளார்களே? என்ற கேள்வி எழலாம். அல்லாஹ்வை தவிர வேறு எதன் மீது சத்தியம் செய்தல் கூடாது என்று ஹதீஸ்கள் உள்ளதாலும் பின்வரும் ஹதீஸை கவனிக்கும் போது மேற்கூறிய சம்பவம் தடை செய்யப்படுமுன் நடந்தது என்பது தெளிவாகிறது.
ஒரு யஹ{தி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்களும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறீர்கள் (எவ்வாறெனில்) கஃபாவின் மீது ஆணையாக! என்றெல்லாம் குறிப்பிடுகிறீர்களே? என்று கேட்டார். அதன்பின் நபி (ஸல்) அவர்கள் (கஃபாவின் மீது ஆணையாக! என்று சொல்லாமல்) கஃபாவின் இறைவன் மீது ஆணையாக! என்று கூறும்படி தோழர்களுக்கு கட்டளை யிட்டனர். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர் :- குதைலா (ரலி) நூல்கள் :- அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.
ஆரம்ப காலங்களில் அல்லாஹ் அல்லாதவை மீது சத்தியம் செய்யும் பழக்கம் இருந்து பின்பு அது மாற்றப்பட்டது என்பதற்கு இந்த ஹதீஸ் சான்றாகும்.
அல்லாஹ்வின் சத்தியம்
அல்லாஹ்வின் மீதும் அவனது தன்மைகள் மீதும் தான், மனிதர்கள் சத்தியம் செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்களும் அப்படித்தான் சத்தியம் செய்துள்ளனர் என்பதை மேலே குறிப்பிட்டோம். ஆனால் அல்லாஹ்வோ, காலம், குதிரை, அத்தி, ஸைத்தூன், ஸினாய்மலை, மக்கா, முற்பகல், இரவு, சூரியன், சந்திரன், வானம், பூமி, ஆத்மா, நட்சத்திரம், மறுமை நாள் இவைகள் மீது சத்தியம் செய்து 85, 86, 91, 93, 95, 100, 103 ஆகிய அத்தியாயங்கள் மற்றும் பல வசனங்களில் பல்வேறு செய்திகளை கூறுகிறான்.
திருமறை நாள்வழிகாட்டி என்பது அனைத்து முஸ்லிம்களும் ஒப்புக் கொண்ட உண்மையாகும். திருமறையி;ல் அல்லாஹ் செய்து காட்டியபடி நாம் ஏன் அல்லாஹ் அல்லாத மற்றவைகள் மீது சத்தியம் செய்யக்கூடாது
என சிலர் கேட்கின்றனர்.
இதற்குரிய பதிலை அறியும் முன், ஒரு முக்கிய விஷயத்தை விளங்கிக் கொண்டோமானால், பதில் தெளிவாக தெரிந்து விடும். சத்தியம் செய்தல் என்பது நம்மை விட உயர்வான ஒன்றைக் காட்டி அதன் மீது சத்தியமாக என்று கூறுவதாகும். இதன்படி நம்மை விட உயர்ந்த வல்ல அல்லாஹ்வின் மீது தான் நாம் சத்தியம் செய்ய வேண்டும். ஆனால், அல்லாஹ்வை விட வேறு சிறந்த பொருள் இல்லை. எனவே அல்லாஹ்வே சூரியன், சந்திரன் போன்ற தன் படைப்புகள் மீது சத்தியம் செய்கிறான் என்றால் சத்தியம் செய்தபின் கூறப்படும் சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவே, இந்த அபூர்வ படைப்பின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன். கியாமத் நாள் உண்மை என நம்புங்கள்
என்று குறிப்பிடுகிறான். இருப்பினும் இறைவன் கூறும் பின்வரும் வசனமே இதற்கு பதிலாகவும் அமையும்.
அவன் செய்பவைபற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது. ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (அல்குர்ஆன்:21:23)
எல்லா வல்லமையும் நிறைந்த அல்லாஹ்வின் செயல் பற்றி அவனது அடிமைகளான நாம் கேள்வி எழுப்ப இயலாது. எனவே, அவனது தூதர் நபி (ஸல்) அவர்கள் இறைவனல்லாத எந்த பொருள் மீதும் சத்தியம் செய்ய அனுமதிக்காததால் நாமும், அல்லாஹ்வின் மீதும் அவனது தன்மைகள் மீதும் மட்டும் சத்தியம் செய்ய வேண்டும்.
சத்தியத்தின் பலவகை
சத்தியம் செய்வது என்பது செய்யத் தகுதியுள்ள செயல் முறைதான், என்றாலும் கூட எதற்கெடுத்தாலும் சத்தியம், எதைப் பேசினாலும் சத்தியம் என்ற நிலை இருக்கக்கூடாது. இவ்வாறு அடிக்கடி சத்தியம் செய்யும் பழக்கம் பொய்யனிடம் மட்டும் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதுபற்றி அல்லாஹ்வும் கூறுகிறான்.
மேலும் இழிவு உள்ளவனான, அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும், வழிபடாதீர். (அத்தகையவன்) குறை கூறித்திரிபவன் - கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன். (அல்குர்ஆன்: 68:10,11)
எனவே, எந்த செயல் செய்தாலும், எந்தப் பேச்சு பேசினாலும் சத்தியம் செய்தல் என்பது கூடாது.
சத்தியத்தின் வகைகளை பற்றி தெரிந்து கொண்டு விட்டால் சத்தியத்தை அடிக்கடி பயன்படுத்தும் செயல் குறைய வாய்ப்புண்டு. வீண் சத்தியம், பொய் சத்தியம், முறையான சத்தியம் என்று மூன்று நிலைகளாக சத்தியத்தை பிரிக்கலாம்.
1. வீண் சத்தியம்
அடிக்கடி சிலர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் இதைத் தருகிறேன், செய்கிறேன் என்று வார்த்தைக்கு வார்த்தை சத்தியம் செய்ய வேண்டும் என்ற எண்ணமின்றி@ அல்லது கோப நிலையில் சத்தியத்திற்கு பயன்படும் வார்த்தைகளை கூறுவர்.
சத்தியம் என்பது இதைச் செய்தால் ஒழிய நம்ப மாட்டார்கள் என்ற நிலையில் மட்டுமே செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே சத்தியம் செய்வதற்கு நிய்யத்
அவசியமாகும்.
நிச்சயமாக! செயல்கள் அனைத்தும் எண்ணங்கள் கொண்டே (கவனிக்கப்படும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- உமர் (ரலி) நூல் :- புகாரி
எனவே சத்தியம் செய்யும் எண்ணம் (நிய்யத்) இன்றி செய்யப்படும் சத்தியம் அனைத்தும் வீண் சத்தியங்களாகும். இவைகள் சத்தியம் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
(யோசனையின்றி எண்ணமின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை குற்றம் பிடிக்கமாட்டான். (அல்குர்ஆன்: 2:22,5:89)
2. பொய் சத்தியம்
தவறான செயல்களை செய்து, அதை உறுதிப்படுத்த சத்தியத்தை பயன்படுத்துவதும், பொய்யான ஒரு செய்தியைக் கூறி அது உண்மையானதுதான் என கூற சத்தியத்தை பயன்படுத்துவதும், பிறர் பொருளை அபகரிக்க, ஒருவன் மீது அவதூறு கூற, பொய்க்குற்றச் சாட்டுசுமத்த, இப்படி தவறான காரியங்களை நிறைவேற்ற சத்தியத்தை பயன்படுத்துவதும் கூடாது. இது போன்ற நிலைகளில் பயன்படுத்தப்படும் சத்தியமே பொய் சத்தியம்
எனக்கூறப்படும். அல்லாஹ்வினாலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களாலும் கடுமையாக கண்டிக்கப்பட்ட செயல்பாடுகளில் இதுவும் ஒன்றாகும்.
“ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை விட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்றால், நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்கு சாதங்களாக்கிக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பது எல்லாம் இதன் மூலமாகத்தான்...” (அல்குர்ஆன்:16:92)
நீங்கள் உங்களுக்கிடயில் (சதி, துரோகம்) ஆகியவற்றுக்கு காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (அவ்வாறு செய்தால்) நிறைபெற்ற உங்களுடைய பாதம் சறுகி விடும். (அல்குர்ஆன்:16:94)
யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் (யாதொரு) நற்பாக்கியமும் இல்லை. அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். இன்னும் மறுமையில் அவர்கள் (கருணையுடன் பார்க்கவும் மாட்டான், அவர்களை (பாவத்தை விட்டும் பரிசுத்தமாக்கவும் மாட்டான், மேலும் அவர்களுக்கு நோவினை மிக்க வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன்:3:77)
(பொய்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமுடைய உரிமையை யார் பறிக்கிறானோ, அவனுக்கு அல்லாஹ் நரகத்தை விதியாக்கி விடுவான். மேலும் சுவர்க்கத்தை அவனுக்கு ஹராமாக்கி விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூஉமாமா (ரலி) நூல்கள் :- முஸ்லிம், அல்முஅத்தா (மாலிக்)
ஒரு முஸ்லிமுடைய பொருளைப் பறித்துக் கொள்வதற்காக யார் பொய்யான சத்தியம் செய்கிறாரோ, அவர் மீது அல்லாஹ் கோபமடைந்த நிலையில் தான் அவர் அல்லாஹ்வை சந்திப்பார் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) நூல் :- முஸ்லிம்
அல்லாஹ்விற்கு இணை வைத்தல், பெற்றோரை நோவினை செய்தல், (அநீதமாக) கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவை பெரும் பாவங்களாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லா இப்னு உமர் (ரலி) நூல் :- புகாரி
3. முறையான சத்தியம்
அடுத்து, முறையான சத்தியத்தை நாம் விளக்கவே தேவை இல்லை. முறையான சத்தியம் செய்ய தடை இல்லை என்பதற்கு போதிய சான்றுகளாக நாம் மேலே குறிப்பிட்ட வசனங்கள், ஹதீஸ்களே அமைந்துள்ளன. எனவே, ஒருவர் பொய் சத்தியம் செய்யக்கூடாது. எதற்கெடுத்தாலும் சத்திய வார்த்தைகளை கூறவும் கூடாது. பயன்படுத்தினால் அவை வீண் சத்தியங்களாகத் தான் கருதப்படும்
சத்தியத்தை முறிக்கலாமா?
அவசியமான சந்தர்ப்பங்களில் சத்தியம் செய்யும் நிலை ஏற்பட்டால் சத்தியத்தில் உறுதியாக இருக்க வேண்டும். சத்தியத்தை இடையில் முறிந்திட தடை வந்துள்ளது.
இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியம் செய்து, அதனை உறுதிப்படுத்திய பின்னர் அச்சத்தியத்தை முறிக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான். நீங்கள் (சத்தியத்தை முறிக்கும் விசயத்தில் நூலை நூற்று நன்கு முறுக்கேறிய பின் அதை துண்டு துண்டாக்கிவிடும் (மதிகெட்ட) பெண்ணுக்கு ஒப்பாகி விடாதீர்கள்.
(அல்குர்ஆன்:16:91,92)
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தங்கள் மனைவியரை ஒரு மாதத்திற்கு நெருங்க மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு பின்பு 29வது நாளிலேயே மனைவியாரிடம் செல்கிறார்கள். அருகிலிருந்தோர், இறைத்தூதர் அவர்களே! ஒரு மாதம் முடியவில்லையே! என்று கூற இம்மாதம் 29 நாள் மட்டும் தான் என்று நபி (ஸல்) கூறினார்கள் என்ற கருத்தில் அனஸ், உம்முசலமா, இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹ{ அன்ஹ{ம்) அவர்களால் அறிவிக்கப்பட்டு புகாரி, முஸ்லிம், அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹதீஸ்படி சத்தியத்தை நிறை வேற்றுவதில் நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் தோழர்களுக்கும் இருந்த ஆர்வத்தை நம்மால் விளங்க முடிகிறது.
இருப்பினும் சில வேளைகளில் சத்தியத்தை முறித்திட இஸ்லாம் அனுமதிக்கிறது. அதாவது ஒருவன், ~நான் இதைத் தவிர வேறு எதையும் வாங்க மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறி விடுகிறான். அதன் பனி அதை விட சிறந்த ஒரு பொருள் அவன் வசம் கிடைக்கிறது. என்றால், தான் செய்த சத்தியத்தை முறித்து விட்டு, அதற்கான பரிகாரம் செய்துவிட்டு, சிறந்த பொருளை வாங்கிக் கொள்ளலாம். அனைத்து விஷயங்களுக்கும் சத்தியத்தை முறிப்பதில் நாம் கூறிய இந்த உதாரணம் பொருந்தும்.
இன்னும் நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால் நீங்கள் நற்கருமங்கள் செய்தல் இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாக செய்து விடாதீர்கள். அல்லாஹ் (அனைத்தையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கிறான்.(அல்குர்ஆன்:2:224)
அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சிலபோது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான். மேலும், அல்லாஹ் உங்கள் எஜமானன், மேலும் அவன் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன். (அல்குர்ஆன்:66:2)
நீ (ஒரு விஷயத்தில்) சத்தியம் செய்து அதைவிட சிறந்ததாக மற்றொன்றை நீ அறிந்தால், அந்த சிறந்ததை செய், உன் (முறித்த) சத்தியத்திற்கு பரிகாரம் செய்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துர்ரஹ்மான் இப்னு ஸமுரா (ரலி) நூல் :- புகாரி, முஸ்லிம், நஸயீ, அபுதாவூத்
உங்களில் ஒருவர் சத்தியம் செய்து, அதைவிட சிறந்ததாக மற்றொன்றை கண்டால் அவர் சத்தியத்திற்கு பரிகாரம் செய்து விட்டு, அந்த சிறந்த செயலை செய்யட்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :-அதீ இப்னு ஹாதிம் (ரலி), அபூஹ{ரைரா (ரலி) நூல் :- முஸ்லிம், அஹ்மத், திர்மிதீ
எனவே, சத்தியம் செய்தால் அதில் உறுதியாக இருக்க வேண்டும். சில நேரங்களில் அவசியம் என்ற நிலை இருப்பின் முறித்துவிடுவதில் தவறில்லை.
சத்தியத்தை முறித்தால்....!
ஒருவர் தான் செய்த சத்தியத்தை முறித்திட வேண்டியது ஏற்பட்டால், அவர் தான் செய்த சத்தியத்திற்கு பரிகாரமாக, பத்து ஏழைகளுக்கு உணவளித்தல் வேண்டும். அல்லது அவர்களுக்கு ஆடைதர வேண்டும். அல்லது ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இம்மூன்றுக்கும் இயலாது எனில்@ மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்.
சத்தியத்தின் பரிகாரமாவது, நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு கொடுத்து வரும் ஆகாரத்தில் நடுத்தரமானதை - பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (இதற்கான வசதியை ஒருவன் பெற்றிருக்காவிட்டால், மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது@ இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும். உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக்காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை உங்களுக்கு இவ்வாறு விளக்குகின்றான். (அல்குர்ஆன்:5:89)
சத்தியம் செய்யும் எண்ணத்துடன், அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் செய்யப்படும் முறையான சத்தியங்களை முறித்தால் தான் பரிகாரம் காண வேண்டும். அது அல்லாத மற்ற வீணான சத்தியங்களை செய்தால் பரிகாரம் தேவை இல்லை. இருப்பினும் பொய் சத்தியம் செய்தால் இறைவனிடம் தவ்பா செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. காரணம் அது மிகப் பெரும் பாவமாகும்.
(யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால், உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப் பற்றி உங்களைக் குற்றம் பிடிப்பான். இன்னும் அல்லாஹ் மன்னிப்பவனாக பொறுமையுடையவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்:2:25)
சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான். எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்.(அல்குர்ஆன்:5:99)
பொய் சத்தியம் செய்தல் பெரும் பாவமாகும் என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள்.
(புகாரியில் உள்ளதின் சுருக்கம்)
இன்ஷா அல்லாஹ் கூறினால்....!
சத்தியம் செய்யும் போது ஒருவர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இன்ஷா அல்லாஹ் இதைச் செய்வேன் என்று இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்ற வார்த்தையை சேர்த்துக் கூறினால் அவர், தான் செய்த சத்தியத்திற்கு மாற்றமாக நடந்து கொண்டாலும் தவறில்லை. அவர் சத்தியம் செய்தாலும் கூட இன்ஷா அல்லாஹ் கூறியதால், அல்லாஹ் நாடவில்லை@ அதனால் தான் அதைச் செய்யவில்லை
என்று கூறிவிட வாய்ப்புண்டு.
நிச்சயமாக என் மனைவியிடம், ஒரே இரவில் (உடலுறவுக்காக) சுற்றி வருவேன். அவர்கள் ஒவ்வொருவரும் இறைவழியில் பாடுபடும் குழந்தையை பெற்றெடுப்பர் என்று அல்லாஹ்வின் நபி சுலைமான் (அலை) அவர்கள் கூறினார்கள். (அருகிலிருந்த) அவரது தோழர் அல்லது மலக்கு, இன்ஷா அல்லாஹ் என்றும் கூறுங்கள் என்று கூறினார். ஆனால் சொல்ல மறந்துவிட்டார்கள். இருப்பினும்@ அந்த பெண்களில் ஒருவரைத் தவிர மற்ற எவரும் குழந்தை பெறவில்லை. (அந்த ஒரு பெண்ணும்) ஊனமுற்ற குழந்தையைப் பெற்றார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, சுலைமான் (அலை) அவர்கள் மட்டும் இன்ஷா அல்லாஹ் கூறி இருந்தால் சத்தியத்தை முறித்தவராக ஆகமாட்டார்கள். அவருக்கு அவரது தேவையில் ஒரு வழி இருந்திருக்கும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூஹ{ரைரா (ரலி) நூல் :- முஸ்லிம்
-------->ஆசிரியர் : கே. எம். முகம்மது முகைதீன் - கணனியாக்கம் : S. B. பாத்திமா ருக்ஷானா
http://www.satyamargam.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment