பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, December 10, 2009

உபரியான வணக்கங்கள் (Sunnath Prayers)

உபரியான வணக்கங்கள்

அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக இந்த மனித சமுதாயத்திற்கு சில வணக்கங்களைக் கடமையாக ஆக்கியுள்ளான். இந்தக் கடமையான வணக்கங்களை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றும் போது அதற்காக அல்லாஹ் நற்கூலியும், அவற்றை நிறைவேற்றாதவர்களுக்கு தண்டனையும் வழங்குகின்றான்.

நஜ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. நபி (صلى الله عليه وسلم அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப்பற்றி கேட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், "இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளை தொழுகைகள்" என்றார்கள். உடனே அவர், "அந்தத் தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள்,"நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறில்லை"என்றார்கள்

அடுத்து, "ரமலான் மாதம் நோன்பு நோற்பதும் ஆகும் "என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். உடனே அவர்,அதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள், "நீர் விரும்பி செய்தாலே ஒழிய வேறில்லை என்றார்கள்.

அவரிடம் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஸகாத் பற்றியும் சொன்னார்கள். அதற்கு அவர், "அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது கடமையா?" என்றார். அதற்கு அவர்கள் "நீராக விரும்பிச் செய்தாலே தவிர வேறு தர்மங்கள் கடமை இல்லை" என்றார்கள். உடனே அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன்" என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், "இவர் கூறியதற்கு ஏற்ப நடந்து கொண்டால் வெற்றி அடைந்து விட்டார்" என்று கூறினார்கள். அறிவிப்பவர் : தல்ஹா பின் உபைதுல்லாஹ்(ரழி)நூல் : புகாரி

இந்த ஹதீஸில் கடமையைத்தவிர வேறு எதையும் செய்ய மாட்டேன் என்று கூறிய ஒருவரை வெற்றியாளர் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறுவதிலிருந்து கடமையான வணக்கங்களை ஒருவர் நிறைவேற்றுவதே மறுமையில் வெற்றி பெறுவதற்குப் போதுமானது என்பதை அறிய முடிகின்றது. எனினும் ஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக உபரியான வணக்கங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளதோடு ஆர்வ மூட்டியும் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் நபி صلى الله عليه وسلم அவர்கள் இது போன்ற உபரியான வணக்கங்களை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன் . நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை. [ஏனெனில்] என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன். அறிவிப்பவர் : அபூஹ"ரைரா(ரலி) நூல் : புகாரி

உபரியான வணக்கங்கள் புரிவது இறைவனிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தி நமது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வதற்கு வழி வகுக்கும் என்பதை மேற்கண்ட ஹ்தீஸ் விளக்குகின்றது. கடமையான வணக்கங்களை நிறைவேற்றும் போது மனிதர்கள் என்ற முறையில் குறைபாடுகள் எற்படலாம். இந்தக் குறை பாடுகள் அல்லாஹ்விடத்தில் நம்மைக் குற்றவாளிகளாக ஆக்கிவிடக் கூடாது. எனவே கடமையான வணக்கங்களில் எற்படும் குறைகளுக்கு ஒரு பரிகாரம் தேவைப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கற்றுத் தந்த வழியில் உபரியான வணக்கங்கள் புரிவது கடமையான வணக்கங்களில் எற்படும் குறைகளை ஈடுசெய்வதாக அமைந்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறுகின்றார்கள் :

நிச்சயமாக ஒர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றி தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி," என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்" என்று அல்லாஹ் கூறுகின்றான். அறிவிப்பவர் : தமீமுத் தாரி[ரலி] நூல் : தாரமீ

கடமையான வணக்கங்களில் எற்படும் குறைகளை உபரியான வணக்கங்கள் நீக்கி வடுவதுடன் இறைவனிடத்தில் நெருக்கத்தை எற்படுத்துபவையாகவும் அமைந்துள்ளன. எனவே கடமையான வணக்கத்தை நிறைவேற்றி விட்டோம் என்று அலட்சியமாக இருந்து விடாமல் உபரியான வணக்கங்களையும் நிறை வெற்றி அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்களாக நாம் ஆக வேண்டும்.

கடமையான தொழுகையின் முன் பின் சுன்னத்துகள்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்கும் முன்போ அல்லது பின்போ வழமையாக சுன்னத் தொழுகைகளைத் தொழுது வந்துள்ளனர்.இவை தவிர குறிப்பிட்ட பெயரையுடைய, உதாரணமாக லுஹா தொழுகை,மழைத் தொழுகை இன்னும் இது போன்ற பெயர்களில் அமைந்த சுன்னத் தொழுகைகளும் உள்ளன.

ஃபஜ்ருடைய முன் சுன்னத்

ஃபஜ்ருடைய முன் சுன்னத் இரண்டு ரகஅத்துக்களாகும். நபி صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருடைய சுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரியான தொழுகை க்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா [ரலி] நூல்: புகாரி

பஜ்ருடைய இரண்டு ரகஅத்துகள் இந்த உலகம் இன்னும் அதில் உள்ளவை அனைத்தை விடவும் மிகச் சிறந்தவையாகும் என்று நபி صلى الله عليه وسلم] அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அயிஷா[ரலி] நூல் : முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருக்கு முன்சுன்னத் தொழும் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளதாலும், அத்தொழுகையை சிறப்பித்துக் கூறியுள்ளதாலும் பஜ்ருடைய முன் சுன்னத்தை நாம் தவறவிடாமல் கவனமாகத் தொழ வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருடைய இரண்டு ரகஅத்துகளைத் தொழுபவர்களாக இருந்தனர். அவ்விரண்டு ரகஅத்துகளிலும் சூரத்துல் பாத்திஹாவை ஒதினார்களா என்று நான் எண்ணுமளவுக்கு சுருக்கமாகத் தொழுவார்கள். அறிவிப்பவர் : அயிஷா[ரலி] நூல்: புகாரி முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் இகாமத் தனது காதுகளில் விழுந்து விட்டதை போல் சுபுஹ் தொழுகையின் முன் இரண்டு ரகஅத்துகளை (விரைந்து)தொழுவார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர்[ரலி] நூல் : புகாரி

பஜ்ருடைய சுன்னத்தில் ஒத வேண்டியவை

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருடைய இரண்டு ரக அத்துகளில் குல்யா அய்யுஹல் காஃபிரூன் மற்றும் குல்ஹு"வல்லாஹு" ஆகிய அத்தியாயங்களை ஒதுவார்கள். அறிவிப்பவர் : அபூஹ"ரைரா[ரலி] நூல்: முஸ்லிம்

வலப்புறமாகப் படுக்கவேண்டுமா?

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ருடைய சுன்னத் தொழுததும் வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா[ரலி] நூல்: புகாரி

நபி صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ருடைய சுன்னத் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். இல்லாவிட்டால், தொழுகைக்கு அழைக்கும் வரை படுத்துக்கொள்வார்கள். அறி: ஆயிஷா [ரலி] நூல் : புகாரி

பஜ்ருக்கு முன் தொழாவிட்டால்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் ஒருவரை சுபுஹ"க்குப் பின் இரண்டு ரக அத்துகள் தொழக் கண்டார்கள் அப்போது அவர்கள்,"சுபுஹ் தொழுகை இரண்டு ரகஅத்துகள்தான்" என்று சொன்னார்கள். அதற்கு அவர்,"சுபுஹ"க்கு முந்திய இரண்டு ரகஅத்துகளைத் தொழவில்லை, அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்" என்று பதிலளித்ததும், நபி صلى الله عليه وسلم அவர்கள் மவ்னமாகி விட்டார்கள். அறிவிப்பவர் : கைஸ் பின் அம்ர்[ரலி] நூல்: திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா

யார் ஃபஜ்ருடைய(சுன்னத்) இரண்டு ரகஅத்துகளைத் தொழவில்லையோ அவர் அவ்விரு ரகஅத்துகளையும் சூரியன் உதித்தபின் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ"ரைரா[ரலி] நூல்: திர்மிதி

லுஹருடைய முன் சுன்னத்

நான் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரகஅத்துகளையும், லுஹருக்கு பின் இரண்டு ரகஅத்துகளையும், மக்ரிபுக்கு பின் இரண்டு ரக அத்துகளையும், இஷாவுக்கு பின் இரண்டு ரகஅத்துகளையும், ஜும்ஆ வுக்குப் பின் இரண்டு ரகஅத்துகளையும் தொழுது இருக்கிறேன். மக்ரிப், இஷா (தொழுகையினுடைய சுன்னத்)தொழுகைகளை நபி صلى الله عليه وسلم அவர்களது வீட்டில் தொழுது இருக்கிறேன். அறிவிப்பவர் இப்னு உமர்[ரலி] நூல்: புகாரி

நான் ஆயிஷா[ரலி] அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களின் உபரியான வணக்கத்தை பற்றி வினவினேன். அதற்கு அவர்," நபி صلى الله عليه وسلم அவர்கள் என்னுடைய வீட்டில் லுஹருக்கு முன் நான்கு ரகஅத்துகள் தொழுது விட்டு, புறப்பட்டுச் சென்று மக்களுக்குத் தொழவிப்பார்கள். பிறகு என்னுடைய வீட்டுக்கு வந்து இரு ரகஅத்துகள் தொழுவார்கள்" என்று விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் பின் ஷிக்கீர்[ரலி] நூல் : முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் லுஹர் தொழுகைக்குமுன் நான்கு ரகஅத்து களையும், ஃபஜ்ரு தொழுகைக்கு முன் இரண்டு ரகஅத்துகளையும் விடவே மாட்டார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா[ரலி] நூல் : புகாரி

நபி صلى الله عليه وسلم அவர்கள் லுஹருக்கு முன்பு நான்கு ரகஅத்துகளைத் தொழவில்லை என்றால் அந்நான்கு ரகஅத்துகளை லுஹருக்குப் பின் தொழுவார்கள். அறிவிப்பவர் : அயிஷா[ரலி] நூல் : திர்மிதி


லுஹருடைய பின் சுன்னத்

நான் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரகஅத்துகளையும், லுஹருக்கு பின் இரண்டு ரகஅத்துகளையும், மக்ரிபுக்கு பின் இரண்டு ரகஅத்துகளையும், இஷாவுக்கு பின் இரண்டு ரக அத்துகளையும், ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரகஅத்துகளையும் தொழுது இருக்கிறேன். மக்ரிப், இஷா (தொழுகையினுடைய சுன்னத்) தொழுகைகளை நபி صلى الله عليه وسلم அவர்களது வீட்டில் தொழுது இருக்கிறேன். அறிவிப்பவர் : இப்னு உமர்[ரலி] நூல் : புகாரி

யார் லுஹருக்கு முன்பு நான்கு ரகஅத்துகளும் பின்பு நான்கு ரகஅத்துகளும் தொழுகின்றாரோ அவருக்கு நரகத்தை அல்லாஹ் தடுத்து விடுகிறான் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் செவியுற்றேன். அறிவிப்பவர் : உம்மு ஹபீபா[ரலி] நூல் : திர்மிதி

அஸருடைய முன் சுன்னத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் அஸருக்கு முன் நான்கு ரகஅத்துகள் தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர் : அலி[ரலி] நூல் : திர்மிதி, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா

நபி صلى الله عليه وسلم அவர்கள் அஸருக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள். அறிவிப்பவர்: அலி[ரலி] நூல்: அபூதாவூத்

மக்ரிபுடைய முன் சுன்னத்

மக்ரிபுக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுங்கள்! மஃரிபுக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுங்கள்! விரும்புகிறவர் மஃரிபுக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுங்கள்! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகப்பல்(ரலி) நூல்:அஹ்மத்,புகாரி,அபூதாவூத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் மக்ரிபு தொழுகைக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள். அறிவிப்பவர் : அப்துல்லஹ் பின் முகப்பல்[ரலி]நூல் : இப்னு ஹிப்பான்

மஃரிபுடைய பின் சுன்னத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் மக்ரிபுக்குப் பின் இரண்டு ரகஅத்துகள் தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: ஆயிஷா[ரலி] நூல்: முஸ்லிம்,அஹ்மத், அபூதவூத்,திர்மிதி

இஷாவுடைய முன் சுன்னத்

இஷாவுக்கு முன்சுன்னத் உள்ளதா என்பதற்கு நேரடியாக எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை. ஆயினும் ஒவ்வொரு தொழுகைக்கும் முன் சுன்னத் இருக்கின்றது என்று பொதுவாக ஹதீஸ் உள்ளதால் அதனடிப்படையில் இஷாவுக்கு முன் சுன்னத் தொழலாம். ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு. விரும்பியவர்கள் தொழலாம் என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகப்பல்[ரலி] நூல் : புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயி

இஷாவுக்குப் பின் சுன்னத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் இஷாவுக்குப்பின் இரண்டு ரகஅத்துகள் தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: இப்னு உமர்[ரலி] நூல்: புகாரி,முஸ்லிம், அஹ்மத்.

ஜும்ஆவுக்குப் பின் சுன்னத்


இப்னு உமர்(ரலி) அவர்கள் ஜும்ஆ தொழுகையை நீட்டித் தொழுவார்கள். ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்களை தன் வீட்டில் தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் இதை செய்தார்கள் என்றும் கூறுவார்கள். அறிவிப்பவர்: நாபிஃ நூல்: அபூதாவூத்

உங்களில் ஒருவர் ஜும்ஆ தொழுதால் அதன் பின்பு நான்கு ரக்அத்துகள் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம், திர்மிதி, நஸயீ, அபூதாவூத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் பள்ளியில் தொழுதால் நான்கு ரக்அத்தும், வீட்டில் இரண்டு ரக்அத்தும் தொழுவார்கள் என அபூதாவூதில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இரண்டிரண்டாகத் தொழுதல்

இரவிலும் பகலிலும் இரண்டிரண்டாகத் தொழ வேண்டுமென்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்:நஸயீ,தாரமீ

உங்கள் இல்லங்களில் சில தொழுகைகளைத் தொழுங்கள். அவற்றை அடக்கஸ்தலங்களாக ஆக்கி விடாதீர்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி

தஹிய்யத்துல் உலூ

ஒரு ஃபஜ்ருத் தொழுகையின் போது பிலால் (ரலி)யிடம் "பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறுவீராக! ஏனெனில் உமது செருப்போசையை சுவர்க்கத்தில் நான் கேட்டேன்" என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு பிலால் (ரலி) "இரவிலோ பகலிலோ நான் உலூ செய்தால் அவ்வுலூவின் மூலம் நான் தொழ வேண்டும் என்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இது தான் நான் செய்த செயல்களில் சிறந்த செயல்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி

தஹிய்யத்துல் மஸ்ஜித்

மக்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் அமர்ந்திருக்கும் போது நான் பள்ளிக்குள் நுழைந்து உட்கார்ந்து விட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள், "நீ உட்காருவதற்கு முன்பாக இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருக்க எது தடையாக அமைந்தது" என்று கேட்டார்கள்.

அதற்கு,"நான் அல்லஹ்வின் தூதரே! நீங்கள் உட்கார்ந்து இருப்பதைக் கண்டேன். மக்களும் உட்கார்ந்து இருக்கின்றார்கள். (அதனால் நான் உட்கார்ந்து விட்டேன்)" என்று பதில் சொன்னேன்.

உங்களில் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்ததும் இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ

லுஹா தொழுகை

உங்களில் ஒருவர் தனது எலும்பு மூட்டுகளுக்காக தர்மம் வழங்க வேண்டும்.

(நீங்கள் கூறுகின்ற) ஒவ்வொரு சுபுஹானல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு லாயிலாஹ இல்லல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு தக்பீரும் தர்மமாகும். நன்மையை ஏவுவதும் தர்மமாகும். தீமையைத் தடுப்பதும் தர்மமாகும். முற்பகல் நேரத்தில் இரண்டு ரக்ஆத்துகள் தொழுவது இவை அனைத்திற்கும் போதுமான தாகும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம், அபூதாவூத்

யார் உலூச் செய்தவராக கடமையான தொழுகைக்குப் புறப்பட்டு வருகின்றாரோ அவரது கூலி இஹ்ராமுடன் ஹஜ் செய்தவரின் கூலியை போன்றதாகும். யார் லுஹா தொழுகையைத் தவிர வேறு எதற்காகவும் தன்னை சிரமப் படுத்திக் கொள்ளாமல் புறப்பட்டு வருகிறாரோ அவரது கூலி உம்ரா செய்தவரின் கூலியைப் போன்றதாகும் இரு தொழுகைகளுக்கிடையே எவ்வித தீமையான காரியமும் இல்லாமல் ஒரு தொழுகைக்குப்பின் இன்னொரு தொழுகையைத் தொழுபவரின் தொழுகையானது இல்லியீன்களில் பதிவு செய்யப்படுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா(ரலி) நூல்: அபூதாவூத்

கிரகணத் தொழுகை

நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் இருந்தோம். அப்போது சூரிய கிரகணம் ஏற்ப்பட்டது. உடனே, நபி صلى الله عليه وسلم அவர்கள் மேலாடை இழுபட(வேகமாக)பள்ளிக்குள் நுழைந்தார்கள் கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்துகள் தொழவித்தார்கள். எவரது மரணத்துக்காகவும் சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை. எனவே அவ்விரு கிரகணங்களையும் காணும் போது தொழுங்கள். உங்களுக்கு ஏற்ப்பட்டது விலகும் வரை துஆச் செய்யுங்கள்என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா(ரலி) நூல்:புகாரி


நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகைக்கு தாயாராகுங்கள்) என்று பிரகடனம் செய்யப்பட்டது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமிர் நூல்:புகாரி, முஸ்லிம்

பயணத்திலிருந்து வந்ததும் தொழுகை

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தால் முதலில் பள்ளி வாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக்(ரலி) நூல்: புகாரி

No comments:

Post a Comment