பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, September 2, 2019

ஸிஹ்ரு - சூனியம்* (Part -9)

*ஸிஹ்ரு - சூனியம்* (Part -9)

நபிகளாருக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தின் முடிச்சுக்களை அவிழ்க்கும் முன்பாக விதியைப் பற்றி பார்ப்போம்.

ஒரு மனிதனின் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட அனைத்தும் முன்கூட்டியே எழுதப்பட்டுவிட்டது என்பதுதான் விதி.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஒருவனுக்கு நிகழும் இன்பம் துன்பம் அனைத்தும் முன்கூட்டியே எழுதப்பட்டுவிட்டன என்பதுதான் ஒவ்வொரு முஸ்லிமின் நம்பிக்கையாக இருக்கவேண்டும்.

*இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது* . (57:22)

எல்லாமே விதிப்படியே நடக்கிறது என்பதால் "வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவது" என்ற ரீதியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளக் கூடாது.

இன்பம் வரும்போது அல்லாஹ்வை நினைத்துப் புகழ வேண்டும். துன்பம் வரும்போது அல்லாஹ்வை நினைத்து அவனிடமே பிரார்த்தனை செய்யவும் வேண்டும். அந்த துன்பத்தை அல்லாஹ் நாடும்போது நீக்குவான் என்றும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவன் நாடினால் அந்த துன்பத்தை உடனேயும் நீக்குவான் அல்லது, தாமதமாகவும் நீக்குவான் அல்லது, நீக்காமலும் இருப்பான். அந்த துன்பத்தை பொறுத்துக்கொண்டால் மறுமை வாழ்க்கை எளிதாக இருக்கும் என்று நம்ப வேண்டும்.

"ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 5641)

இவையெல்லாம் விதி தொடர்பான ஒரு முஸ்லிமின் நம்பிக்கைகள். அடுத்து முக்கியமானவன் ஒருவன் இருக்கிறான். அவன்தான் இப்லீஸ்.

அல்லாஹ் ஆதம்(அலை) அவர்களை படைத்தற்குப் பிறகு வானுலகத்தில் இருந்தவர்களை அவருக்கு ஸஜ்தாச் செய்ய அல்லாஹ் கட்டளையிட்டான். அனைவரும் ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்தனர். ஆனால், ஒருவன் மட்டும் ஸஜ்தாச் செய்யவில்லை. அவன்தான் "இப்லீஸ்".

அவன் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற மறுத்ததால் "ஷைத்தான்" ஆக மாறினான். தனது கட்டளையை நிறைவேற்றாத எந்த ஒன்றையும் அழிக்க ஆற்றல்கொண்ட அல்லாஹ் ஷைத்தானாக மாறிவிட்ட அவனை அழிக்காமல்
அவகாசம் கொடுத்தான்.

கியாமத் நாள் வரைக்கும் தன்னை அழித்துவிடாமல் தனக்கு  அவகாசம் அளிக்குமாறும், அவ்வாறாக அவகாசம் அளித்தால் ஆதமின் சந்ததிகளை வழிகெடுப்பேன் என்றும் இப்லீஸ் அல்லாஹ்விடம் கூறினான். (15:36, 38:79, 7:14, 17:62)

இப்லீஸிற்கு கியாமத் நாள் வரைக்கும் அல்லாஹ் அவகாசம் கொடுத்தான். (15:38, 38:71, 7:15)

"உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் கொள்! உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்! பொருட்செல்வத்திலும், மக்கட்செல்வத்திலும் அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.)"... (17:64)

இப்லீஸிற்கு அனைத்து வாய்ப்புகளையும் அல்லாஹ் கொடுத்துவிட்டான். ஆனால், தான் நாடியவர்களை மட்டும் இப்லீஸால் வழிகெடுக்க முடியாது என்றும் அல்லாஹ் கூறிவிட்டான்.

"உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன்; அவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்' என்று அவன் (இறைவனிடம்) கூறினான்...(4:119)

கியாமத் நாள் வரைக்கும் தங்குதடையின்றி செயல்படக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் இப்லீஸிற்கு அல்லாஹ் அளித்துவிட்டான்.

ரைட். விதியைப் பார்த்தோம், மற்றும் ஷைத்தானாக மாறிய இப்லீஸையும் பார்த்தோம்.

இதில் நாம் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால்...

செயல்கள் அனைத்தும் விதிப்படி நடக்கின்றன. அவ்வாறாக விதியின்படி நடக்கும் செயல்களில் அது நற்செயல்களாக இருந்தால் அது "அல்லாஹ்வின் செயல்" என்றும், தீய செயல்களாக இருந்தால் அது "ஷைத்தானின் செயல்" என்றும் கூறுவது முஸ்லிம்களின் நடைமுறையாக இருக்கிறது.

ஒருவன் நேர்வழி பெற்றால் அது "அல்லாஹ்வின் செயல்" என்றும், அவன் வழிகெட்டால் அது "ஷைத்தானின் செயல்" என்றும் அழைக்கப்படுகிறது.

மக்களை வழிகெடுக்கும் அனைத்தும் "ஷைத்தானின் செயல்கள்" தான்.

இணைவைப்பு ஷைத்தானின் செயலே.
விபச்சாரம் ஷைத்தானின் செயலே.
திருட்டு ஷைத்தானின் செயலே.
கொலை ஷைத்தானின் செயலே.
சோதிடம் ஷைத்தானின் செயலே.

இணைவைப்பு, விபச்சாரம், திருட்டு, கொலை, சோதிடம் போன்றவைகளில் ஈடுபடும் ஒருவனை அவன் அல்லாஹ்வின் நாட்டத்தால் அவற்றில் ஈடுபடுகிறான் என்று முஸ்லிம்கள் கூறுவதில்லை. அந்த செயல்கள் விதிப்படி நடந்திருந்தாலும் அவற்றை அல்லாஹ்வுடன் இணைத்துக் கூறுவது அவனது கண்ணியத்திற்கு இழுக்காக கருதப்படும்.

மேற்படி தீய செயல்களில் ஈடுபடும் அவனை ஸைத்தானின் வலையில் விழுந்து விட்டான் என்றுதான் முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.

மேற்படி தீமைகள் போன்றே சூனியமும் ஷைத்தானின் ஒரு செயலே.

ஒருவனின் உள்ளத்தில் விபச்சாரத்தை அழகாக்கிக் காட்டி அவனை வழிகெடுப்பது போலவே சூனியத்தையும் அழகாக்கிக் காட்டி ஷைத்தான் வழிகெடுக்கிறான்.

அல்லாஹ் நாடினால் விபச்சாரம் எனும் ஷைத்தானிய செயல் நடக்கும் என்று முஸ்லிம்கள் கூறுவதில்லை.

அதுபோலவே, அல்லாஹ் நாடினால் சூனியம் எனும் ஷைத்தானிய செயல் நடக்கும் என்றும் முஸ்லிம்கள் கூறுவதில்லை.

இதை மீறி, "அல்லாஹ் நாடினால் சூனியம் நிகழும்" என்று கூறிய ஒரே முஸ்லிம் குழு தமிழ் பேசும் ஸலபுகள் மட்டுமே.

சூனியத்தில் ஸலபுகள் தடுமாறுவதற்கு நியாயமான காரணமும் இருக்கிறது. நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் ஒரு முக்கியமான காரணம். அதை உண்மைப்படுத்துவது போல் நிகழும் பல அமானுஸ்யங்களும் ஸலபுகளை சூனிய முடிச்சில் சிக்க வைக்கின்றன.

சூனியம் என்ற ஷைத்தானிய செயல் எப்படி நிகழ்கிறது என்பதில் உள்ள முடிச்சை அவிழ்த்து விட்டு "நபிகளாருக்கு சூனியம்" என்ற சம்பவத்தின் முடிச்சையும் அவிழ்ப்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.

No comments:

Post a Comment