பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, September 2, 2019

நபிகளாருக்கு சூனியம் - 2

*நபிகளாருக்கு சூனியம் - ஒரு விளக்கம்* (Part -2)

"நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டது" என்று தொடங்கும் அந்த வாசகம்தான் அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்த செய்தியில் போடப்பட்டிருக்கும் பெரிய முடிச்சு. அந்த பெரிய முடிச்சை அவிழ்ப்பதற்கு முன்பாக பல சிறிய முடிச்சுக்களை அவிழ்ப்போம்.

நபி(ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து வரும் செய்தி "வஹீ" எனப்படுகிறது. குர்ஆன் இறங்கியதும் வஹீயின் மூலம்தான்.

நபி(ஸல்) அவர்களுக்கு எதிராக செய்யப்படும் பல செயல்கள் அன்னாருக்கு வஹீ மூலம் அறிவித்துக்கொடுக்கப்படும். இதன் மூலம் அன்னாருக்கு கிடைக்கப்பெற்ற தூதுத்துவத்தின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.

** நபி(ஸல்) அவர்களின் இரு மனைவிகள் இரகசியம் பேசியது அன்னாருக்கு வஹீயின் மூலம் அறிவிக்கப்பட்டது.

** ஒருவர் நபிகளாரை ஏளனமாக பேசியதை கேட்ட ஒரு சிறுவன், அதை நபிகளாரிடம் கூறியபோது, அவ்வாறு தான் பேசவில்லை என்று அந்த நபர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்ததை பொய் என்று அல்லாஹ் அறிவித்து கொடுத்தான்.

** ஒரு பள்ளிவாசலைக் கட்டி அதை நபிகளாரைக் கொண்டு திறக்க வைப்பதன் மூலம் அதில் அன்னாருக்கு எதிராக சதி தீட்டப்பட்டபோது அங்கே போக வேண்டாம் என்று நபிகளாருக்கு வஹீ அறிவிக்கப்பட்டது.

நபி(ஸல்) அவர்களுக்கு எதிராக செய்யப்பட்ட பல செயல்கள் அன்னாருக்கு  வஹீயின் மூலம் அறிவித்து கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதில் எவரும் மாற்றுக் கருத்து கொள்வதற்கு இடமில்லை.

அதேபோல, இறைத்தூதர்களுக்கு வரும் கனவும் வஹீதான்.

அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம்  நபி(ஸல்) அவர்கள் தனது கனவில் இருவானவர்கள் பேசிக்கொண்டதாக கூறிய செய்தியும் வஹீதான்.

ஆகவே, நபிகளாருக்கு எதிராக "யூதன் ஒருவன் சூனியம் என்ற ஷைத்தானிய செயலை செய்தான்" என்ற செய்தி
வஹீயின் மூலம் நபி(ஸல்) அவர்களுக்கு  அறிவித்துக் கொடுக்கப்பட்டது என்று புரிவதில் எந்தப் பிரச்சினையுமில்லை.

யூதன் ஒருவனால் நபிகளாருக்கு எதிராக சூனியம் செய்ய முடியுமா? என்று ஒரு கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இதில் சில விஷயங்களை நாம் பார்க்க வேண்டும்.

சூனியத்தின்பால் ஈர்க்கப்பட்டவர்கள் எந்த வகையிலும் சூனியத்தை காப்பாற்றுவார்கள்.

மூஸா(அலை) அவர்களிடம்  சூனியக்காரர்கள் தோற்பார்கள் என்று அல்லாஹ் அறிவித்து கொடுத்தபடி தங்களது தோல்வியை சூனியக்காரர்கள் ஒத்துக்கொண்டபோதும், அவர்களுக்கு சூனியத்தை கற்றுக்கொடுத்ததே மூஸாதான் என்று கூறி சூனியத்தை பிர்அவ்ன் காப்பாற்றியதுபோல் சூனியத்தை காப்பாற்றுவார்கள்.

ஒரு சூனியக்காரன் ஒருவருக்கு தீங்கு விளைவிக்க சூனியம் செய்கிறான் என்று வைத்துக்கொள்வோம், அவருக்கு விதிப்படி தீங்கு ஏதாவது நிகழ்ந்தால் அது தன்னுடைய சூனியத்தால்தான் நிகழ்ந்தது என்று கூறுவான். விதிப்படி தீங்கு ஏதும் நிகழாதபட்சத்தில் இன்னும் சக்திவாய்ந்த சக்திகளிடம் உதவி கேட்க வேண்டும் என்பான். அல்லது, சூனியம் செய்யப்பட்டவர் தன்னிடம் இருப்பதை விட சக்திவாய்ந்த சக்திகளிடம் உதவி பெற்றிருக்கிறார் என்பான்.

ஆனால், எது நிகழ்ந்தாலும் அது விதிப்படியே என்று மட்டுமே நாம் கூறுவோம். சூனியத்தால் நிகழ்ந்ததாக நாம் கூறவே மாட்டோம்.

இதை ஒரு உண்மைச் சம்பவத்தின் மூலம் பார்ப்போம்.

மூஸா(அலை) அவர்கள் தூர்ஸினாய் மலை மீது நாற்பது நாள் தங்குவதற்காக சென்றுவிட்ட நிலையில் அவருடைய சமுதாயம் சோதிக்கப்பட்டது.

ஸாமிரி என்பவன் அவருடைய சமுதாயத்தில் பெரும்பாலானோரை வழிகெடுத்தான். தங்கத்தை காளைக் கன்றாக்கினான். அதுதான் கடவுள் என்றான். அதைக் கண்டவர்களுள் பெரும்பாலானோர் அதை வணங்கிவிட்டனர்.

இதை எப்படி நிகழ்த்தினாய் என்று ஸாமிரியிடம் மூஸா(அலை) அவர்கள் கேட்டார்கள்.

தூதரின் காலடி மண்ணை எடுத்து அதை எறிந்தேன் என்றான். இவ்வாறு செய்வதற்கு அவனது மனம் தூண்டியது என்றும் கூறினான்.

அதாவது, தங்கத்தை காளைக்கன்றாக செய்து அதன்மீது மண்ணை வீசினான்.
அது சப்தமிட்டது. இதில் மூஸா(அலை) அவர்களின் சமுதாயம் சோதிக்கப்பட்டது.

இதில், எதைப் பொய் என்பது?

** ஸாமிரி தங்கத்தை காளைக்கன்றாக செய்தது உண்மை

** சூனியக்கிரனைப் போல் அதன் மீது  மண்ணைப் போட்டவுடன் அது சப்தமிட்டதும் உண்மை.

** நம்பமுடியாத ஒன்று நிகழ்ந்ததும் பலர் அதை கடவுளாக்கிக் கொண்டனர் என்பதும் உண்மை. 

உள்ளம் சோதிக்கப்பட்ட ஒரு உண்மை நிகழ்வு அது. இது எப்படி நிகழ்ந்தது?

மண்ணைப் போட்டதும் உண்மை. சப்தம் வந்ததும் உண்மை.

** மண்ணைப் போட்டதால்தான் சப்தம் வந்தது என்று முடிவுக்கு வந்தால் அது இணைவைப்பு. (சூனியத்தின்படியும் நிகழ்வு நடக்கிறது) (சுன்னத் ஜமாத்)

** ஸாமிரி மண்ணைப்போட்டான், அந்த நேரத்தில் மட்டும் அவனின் சூனியத்திற்கு அல்லாஹ் ஆற்றல் கொடுத்தான், அதனால் அது சப்தமிட்டது என்று முடிவுக்கு வந்தால் அது அல்லாஹ்வின் கண்ணியத்திற்கு இழுக்காக கற்பனை செய்வது. (அல்லாஹ்வின் நாட்டப்படி சூனியம் நடக்கிறது) (ஸலபுகள்)

** மண்ணை அள்ளிப் போட்டால் உலோகம் சப்தமிடும் என்பது அறிவுக்கு பொறுந்தாதது. ஆகவே அது பொய் என்ற முடிவுக்கு வந்தால் அது மிக ஆபத்தானது. நடந்த நிகழ்வை மறுப்பதற்கு சமம். (சூனியம் என்பது பொய்) (பீஜே மற்றும் அவரது கிளையினர்)

நிகழ்வுகள் அனைத்தும் விதிப்படியே. அவற்றுள் நல்லவற்றை அல்லாஹ் நிகழ்த்துகிறான் என்றும் கெட்டவற்றை ஸைத்தானிய நிகழ்வு என்றும் கூறுவது மட்டுமே நம்மிடம் இருக்கும் நடைமுறை.

உலோகக் காளைக்கன்றின் சப்தத்தின் மூலம் உள்ளங்கள் சோதிக்கப்பட்ட நிகழ்வு விதிப்படியே நிகழ்ந்தது. அதில், மண்ணை அள்ளிப் போட்ட ஸாமிரியின் செயல் ஒரு ஷைத்தானிய செயல்.

விதிப்படி நடக்கும் நிகழ்வுகளில் ஷைத்தானிய சூனியம் முடிச்சிடப்படுகிறது என்பதைத் தவிர்த்து சூனியத்தில் வேறு ஒன்றுமில்லை.

நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது "எனக்கு சூனியம் செய்தவன் யார்? அந்த சூனியத்தை எப்படி அகற்றுவது?" என்று நபிகளார் கேட்டுக்கொண்டிருந்ததுபோல் பலரும் கற்பனை செய்கின்றனர்.

தனக்கு ஏற்பட்ட நோய்க்கு அல்லாஹ்விடமே முறையிட்டு துஆச் செய்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் துஆவிலேயே மூழ்கி இருந்ததாகவும் அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

அப்போதுதான், யூதன் ஒருவன் நபிகளாருக்கு எதிராக சூனியம் செய்தான் என்ற செயல் கனவில் சொல்லப்பட்டது.

ஒரு யூதப் பெண் மூலம்
நபி(ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்து உணவில் விஷம் வைத்த யூதர்களிடம்,,ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று நபிகளார் கேட்டதற்கு, "நீங்கள் பொய்யராக இருந்தால் சாவீர்கள், நாங்கள் நிம்மதி அடைவோம். நீங்கள் உண்மைத் தூதராக இருந்தால் நீங்கள் சாகமாட்டீர்கள், அதனால்தான் அப்படி செய்தோம்" என்று கூறியவர்கள்தான் அந்த யூதர்கள்.

நபி(ஸல்) அவர்களை கொல்வதற்காக மக்கா காபிர்கள், ரோமர்கள், நயவஞ்சகர்கள் என பலரிடமும் கூட்டணி வைத்த யூதர்களுக்கு யாருக்கும் தெரியாமல் நபிகளாருக்கு சூனியம் வைப்பது எளிதே.

நபிகளாருக்கு எதிராக யூதன் வைத்த சூனியம் அன்னாருக்கு காட்டிக்கொடுக்கப்பட்டது அன்னாரின் தூதுத்துவத்தை மெய்ப்படுத்துவதாகவே உள்ளது.

யூதனின் சூனியத்தால்தான் நபிகளாருக்கு நோய்வாய் ஏற்பட்டதா என்று ஒரு கேள்வியைக் கேட்டால், ஸாமிரி மண்ணைப் போட்டதால்தான் உலோகக் காளை சப்தமிட்டதா? என்று கேள்வியெழுப்புவதற்குச் சமம்.

** உலோகக் காளைக்கன்று சப்தமிட்டதும் உண்மை.
** ஸாமிரி மண்ணைப் போட்டதும் உண்மை.

** நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டதும் உண்மை.
** அன்னாருக்கு எதிராக யூதன் ஒருவன் சூனியம் செய்ததும் உண்மை.

யூதன் செய்த சூனியம் நபிகளாருக்கு அறிவித்துக் கொடுக்கப்பட்டது.  நிவாரணமும் அளிக்கப்பட்டுவிட்டது.

"நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டது" என்று தொடங்கும் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் கூற்றில் உள்ள முடிச்சை அவிழ்ப்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

பிறை மீரான்.

No comments:

Post a Comment