பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, September 29, 2019

ஹதீஸ் மறுப்பு - 2

*TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (Part -2)

"குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படுகிறது" என்ற ஆயுதத்தை கையிலெடுத்தது TNTJ.

விவாதகளத்தில் தனது வாதத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் ஹதீஸ்களை ஒதுக்கித் தள்ளியது TNTJ.

தனது ஹதீஸ் மறுப்பு கொள்கையை விளக்கும் வகையில் 152 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமும் வெளியிட்டது.

ஹதீஸ் மறுப்பு என்பது தங்களுடைய கண்டுபிடிப்பு அல்ல என்றும், உமர்(ரலி), ஆயிஷா(ரலி) போன்ற ஸஹாபாக்கள் கூட அந்த ஹதீஸ் மறுப்பை செய்திருக்கிறார்கள் என்று விளக்கமாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

"குர்ஆனுக்கு முரணாக ஹதீஸ் இருக்கிறது" என்று சுமார் பத்து ஹதீஸ்களை மறுத்திருந்தது அந்த அமைப்பு.

அந்தப் புத்தகத்தின் இறுதியில் ஒரு செய்தியை பதிந்திருந்தார்கள். அதுதான் இவர்களின் ஆய்வின் அவல நிலையைக் காட்டியது.

அதாவது, குரானுக்கு முரண்படுகிறது என்று கூறி ஒரு ஹதீஸை (புஹாரி:350) ஆரம்பத்தில் மறுத்துக் கொண்டிருந்தார்களாம். அதற்குப் பிறகு அதில் முரண்பாடில்லை என்று புரிந்து கொண்டார்களாம். உடனேயே அதை ஹதீஸ் என்று ஏற்றுக்கொண்டார்களாம். இப்படித்தான் போகிறது அந்த விளக்கம்.

இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிவோம்...

ஒரு பொருளுக்கு வருடாவருடம் ஜக்காத் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அந்த பொருளை ஜக்காத்தே தின்று விடும் என்றும், கடைசியில் ஜக்காத் வாங்கும் நிலைக்கு வந்துவிட நேரிடும் என்றும் ஆரம்பகாலத்தில் கூறிவந்தது TNTJ.

ஜக்காத் கொடுத்தால் வறுமை ஏற்படும் என்று ஸைத்தான்தான் பயமுறுத்துவான் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டவுடன் அதை வாபஸ் வாங்கியது TNTJ.

இதுபோன்றுதான் அந்த ஹதீஸை "குர்ஆனுக்கு முரண்" என்று கூறி முதலில் வீசியெறிந்தார்கள். பின்னர், அது விமர்சிக்கப்பட்டவுடன் மறுஆய்வு செய்து அந்த ஹதீஸின் முரண்பாடு நீங்கிவிட்டது என்றும் கூறினார்கள்.

இப்போது கேள்வி என்னவென்றால்...

எதில் முரண்பாடு? என்பதுதான் கேள்வி.

ஹதீஸில் முரண்பாடா? அல்லது ஹதீஸை புரிந்து கொண்டதில் முரண்பாடா?

அந்த ஹதீஸில் முரண்பாடு இருந்திருந்தால் எத்தனை முறை அதை ஆய்வு செய்திருந்தாலும் அந்த ஹதீஸை ஏற்றுக்கொண்டிருக்காது TNTJ. அந்த ஹதீஸை புரிந்ததில்தான் முரண்பாடு என்பதை புரிந்துகொண்டதால்தான் அந்த ஹதீஸை ஏற்றது TNTJ.

குரானுக்கு முரணாக அந்த ஹதீஸை புரிந்து கொண்ட சிந்தனையில்தான் முரண்பாடே தவிர அந்த ஹதீஸில் முரண்பாடு ஏதுமில்லை என்பதற்கு அந்த ஹதீஸை ஏற்றுக்கொண்ட அந்த அமைப்பே சாட்சியாக இருக்கிறது.

** ஒரு ஹதீஸை குர்ஆனுக்கு முரணாக காட்டவும் முடியும்

** குர்ஆனுக்கு முரணாக காட்டப்பட்ட ஒரு ஹதீஸை முரணில்லாமலும் காட்ட முடியும்

இதுதான் தவ்ஹீத் ஜமாத்தால் வெளியிடப்பட்ட அந்த 152 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் இருந்து அறியப்படும் பகிரங்கமான உண்மை.

அந்த புத்தகத்தில் இருக்கும் ஹதீஸ் மறுப்பு பார்முலாவின்படி ஒரு ஹதீஸை குர்ஆனுக்கு முரணாக சித்தரிக்கவும் முடியும் என்பதையும், அதே பார்முலாவின்படி குர்ஆனுக்கு முரணாக சித்தரிக்கப்பட்ட ஒரு ஹதீஸை குர்ஆனுக்கு முரணில்லாமலும் சித்தரிக்க முடியும் என்பதை பார்க்கப்போகிறோம்.

ஹதீஸ் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கும் ஒரு ஹதீஸை எடுப்போம். இதை குர்ஆனுக்கு முரணாக சித்தரிப்போம்... (நவூதுபில்லாஹ், ஹதீஸை நாம் நிராகரிக்கவில்லை)

"உரையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும், வழியில் சிறந்தது முஹம்மதின் வழியாகும்" (புஹாரி 6098)

إِنَّ أَحْسَنَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْىِ هَدْىُ مُحَمَّد(புஹாரி 6098)

"முஹம்மதின் வழியே சிறந்தது" என்று தன்னுடைய வழியை சிறந்ததாக நபி(ஸல்) அவர்கள் கூறுவதாக இந்த ஹதீஸ் இருக்கிறது. குர்ஆன் என்ன கூறுகிறது?

..."அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும்' எனக் கூறுவீராக! ...(2:120)

...قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَىٰ ۗ ...(2:120)

அல்லாஹ்வின் வழிதான் சரியானது என்று மக்களிடம் கூறுமாறு நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் கட்டளையிடுகிறது. குர்ஆனாகவே வாழ்ந்த நபிகளார் குர்ஆனுக்கு மாற்றமாக எதையும் கூறமாட்டார்கள். அல்லாஹ்வின் வழிதான் சரியானது என்று கூறாமல் தன்னுடைய வழிதான் சிறந்தது என்று கூறியிருக்கமாட்டார்கள். குர்ஆனுக்கு முரணாக இந்த ஹதீஸ் இருப்பதால் இதை நிராகரிக்க வேண்டும். (நவூதுபில்லாஹ்)

மக்களிடம் பிரபல்யமாக இருக்கும் ஒரு ஹதீஸையும் கூட குர்ஆனுக்கு முரணாக சித்தரிக்க முடியும் என்பதைப் பார்த்தோம்.

குர்ஆனுக்கு முரணாக காட்டப்பட்ட ஒரு ஹதீஸை முரணில்லாமல் விளங்க முடியும் என்பதையும் பார்க்கப் போகிறோம்...

வானங்களும் பூமியும் ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாக குர்ஆன் வசனங்கள் இருக்கும் நிலையில், ஏழு நாட்களிலும் அல்லாஹ் படைத்துக்கொண்டிருந்ததாக வரும் ஹதீஸை குர்ஆனுக்கு முரணாக இருக்கிறது என்று TNTJ கூறுகிறது.

இந்த ஹதீஸை குர்ஆனுக்கு முரணில்லாமல் விளங்குவதை பார்ப்போம்...

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டு, “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணை (பூமியை) படைத்தான். அதில் மலைகளை ஞாயிற்றுக்கிழமையன்று படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். துன்பத்தை செவ்வாய் கிழமையன்றும் ஒளியை புதன்கிழமையன்றும் படைத்தான். வியாழக்கிழமையன்று உயிரினங்களைப் படைத்து பூமியில் பரவச் செய்தான். (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் அஸ்ருக்கும் இரவுக்குமிடையேயுள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான்’’ என்று கூறினார்கள். முஸ்லிம் (5379)

இந்த ஹதீஸ், ஏழு நாட்களும் அல்லாஹ் படைப்பில் ஈடுபட்டிருந்ததாக கூறுகிறது.

ஆனால், குர்ஆன் வசனம் 7:54, 10:3, 11:7, 25:59, 32:4, 57:4 ஆகியவை ஆறு நாட்களில் மட்டுமே படைத்ததாக கூறுகிறது. நிச்சயமாக இது முரணாகத்தான் இருக்கிறது. இந்த ஹதீஸை முரணில்லாமல் விளங்க வேண்டுமென்றால் என்ன செய்வது???

இன்னும் கொஞ்சம் தேடுவோம்...

"வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். *நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை"* . (50:38)

இந்த வசனத்தில் ஆறுநாட்களில் படைத்துவிட்டு தனக்கு களைப்பு ஏதும் ஏற்படவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான். ஏன்?

முந்தைய வேதங்களிலும் வானம் பூமி படைக்கப்பட்டது ஆறு நாட்களில் என்றுதான் இருக்கிறது. ஆனால், ஒரு இடைச்செருகலும் இருக்கிறது. அதாவது, ஆறு நாட்களும் படைப்பில் ஈடுபட்டிருந்ததால் களைப்பு ஏற்பட்டு ஏழாவது நாள் கடவுள் ஓய்வெடுத்தார் என்று இடைச்செருகலும் உள்ளது.

...ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார்...
யாத்திராகமம் (31:17)

களைப்பு ஏற்பட்டு ஏழாம் நாளில் கடவுள் ஓய்வெடுத்தார் என்ற நம்பிக்கையை தகர்க்கிறது மேற்கண்ட குர்ஆன் வசனம் 50:38.

இந்த வசனத்தின் கூடுதல் விளக்கமாகத்தான், ஆறு நாட்களில் வானம் பூமியை படைத்த அல்லாஹ் ஏழாம் நாளிலும் படைப்பில்தான் ஈடுபட்டிருந்தான் என்றும், களைப்பின் காரணமாக அவன் ஓய்வெடுக்கவில்லை என்றும், ஏழாம் நாளில் ஆதம்(அலை) அவர்கள் படைத்தான் என்றும் அந்த வசனத்திற்கு இன்னும் வலு சேர்ப்பதாகத்தான் இருக்கிறது.

ஆறுநாட்களில் படைத்தாக கூறும் குர்ஆன் வசனங்களும், ஏழுநாட்களில் படைத்ததாகக் கூறும் ஹதீஸும் ஒன்றுக்கொன்று முரணானதல்ல. குர்ஆன் வசனங்களுக்கு கூடுதல் விளக்கமாகவே அந்த ஹதீஸ் இருக்கிறது.

TNTJ வின் ஹதீஸ் மறுப்பை இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.

No comments:

Post a Comment