பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, September 18, 2019

தொழுகையின் முக்கியத்துவம்

தொழுகையின் முக்கியத்துவம்

முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய காரியங்களில் மிக முக்கியமானதும் முதன்மையானதும் தொழுகையாகும். இதுவே முஸ்லிம்களின் அடையாளம் ஆகும் தொழுகைகளையும் நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள் அல்குர்ஆன் எவ்வித பேரமோ நட்போ இல்லாத நாள் வருவதற்கு முன் தொழுகையை நிலை நாட்டுமாறும், நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுமாறும் நம்பிக்கை கொண்ட எனது அடியார்களுக்கு (முஹம்மதே!) கூறுவீராக அல்குர்ஆன் 14:31 நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. அல்குர்ஆன் 4:103 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்கள்: புகாரீ 8, முஸ்லிம் 21

‘இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 116

‘நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்கள்: நஸயீ 459, திர்மிதீ 2545, இப்னுமாஜா 1069, அஹ்மத் 21859

இதைப் போன்று ஏராளமான குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லுகின்றன.

தொழுவதால் ஏற்படும் நன்மைகள்

)முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். அல்குர்ஆன் 29:45

‘உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது; அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கின்றார்; அவரது மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா? எனக் கூறுங்கள்’ என்று நபித்தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித்தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் (சிறிய) பாவங்களை அகற்றுகிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரீ 528, முஸ்லிம் 1071

‘ஐவேளைத் தொழுகை, ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையில் ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களைத் தவிர’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 394

தொழாததால் ஏற்படும் தீங்குகள்

கடமையான தொழுகையை ஒருவர் விடுவது அவரை நரகத்தில் கொண்டு சேர்க்கப் போதுமான காரணமாகும். அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் ‘உங்களை நரகத்தில் சேர்த்தது எது?’ என்று விசாரிப்பார்கள். ‘நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை’ எனக் கூறுவார்கள். அல்குர்ஆன் 74:41-43

ஒரு மனிதரின் தலை நசுக்கப்படுவதை நபி (ஸல்) அவர்கள் கனவில் கண்டார்கள். அது பற்றி அவர்கள் விளக்கும் போது, ‘அவர் குர்ஆனைக் கற்று அதைப் புறக்கணித்து, கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்’ என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)

நூல்: புகாரீ 1143

இஸ்லாத்தின் மிக முக்கியக் கடமையான தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் என்பதைப் பெரும்பாலான முஸ்லிம்கள் அறியாமல் உள்ளனர்.

தொழுகைக்கு நபியே முன் மாதிரி

ஓர் ஊரில் ஒரு பள்ளிவாசல் தொழக்கூடியவர்களைக் கவனித்தால் ஒருவரின் தொழுகைக்கும் மற்றவரின் தொழுகைக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசங்கள் இருப்பதைக் காணலாம். நபிகளார் காட்டித்தந்த சரியான முறையில் எவ்வாறு தொழுவது என்பது பற்றிய அறியாமையே இந்த நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)

நூல்: புகாரீ 631

இந்த நபி மொழியின் படி நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை நபிகளார் காட்டித் தந்த அடிப்படையில் அறிந்து கொள்வோம்.

No comments:

Post a Comment