மக்கத்துக் காஃபிர்கள் ஏன் வழிகெட்டார்கள்?
மக்கத்துக் காஃபிர்கள் அல்லாஹ்வை கடவுள் இல்லை என்று மறுக்கவில்லை. இந்த வானம் பூமி அனைத்தையும் படைத்ததும், மழையை இறக்குவதும். போழிவுகள் வரும் போது காப்பாற்றுவதும் அல்லாஹ் தான் என்பதில் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார்கள். அல்லாஹ்விற்கு மேலாக அவர்கள் யாரையும் நினைக்கவில்லை.
இவர்கள் இவ்வாறு அல்லாஹ் விஷயத்தில் நம்பினாலும் அல்லாஹ்விற்கு இணை கற்பித்த ஒரே காரணத்தினால் இறை மறுப்பாளர்களாக ஆனார்கள் முஸ்லிம்களாக இருக்கவில்லை.
மக்கத்துக் காஃபிர்கள் அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக எவற்றை நம்பினார்களோ அந்த அதிகாரங்கள் அப்துல்காதர் ஜீலானிக்கும். ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் உள்ளது என்று இன்றைக்கு நம்புபவர்கள் ஒருபோதும் முஸ்லிம்களாக இருக்க முடியாது.
பெரும் துன்பங்கள் வரும் போது ‘முஹ்யித்தினே” என்று அழைப்பவர்கள் நம் சமூகத்தில் இருக்கிறார்கள். ஆனால் மக்கத்துக் காஃபிர்கள் பெரும் துன்பங்கள் வரும் போது அல்லாஹ்வை மட்டுமே அழைப்பார்கள். மற்ற கடவுள்களை மறந்து விடுவார்கள். இந்த வகையில் மக்கத்துக் காஃபிர்களை விட மோசமான நிலையில் இவர்கள் இருக்கிறார்கள்.
“வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று கூறுவார்கள். அப்படியாயின் “எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?
அல்குர்ஆன் 29-61
‘வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்றே கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக்கொள்வதில்லை.
அல்குர்ஆன் 29:63
“வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று அவர்கள் கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.
அல்குர்ஆன் 31:25
முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.
அல்குர்ஆன் 31:32
சிறந்த மகானும் இறைத் தூதருமான இப்ராஹீம் (அலை) அவர்களையே அல்லாஹ்விற்கு நிகராக மக்கத்துக் காஃபிர்கள் கருதினார்கள். இஸ்மாயில் (அலை) அவர்களையும் அல்லாஹ்விற்கு இணையாகக் கருதினார்கள். இதனால் இறை மறுப்பாளர்களாக ஆனார்கள்.
அப்படியானால் முகவரியில்லாதவர்களையெல்லாம் அல்லாஹ்விற்கு நிகராக ஆக்குபவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்?
நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்றாஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்கள் இருந்தன.
அவற்றையும் வெளியேற்றினார்கள். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக..! அல்லாஹ்வின் மீது ஆணையாக…! இவ்விருவரும் இரு நபிமார்களும்) அம்புகள் மூலமாக குறி பார்ப்பவர்களாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்” என்று கூறிவிட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள். அதில் தொழவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி
நூல்: புகாரீ -1601
No comments:
Post a Comment