கிறீத்தவர்கள் ஏன் இறை மறுப்பாளர்களாக ஆனார்கள்?
கிறித்தவர்கள், இறைநேசர் என்று நிரூபிக்கப்படாத சாதாரண மனிதரை அல்லாஹ்விற்கு நிகராக ஆக்கவில்லை. மாறாக இறை நேசர் என்று அல்லாஹ்வால் நிரூபிக்கப்பட்ட ஈஸா (அலை) அவர்களிடமே பிரார்த்தித்தார்கள்.
தந்தையில்லாமல் அற்புதமாகப் பிறந்த சிறப்பு ஈஸா நபிக்கு உண்டு. குருடர்களுக்குப் பார்வைகளை வரவழைப்பது, இறந்தவர்களுக்கு உயிரூட்டுவது. குஷ்ட நோயாளிகளைக் குணப்படுத்துவது. வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட பொருட்களை அறிவிப்பது, களிமண்ணால் செய்யப்பட்ட பறவைகளுக்கு உயிர் கொடுப்பது எண்ணற்ற அற்புதங்களை அல்லாஹ் ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கினான்.
இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்குத் தூதராகவும் (அவரை அனுப்பினான்). “நான் உங்கள் இறைவனின் சான்றுடன் உங்களிடம் வந்துள்ளேன். உங்களுக்காகக் களிமண்ணால் ஒரு பறவையின் வடிவத்தைப் போன்று உருவாக்கி அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் ஆணைப்படி பறவையாக ஆகும். அல்லாஹ்வின் ஆணைப்படி இறந்தவர்களை உயிர்ப்பிப்பேன்; பிறவிக் குருடரையும் தொழுநோயாளியையும் குணப்படுத்துவேன். நீங்கள் உண்பவற்றையும், உங்கள் வீடுகளில் சேமிப்பவற்றையும் உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது” (என்று ஈஸா கூறினார்.)
அல்குர்ஆன் 3 : 49
அல்லாஹ்தான் மர்யமின் மகன் மஸீஹ்” என்று கூறியோர் இறைமறுப்பாளர்களாகி விட்டனர். “இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! எனது இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்துவிட்டான். அவரது தங்குமிடம் நரகம். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை” என்றே மஸீஹ் கூறினார்.
அல்குர்ஆன் 5-72
ஈஸா (அலை) அவர்களிடம் பிரார்த்தனை செய்தால் மறுமையில் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் கிறித்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை இறைவனுடைய தகுதிக்கு உயர்த்தியுள்ளார்கள்.
இவர்களைப் போன்றே நம் சமுதாயத்தினரும், மகான்கள் மறுமையில் நமக்கு உதவி செய்வார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தம்மிடம் பிரார்த்தித்தவர்களுக்கு ஈஸா (அலை) அவர்களால் மறுமையில் எந்த உதவியும் செய்ய முடியாது. அவ்வாறிருக்க முகவரி இல்லாமல் மகான்கள் என்று யூகிக்கப்படுபவர்களால் மறுமையில் மக்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
““மர்யமின் மகன் ஈஸாவே! ‘அல்லாஹ்வையன்றி, என்னையும் என் தாயாரையும் கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று நீர் மக்களிடம் கூறினீரா?” என அல்லாஹ் கேட்கும்போது அவர், “நீ தூயவன்! எனக்கு உரிமையில்லாததை நான் கூறுவது எனக்குத் தகாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்திலிருப்பதை நீ அறிவாய். உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை நன்கறிபவன்” என்று கூறுவார்.
அல்குர்ஆன் 5:116
No comments:
Post a Comment