மறைவான விஷயங்களை நம்ப வேண்டும்
ஒரு முஸ்லிம் அவசியம் நம்ப வேண்டிய விஷயங்களை இறைத் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இவற்றை நம்பினால் தான் ஓரிறைக் கொள்கையை ஏற்றவர்களாக நாம் இருக்க முடியும். இவற்றை மறுத்து விட்டால் இறை மறுப்பாளர்களாக மரணிக்கும் நிலை ஏற்படும்.
அல்லாஹ்வையும், தூதர்களையும், வானவர்களையும், வேதங்களையும், சொர்க்கம் நரகத்தையும், மறுமையையும், மண்ணறை வாழ்க்கையையும் விதியையும் நாம் நம்ப வேண்டும்.
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَارِزًا يَوْمًا لِلنَّاسِ، فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ: مَا الإِيمَانُ؟ قَالَ: الإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ، وَكُتُبِهِ، وَبِلِقَائِهِ، وَرُسُلِهِ وَتُؤْمِنَ بِالْبَعْثِ .
நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து ‘ஈமான் என்றால் என்ன?’ என்று கேட்டதற்கு ‘ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-50
கலிமாவை எப்படி மொழிய வேண்டும்?
லாயிலாஹ இல்லல்லாஹு என்ற வார்த்தை சொர்க்கத்தின் திறவுகோல் என்று அதிகமான மக்கள் நம்புகிறார்கள். இந்தக் கலிமா சொர்க்கத்தின் சாவியாக இருக்கிறது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.
சாவியை வைத்துத் திறக்க வேண்டுமானால் அந்த சாவிக்குப் பற்கள் இருக்க வேண்டும். பல் இல்லாத சாவியை வைத்து எதையும் திறக்க முடியாது. லாயிலாஹ இல்லல்லாஹு என்ற வார்த்தை சொர்க்கத்தின் திறவுகோல் தான். இந்த வார்த்தையின் பொருளை விளங்காமல் இதன் கருத்துக்கு மாற்றாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தால் இந்த வார்த்தையை வாயால் மொழிவதால் மட்டும் எந்தப் பயனும் ஏற்படாது
லாயிலாஹ இல்லல்லாஹு என்ற வார்த்தையின் பொருளை விளங்கி செயல்படாத காரணத்தினால் தான் சமுதாய மக்கள் இணை வைப்பில் இலகுவாக ஈடுபட்டு விடுகிறார்கள். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் கிடையாது என்று வாயால் மொழிவதோடு அதைப் புரிந்து செயல்பட வேண்டும் என்று திருக்குர்ஆனும் நபிமொழியும் கட்டளையிடுகிறது.
فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ
(முஹம்மதே!) அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக!
அல்குர்ஆன் 47:19
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்தவராக எவர் மரணிக்கிறாரோ அவர் சொர்க்கம் புகுந்துவிட்டார்.
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)
நூல்: அஹ்மத்-434
இந்தக் கலிமா கூறும் கருத்தை மனதில் ஆழப்பதித்து அதில் தடம் புரளாமல் உறுதியாக வாழ்ந்து வந்தால் தான் சொர்க்கம் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உளப்பூர்வமாக உறுதி கூறும் எவருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடை செய்து விட்டான்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி-128
“அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சான்று கூறுகின்றாரோ அவரைத் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்!” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்-52
தொடரும் இன்ஷா அல்லாஹ்
No comments:
Post a Comment