பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, February 10, 2026

இமாம் அவ்ஸாயீ


இன்று நாம் ஷாஃபி, ஹனஃபி, மாலிகி, ஹம்பலி என நான்கு மத்ஹபுகளைப் பற்றித்தான் பேசுகிறோம். ஆனால், ஒரு காலத்தில் ஸ்பெயினிலும் (அண்டலூஸ்), ஷாம் தேசத்திலும் (சிரியா) கோலோச்சிய ஒரு மத்ஹப் இருந்தது. அதுதான் அவ்ஸாயீ மத்ஹப். அதன் நிறுவனர், ஷாம் தேசத்தின் இமயம் - அப்துர் ரஹ்மான் அல்-அவ்ஸாயீ (எந்தவொரு இமாமும் தன் பெயரில் மத்ஹப் உருவாக்கவில்லை என்றாலும் அவர்களின் சட்ட நடைமுறைகளை மாணவர்கள் கொண்டு சென்றதால் இமாம்களின் பெயரே நிலைத்து நின்றது) 

முழுப்பெயர்: அப்துர் ரஹ்மான் இப்னு அம்ர் அல்-அவ்ஸாயீ.
பிறப்பு: ஹிஜ்ரி 88 (லெபனானில் உள்ள பால்பெக் நகரில்).
இறப்பு: ஹிஜ்ரி 157 (பெய்ரூட் நகரில்).
வகித்த இடம்: "இமாம் அஹ்லுஸ் ஷாம்" (ஷாம் தேசத்து மக்களின் தலைவர்).
ஃபத்வாக்கள்: இவர் தனது வாழ்நாளில் சுமார் 70,000 மார்க்கத் தீர்ப்புகளுக்கு பதில் அளித்துள்ளார் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆசிரியர்கள்: அதா இப்னு அபீ ரபாஹ், கதாதா, நாஃபி போன்ற தாபியீன்கள்.
சிறப்பு: இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் இவரைப் பற்றிக் கூறும்போது, "நான் பார்த்ததிலேயே, சட்டத்துறையிலும் ஹதீஸ் துறையிலும் ஒருசேரப் பாண்டித்தியம் பெற்றவர் அவ்ஸாயீ தான்" என்று புகழ்ந்துள்ளார்.

இவரைப் பற்றி நினைக்கும் போதே, உடல் சிலிர்க்கும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
அப்பாஸிய ஆட்சி அப்போதுதான் மலர்கிறது. அதன் தளபதி அப்துல்லாஹ் பின் அலீ, உமையாக்களைக் கொன்று குவித்துவிட்டு, அதிகார போதையில் அமர்ந்திருக்கிறார். அவரது சபைக்கு இமாம் அவ்ஸாயீ அழைக்கப்படுகிறார்.
தளபதி கேட்கிறான், உமையாக்களின் சொத்துக்களை நாங்கள் கைப்பற்றுவது ஹலாலா? ஹராமா? சுற்றிலும் வாள் ஏந்திய வீரர்கள். "ஹலால்" என்று சொன்னால் உயிர் தப்பும். "ஹராம்" என்று சொன்னால் தலை உருளும். அந்தச் சூழலில் இமாம் அவ்ஸாயீ கர்ஜிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ஒரு முஸ்லிமின் உயிர், உடைமை அனைத்தும் புனிதமானது. நியாயமான காரணமின்றி அதை எடுப்பது ஹராம்! ஹராம்! ஹராம்!"

அந்தத் தளபதி கையில் இருந்த கைத்தடியால் தரையை ஓங்கிக் குத்தினார். சபை உறைந்து போனது. ஆனால், இமாமின் துணிச்சலைக் கண்டு மிரண்டுபோன அவர், அவரைக் கொல்லாமல், ஒரு பணமுடிப்பைக் கொடுத்து அனுப்பினான். இமாம் அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டு, கம்பீரமாக வெளியேறினார்.

இமாம் அவ்ஸாயீயின் அறிவுக்கூர்மை இமாம் மாலிக்கை விட அதிகம்" என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர். ஆனால், இமாம் மாலிக்கிற்கு இருந்ததைப் போல, இமாம் அவ்ஸாயீயின் கருத்துக்களைத் தொகுத்துப் பாதுகாக்கச் சுறுசுறுப்பான மாணவர்கள் அமையவில்லை. அதனால், ஒரு பிரம்மாண்டமான சட்டத்துறை (மத்ஹப்) காலப்போக்கில் அழிந்து போனது. இஸ்லாமிய வரலாற்றுக்கு இது ஒரு பேரிழப்பு எனலாம். 

இஸ்லாம் சிறுபான்மையினரை எப்படிப் பாதுகாக்கும் என்பதற்கு இவரே உதாரணம். லெபனானில் சில கிறிஸ்தவர்கள் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டபோது, ஆளுநருக்கு இவர் எழுதிய கடிதம் இன்றும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை விட்டுவிட்டு, நிரபராதி மக்களைத் தண்டிப்பது இஸ்லாம் ஆகாது" என்று இடித்துரைத்தார்.

இவரது மரணம் மிகவும் உருக்கமானது. ஹிஜ்ரி 157-ல், ஒரு நாள் குளியலறைக்குச் சென்றார். அறியாமல் கதவு பூட்டப்பட்டது (அல்லது கரிப்புகை சூழ்ந்தது). உள்ளே வெப்பம் தாங்காமல் அந்த அறிஞர் மூச்சுத் திணறி மரணமடைந்தார். போர்க்களத்தில் நின்றிருக்க வேண்டிய ஒரு சிங்கம், ஒரு குளியலறையில் தன் மூச்சை நிறுத்தியது வரலாற்றின் பெரும் சோகம்.

- Abdullah Ibnu Naseer 

#History #ImamAwzai #Syria #LostMadhhab #IslamicScholars #Bravery #Facts #beirut

No comments:

Post a Comment