நாம் இதுவரை ஈராக் (கூஃபா, பஸ்ரா, பக்தாத்), மதீனா, யமன் , சிரியா ஆகிய இடங்களைப் பார்த்தோம். இப்போது நாம் பயணிக்க வேண்டியது மத்திய ஆசியா (Central Asia). இன்றைய உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள 'சமர்கந்த்' (Samarkand) நகர். அங்கே வாழ்ந்த ஒரு மாபெரும் இமயம்தான் இமாம் தாரமீ (ரஹ்).
ஹதீஸ் உலகில் இவருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஸிஹாஹ் ஸித்தா (ஆறு கிரந்தங்கள்) என்று சொல்லும்போது, அதில் ஆறாவதாக இப்னு மாஜாவைச் சேர்ப்பதா அல்லது இமாம் தாரமீயின் நூலைச் சேர்ப்பதா என்று அறிஞர்களுக்கு இடையே இன்றும் ஒரு மெல்லிய விவாதம் உண்டு. அந்த அளவிற்குத் தரமானவர்!
பெயர்: அப்துல்லாஹ் பின் அப்துர் ரஹ்மான் அத்-தாரமீ
காலம்: ஹிஜ்ரி 181 - 255
ஊர்: சமர்கந்த் (உஸ்பெகிஸ்தான்)
இவர் எப்படிப்பட்டவர் என்றால் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், இமாம் தாரமீயின் மரணச் செய்தியைக் கேட்டபோது, ஒரு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுதார்கள் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீரில்லாத பாலைவனத்தில் நான் தனித்து விடப்பட்டதைப் போல உணர்கிறேன்" என்று கவிதையும் பாடியுள்ளார்கள்.
புகாரியையே அழவைத்த ஆளுமை இவர்!
இமாம் தாரமீயின் இறையச்சத்திற்கு இது ஒரு வரலாற்றுச் சான்று. சமர்கந்த் நகரத்தின் ஆட்சியாளர், இமாம் தாரமீயின் அறிவைக் கண்டு வியந்து, நீங்கள்தான் இந்த ஊரின் தலைமை நீதிபதியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். இமாம் தாரமீ மறுத்தார். எனக்கு அதிகாரமும் வேண்டாம், பதவியும் வேண்டாம் என்றார். ஆனால் ஆட்சியாளர் விடுவதாக இல்லை. கட்டாயப்படுத்தினார். வேறு வழியின்றி இமாம் தாரமீ ஒப்புக்கொண்டார். பதவியேற்ற முதல் நாள். ஒரே ஒரு வழக்கை விசாரித்தார். தீர்ப்பு வழங்கினார். அன்று வீடு திரும்பியதும் அவருக்கு உடல் நடுக்கம் கண்டது. அல்லாஹ்வின் சட்டத்தில் நான் ஏதேனும் தவறு செய்துவிடுவேனோ? என்ற பயம் அவரை ஆட்கொண்டது. மறுநாளே ஆட்சியாளரிடம் ஓடிச் சென்று, என்னை விட்டுவிடுங்கள்! என் மார்க்கத்தை நான் பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறேன் என்று பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்துவிட்டார்.
அதன் பிறகு, அவர் கல்விப் பணியைத் தவிர வேறு எதிலுமே கவனம் செலுத்தவில்லை.
இஸ்லாமிய உலகில் பரவலாக ஆறு கிரந்தங்கள் (ஸிஹாஹ் ஸித்தா) என்று சொல்லும்போது, ஆறாவது நூலாக இப்னு மாஜாவைச் சொல்வார்கள்.
ஆனால், பல நுணுக்கமான ஹதீஸ் அறிஞர்கள் (உதாரணமாக இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி, இமாம் சுயூத்தி போன்றோர்), இப்னு மாஜாவை விட இமாம் தாரமீ எழுதிய 'சுனன் தாரமீ' தரம் வாய்ந்தது என்று கூறுகிறார்கள். இது ஏன்? இப்னு மாஜாவில் பலவீனமான ஹதீஸ்கள் அதிகம். ஆனால், தாரமீயின் நூலில் பலவீனமான ஹதீஸ்கள் மிகக் குறைவு. இதன் அறிவிப்பாளர் தொடர்கள் மிக உயர்ந்தவை. எனவே தாரமீ தான் ஆறாவது நூலாக வர சிறந்தது என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்.
சுனன் தாரமீ' நூலின் மிகப்பெரிய சிறப்பு அதன் முன்னுரை அரபியில் முகத்திமா! நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை, கல்வியின் சிறப்பு, அறிஞர்களின் ஒழுக்கம், ஃபித்னா (குழப்பங்கள்) தோன்றும் காலங்கள் பற்றி அவர் எழுதிய முன்னுரை மட்டுமே தனி ஒரு புத்தகத்திற்குச் சமம்!இமாம் முஸ்லிம், இமாம் அபூ தாவூத், இமாம் திர்மிதி (இவர்கள் மூவரும் 'ஸிஹாஹ் ஸித்தா' ஆசிரியர்கள்) இவரின் மாணவர்கள் தாம்.
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் இவரை பற்றி கூறும்போது உலகில் செல்வம், பதவி எதையும் விரும்பாத ஒருவரை நீங்கள் பார்க்க வேண்டுமானால், சமர்கந்தில் உள்ள தாரமீயைப் பாருங்கள் என்று நவின்றுள்ளார்.
✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer
#History #ImamDarimi #SunanDarimi #Samarkand #HadithMaster #SihahSitta #IslamicScholar #Taqwa #AbdullahIbnuNaseerWriteups
No comments:
Post a Comment