இஸ்லாமிய உலகம் மத்ஹபுகளின் பிடியிலும், பலவீனமான ஹதீஸ்களின் ஆதிக்கத்திலும் சிக்கியிருந்த 20-ம் நூற்றாண்டில், ஒரு தனி மனிதராகப் போராடி, "ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மட்டுமே மார்க்கம்" என்ற விதையை உலகம் முழுவதும் விதைத்தவர் ஷேக் நாஸிருத்தீன் அல்பானி!
(ஆரம்ப கால அறிஞர்களை தான் இந்த தொடரில் பார்த்து வருகிறோம். ஆனால் சில அன்பர்கள் இமாம் அல்பானி பற்றி வற்புறுத்தி கேட்டதால் முன்கூட்டியே இத்தொடரை எழுதுகிறேன்.)
அது 1914-ம் ஆண்டு, ஐரோப்பாவில் உள்ள அல்பேனியா நாட்டின் 'ஷ்கோடர்' நகரில் பிறந்தார். (அதனால்தான் 'அல்பானி' என்று அழைக்கப்படுகிறார்). அல்பேனியாவில் ஆட்சியாளர் அஹ்மத் ஸோகுவின் மதச்சார்பற்ற கொடுங்கோல் ஆட்சி நடந்ததால், இவரது தந்தை குடும்பத்துடன் சிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கு ஹிஜ்ரத் செய்தார். இவரின் தந்தை ஒரு கடிகாரம் பழுதுபார்க்கும் கலைஞர். அல்பானியும் இத்தொழிலைக் கற்றார். கடிகாரம் பழுதுபார்க்கும் தொழில் அவருக்கு இரண்டு விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது: ஒன்று 'நுணுக்கம்' (Precision), மற்றொன்று 'பொறுமை'. இந்த இரண்டும்தான் பிற்காலத்தில் இலட்சக்கணக்கான ஹதீஸ்களைத் துல்லியமாக ஆய்வு செய்ய அவருக்கு உதவியது.
இவரது தந்தை ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர். ஆனால் இமாம் அல்பானிக்கு, ஏன் மத்ஹபுகளை கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டும்? குர்ஆன் ஹதீஸை நேரடியாகப் பார்க்கலாமே? என்ற சிந்தனை எழுந்தது. எகிப்திலிருந்து வந்த அல்-மனார் என்ற பத்திரிகையில், ரஷீத் ரிழா எழுதிய கட்டுரைகளைப் படித்தபோது, ஹதீஸ் கலையின் மீது அவருக்குத் தீராத காதல் ஏற்பட்டது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தமாஸ்கஸில் உள்ள பிரசித்தி பெற்ற தாஹிரிய்யா நூலகத்தில் அவர் மூழ்கிக்கிடப்பாராம். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் அங்கேயே இருப்பார். உணவு உண்ணக்கூட வெளியே வரமாட்டார். நூலக நிர்வாகம் இவரின் ஆர்வத்தைப் பார்த்து, நூலகத்தின் சாவியையே இவரிடம் கொடுத்துவிட்டது. இரவும் பகலும் ஹதீஸ் சுவடிகளோடுதான் வாழ்க்கை!
ஷேக் அல்பானியின் சேவையை ஒரே வரியில் சொல்வதானால்,தஸ்ஃபியா மற்றும் தர்பியா எனலாம்.
தஸ்ஃபியா : இஸ்லாத்தில் கலந்துவிட்ட பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைப் பிரித்தெடுத்து, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டும் மக்களுக்கு அடையாளம் காட்டினார்.
தர்பியா (கற்பித்தல்): அந்தத் தூய ஹதீஸ்களின் அடிப்படையில் புதிய தலைமுறையை உருவாக்குதல்.
சவூதியில் மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது, அங்கு ஹதீஸ் துறைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஹதீஸ்களை எப்படி ஆய்வு செய்வது என்பதை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். உண்மையை உரக்கச் சொன்னதால், இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலும் அவர் ஹதீஸ் ஆய்வைத் தொடர்ந்தார். சஹீஹ் முஸ்லிமின் சுருக்கம் என்ற நூலைச் சிறையில்தான் எழுதினார்.
ஷேக் அல்பானி எழுதிய நூற்கள் ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம். அவர் சுமார் 217-க்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார். அவற்றில் மிக முக்கியமானவை:
A. சில்ஸிலாத் தொடர் இது ஹதீஸ் உலகின் ஒரு புரட்சி.
ஸில்ஸிலா அஸ்-ஸஹீஹா: இதில் ஆயிரக்கணக்கான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைத் தொகுத்து, அதற்கான விரிவான விளக்கங்களையும், அறிவிப்பாளர் தொடர் ஆய்வையும் எழுதியுள்ளார்.
ஸில்ஸிலா அஸ்-ளயீஃபா: இதில் மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள, ஆனால் பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைத் தோலுரித்துக் காட்டியுள்ளார். (உதாரணம்: "கல்வியைத் தேடி சீனா வரை செல்லுங்கள்" என்பது ஹதீஸ் அல்ல என்று நிரூபித்தது).
இந்தத் தொடர் மட்டும் 14 பாகங்களைக் கொண்டது!
B. இர்வா உல்-கலீல்: இது ஃபிக்ஹ் (சட்ட) மாணவர்களுக்கு ஒரு அற்புதமான புத்தகம்.
'மனார் அஸ்-ஸபீல்' என்ற ஹம்பலி மத்ஹபு சட்ட நூலில் உள்ள ஹதீஸ்களை ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல். இதில் 2707 ஹதீஸ்களை ஆய்வு செய்துள்ளார். ஒரு சட்ட நூலில் உள்ள ஹதீஸ், சஹீஹா அல்லது ளயீஃபா என்று தெரிந்துகொள்ள இதுவே அடிப்படை எனலாம்.
C. சுனன் நூற்களின் ஆய்வு.
முன்பெல்லாம் திர்மிதி, அபூதாவூத் போன்ற நூற்களைப் படிக்கும்போது, அதில் எது சரி, எது தவறு என்று பாமர மக்களுக்குத் தெரியாது. அல்பானி அவர்கள் ஒவ்வொரு நூலையும் இரண்டாகப் பிரித்தார்:
ஸஹீஹ் அபூதாவூத் - ளயீஃப் அபூதாவூத்
ஸஹீஹ் திர்மிதி - ளயீஃப் திர்மிதி
ஸஹீஹ் நஸாயீ - ளயீஃப் நஸாயீ
ஸஹீஹ் இப்னு மாஜா - ளயீஃப் இப்னு மாஜா
ஸஹீஹ் அத்-தர்கீப் வத் தர்ஹீப்.
இன்று நாம் கையில் வைத்திருக்கும் பல ஹதீஸ் மென்பொருட்களில் என்று வருவதற்குக் காரணம் இந்த உழைப்புதான்.
D. நபிகளாரின் தொழுகை முறை
இதுதான் அல்பானியைப் பாமர மக்களிடம் கொண்டு சேர்த்த நூல். "தொழுகை பற்றி மத்ஹப் நூற்கள் என்ன சொல்கின்றன என்று பார்க்காதீர்கள்; நபி (ஸல்) அவர்கள் எப்படித் தொழுதார்கள் என்று பாருங்கள்" என்று கூறி, தக்பீர் முதல் சலாம் வரை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டுமே கொண்டு இந்நூலை எழுதினார்.
உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட இஸ்லாமிய நூற்களில் இதுவும் ஒன்று.
இவரின் ஆய்வு முறை மிகவும் கண்டிப்பானது. இவர் எந்த மத்ஹபையும் சாராமல், ஹதீஸ் எங்கு பலமாக இருக்கிறதோ அந்தத் தீர்ப்பை எடுப்பார். சில நேரங்களில் ஹனஃபி கருத்தை ஏற்பார், சில நேரங்களில் ஷாஃபி கருத்தை ஏற்பார் - ஆதாரம் எங்கு உள்ளதோ அதுவே அவர் மத்ஹப். அறிவிப்பாளர் தொடரில் ஒருவர் பொய்யராகவோ அல்லது நினைவாற்றல் குறைந்தவராகவோ இருந்தால், எவ்வளவு பெரிய இமாம் அந்த ஹதீஸை எழுதியிருந்தாலும், "இது பலவீனம்" என்று துணிச்சலாகக் கூறுவார்.
மற்ற இமாம்களை போலவே ஷேக் அல்பானி (ரஹ்) அவர்கள் சில விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.
இவர் புகாரி, முஸ்லிம் ஹதீஸ்களைக் கூட விமர்சிக்கிறார் என்று சிலர் கூறினர்.
உண்மையை சொல்லப்போனால் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு ஹதீஸ்களை துல்லியமான முறையில் இவ்வளவு ஆழமான ஆய்வை மேற்கொண்டவர் இவரைத் தவிர வேறு யாருமில்லை. இத்தனைக்கும் ஷேக் அல்பானி அவர்கள் முற்கால இமாம்கள் (தாரகுத்னி போன்றோர்) விட்டுச்சென்ற விமர்சனங்களையே இவர் பல இடங்களில் சுட்டிக்காட்டினார்.
ஹிஜ்ரி 1420 (கி.பி 1999) அக்டோபர் மாதம், ஜோர்டான் நாட்டில் தனது 85-வது வயதில் இமாம் அல்பானி காலமானார். அவர் மரணித்திருக்கலாம். ஆனால், இன்று உலகம் முழுவதும் உள்ள மதரஸாக்களிலும், பள்ளிவாசல்களிலும், இணையதளங்களிலும் "ஸஹ்ஹஹு அல்பானி" (இதை அல்பானி சரி கண்டுள்ளார்) என்ற வாசகம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
ஒரு தனி மனிதராக, ஒரு நூலகத்தில் அமர்ந்து அவர் செய்த வேலை, பல பல்கலைக்கழகங்கள் சேர்ந்து செய்ய வேண்டிய வேலை.
அல்லாஹ் அந்தப் பேரறிஞருக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை வழங்குவானாக!
✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer
#History #SheikhAlbani #HadithReviver #Silsilah #SifatSalah #Jordan #Damascus #IslamicScholar #Facts #AbdullahIbnuNaseerWriteups
No comments:
Post a Comment