பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, February 10, 2026

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) வாழ்கை வரலாறு சுருக்கம்


💞 சொர்க்கவாசி அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) வாழ்கை வரலாறு சுருக்கம் 💞

• அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) அவர்கள் மதினாவில் உள்ள பனு கைனுகா குலத்தை சார்ந்தவர்கள்! 

• ஆரம்ப காலத்தில் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் மதீனாவில் மிகப் பெரிய யூத மத அறிஞராகவும், நேர்மையான மனிதராகவும் அறியப்பட்டார்கள். யூதர்களிடையே அவருக்கு மிகுந்த மரியாதை இருந்தது. யூதர்கள் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடு, பிரச்சனைகளுக்கு இவரிடமே மக்கள் தீர்வு கேட்பார்கள்!

• மக்காவில் இருந்து மதினாவிற்கு நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் ஹிஜ்ரத் செய்து வந்துள்ளார்கள் என்பதை அறிந்து, நபி (ஸல்) அவர்களை சந்திக்க சென்றார்கள்!

• அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) அவர்கள் தவ்ராத் வேதத்தை நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். ஈஸா (அலை) அவர்களுக்கு பின்பு ஒரு இறைத்தூதர் வருவார் அவரின் பண்பு, தோற்றம் எல்லாம் எப்படி இருக்கும் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். இதை பற்றி நேரில் சந்தித்து கேட்டு தெளிவு பெறவேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்களை சந்திக்க சென்றார்கள்!

• நபி (ஸல்) அவர்களை முதன் முதலில் பார்த்த போதே ‘இது ஒரு பொய்யரின் முகமல்ல’ என்று தமக்குள்ளே கூறிக் கொண்டார்கள்! பின்பு நபி (ஸல்) அவர்களிடம் தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டு, தங்களிடம் மூன்று கேள்விகள் கேட்க போகிறேன் இதற்கான பதில் இறைத்தூதருக்கு மட்டுமே தெரியும் என்று கூறி கேள்விகளை கேட்டார்கள்!

• (1) இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? (2) சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது? (3) குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்?) அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்? என்று கேட்டார்கள்!

• இறைத்தூதர் (ஸல்) அவர்கள், சற்று முன்பு தான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார் என்று கூறினார்கள்.

(1) இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடைளாயம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும். 

(2) சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். 

(3) குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்கு காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது என்று பதிலளித்தார்கள். 

• இந்த பதில்களை கேட்ட அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி), தாங்கள் இறைத்தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்' என்று கூறி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்!

• பிறகு, இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்' என்று கூறினார்கள். 

• அப்போது யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) வீட்டினுள் புகுந்(து மறைந்)தார்கள். இறைத்தூதர்(ஸல்) (யூதர்களிடம்), 'உங்களில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தைகைய மனிதர்?' என்று கேட்டார்கள். 

• அதற்கு அவர்கள், 'அவர் எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்' என்று பதிலளித்தார்கள். 

• உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் இப்னு ஸலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக! என்று கூறினார்கள்.

• உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) வெளியே வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்' என்று கூறினார்கள். 

• உடனே யூதர்கள், இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்' என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்! 

(நூல் : ஸஹீஹ் புகாரி : 3329)

• அப்துல்லாஹ் (ரழி) அவர்களை பார்த்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்! பூமியின் மீது நடந்து செல்லும் சொர்க்கவாசி இவர் என்று!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 3812)

• இஸ்லாம் மார்க்கம் உண்மையானது என்று சாட்சியமளித்த அஹ்லுல் கிதாப் (வேத மக்கள்) ஒருவராக குர்ஆனில் புகழப்பட்டார். இவரை குறித்தே அல்குர்ஆனில் அல்லாஹ் கிழே உள்ள வசனத்தை அருளியுள்ளான்!

இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியானவர் இது போன்றது (வர வேண்டியிருந்தது) என்பதில் சாட்சியங்கூறி ஈமான் கொண்டிருக்கும் போது இதனை நீங்கள் நிராகரித்து பெருமை அடித்துக் கொண்டால் (உங்கள் நிலை என்னவாகும் என்பதை) நீங்கள் கவனித்தீர்களா? என்று நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார சமூகத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்!

(அல்குர்ஆன் : 46 : 10)

• நபி (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் (ரழி) அவர்களை பார்த்து (இறை நம்பிக்கை எனும்) பலமான பிடியைப் பற்றியவராக இவர் இறப்பார் என்று கூறியுள்ளார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 7010)

• அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் மொத்தம் 25 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள்!

• நபி (ஸல்) அவர்களுக்கு பின்பு கலீஃபாக்கள் ஆட்சி காலத்தில் அஹ்லுல் கிதாப் விஷயங்களில் ஆலோசகராக இருந்தார்கள். யூதர்கள், கிறிஸ்தவர்கள் தொடர்பான சட்டங்கள், ஒப்பந்தங்கள்
உணவு, திருமணம் போன்ற விவகாரங்களில் கலீஃபாக்கள் இவர்களிடமே ஆலோசனை பெறுவார்கள்!

• உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சி காலத்தில் இறுதியில் அன்னார் மரணம் அடைந்தார்கள். மதினாவிலயே இவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்!

@அல்லாஹ் போதுமானவன் 💞

No comments:

Post a Comment