பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, November 4, 2019

ஹதீஸ் மறுப்பு - 12

*TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (Part -12)

நபி(ஸல்) அவர்களின் ஹதீஸை மனனம் செய்து அறிவிப்பதில் தடுமாறிய ஒருவரும், அன்னாரின் பெயரால் பொய்யாக ஹதீஸை அறிவித்த ஒருவனும் ஒன்றுபோல் கருதப்படுவது நியாயம் இல்லை. 

தவ்ஹீத் கொள்கை பிடிப்புள்ள ஒருவரையும், கப்ரை வணங்கும் ஒருவரையும் ஒரே தட்டில் வைப்பதை TNTJ சகோதரர்கள் விரும்பமாட்டார்கள். அதை பிரித்துக்காட்டவே விரும்புவார்கள். 

அதுபோல, பொய்யனையும் மனனத் தடுமாற்றம் கொண்டவரையும் தனியே பிரித்தெடுக்க விரும்பினார் இமாம் திர்மிதி அவர்கள். 

இமாம் புஹாரி மற்றும் இமாம் முஸ்லிம் அவர்களால் பலவீனமாக கருதப்பட்ட செய்திகளுள் இருந்து, மனனத்தில் சிறு பிழைகள் இருந்த செய்திகளை தனியே பிரித்தெடுத்தார் இமாம் திர்மிதி. 

மனன சக்தி சந்தேகத்திற்குரியதாக இருக்கும் அறிவிப்பாளரின் அறிவிப்பு முற்றிலும் நிராகரிக்கப்படும் என்ற விதியில் இருந்து, மனனத்தில் சிறு பிழைகள் இருந்தால் அதையும் கருத்தில் கொள்ளலாம் என்ற விதியை கொண்டு வந்தார் இமாம் திர்மிதி. 

அதுபோன்ற செய்திகளை தனியாக பிரித்து அதற்குப் பெயரும் இட்டார். மனனத்தில் சிறு பிழைகள் இருக்கும் செய்திகளை "ஹஸன்" (حَسَن) என்று அழைத்தார். [ஹஸன் என்ற அரபுவார்த்தைக்கு "அழகானது" என்று பொருள் இருந்தாலும் "நல்ல தரத்திலானது" என்ற அர்த்தத்திலேயே ஹதீஸ் கலையில் அறியப்படுகிறது]

ஒரே செய்தியை அறிவிக்கும் வெவ்வேறு அறிவிப்பாளர் தொடர் கொண்ட இரண்டு ஹஸனான செய்திகளையும் ஒன்று சேர்த்து அதை ஸஹீஹாக கருதலாம் என்றும் விதியமைத்தார் இமாம் திர்மிதி. 

இதற்குப் பிறகு ஹஸன் தரத்தினாலான ஹதீஸ்களும் முக்கியத்துவம் பெறத்தொடங்கின. 

இதன் மூலம், பலவீணமாக கருதப்பட்ட ஹதீஸ்களையும் பலமானதாக மாற்ற முடியும் என்ற கருத்து ஏற்பட்டது. 

இப்போது, ஹதீஸ் மூன்று நிலையாக மாறியது. 

** ஸஹீஹ் (பலமானது)
** ஹஸன் (தரமானது)
** ழயீஃப் (பலவீனமானது)

இப்போதுதான் இன்னொரு பிரச்சினையும் எழுகிறது. 

அதாவது, பலவீனமான செய்திகளை ஹஸன் தரத்திற்கு உயர்த்தி பின்னர், அவைகளுள் இரண்டை இணைத்து ஸஹீஹ் தரத்திற்கும் உயர்த்த முடியும் என்ற நிலை உருவாகிவிட்ட நிலையில், அனைத்து பலவீனமான செய்திகளுக்கும் இந்த விதியை பயன்படுத்தினால் ஏற்படக்கூடிய அபாய நிலையை கருத்தில் கொண்டு எதிர்காலத்திலும் சில செய்திகளை கருத்தில் கொள்ளவே கூடாது என்ற அடிப்படையில் பலவீனமான செய்திகள் மீண்டும் தரம் பிரிக்கப்பட்டது. 

பலவீனமான செய்திகள் என்பதில் இருந்து "மவ்ளூ" (مَوْضُوْع) என்ற வகையிலான செய்திகள் தனியே பிரித்துக்காட்டப்பட்டது.

"மவ்ளூ" (مَوْضُوْع) என்ற வார்த்தை ஹதீஸ் துறையில் "இட்டுக்கட்டப்பட்டது" என்ற அர்த்தத்தில் கையாளப்படுகிறது. 

முன்னோர்கள் அடையாளம் காட்டிய பொய்யர்கள் இடம்பெறும் செய்திகளும்,  பொய்யான ஹதீஸ்களும் தனியே பிரிக்கப்பட்டன.

அந்த "இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை" எக்காலத்திலும் கருத்தில் கொள்ளவே கூடாது என்பதில் ஒருமித்த கருத்தொற்றுமையும் இருந்தது. 

இப்போது, நான்கு வகையாக ஹதீஸ்கள் பிரிகிறது.

** ஸஹீஹ் (பலமானது)
** ஹஸன் (தரமானது)
** ழயீஃப் (பலவீனமானது)
** மவ்ளூ (இட்டுக்கட்டட்டது)

இவைதான் ஹதீஸ்களின் தரவரிசை. 

ஹதீஸ்களை சேகரித்து பதிவு செய்தவர்களும் மனிதர்கள்தான் என்ற அடிப்படையில், ஹதீஸ்களை இந்த வரிசைகளில் அமைக்கும்போது சில பிழைகள் நிகழ்ந்திருக்கலாம். அந்த பிழைகள் மறு ஆய்வின் போது அதனுடைய தரம் மாறக்கூடும். 

** ஸஹீஹ் என்று கருதப்பட்ட ஒரு ஹதீஸ் மறு ஆய்வின்போது ஹஸன் தரத்திற்கு மாறக்கூடும். அல்லது, ழயீஃப் தரத்திற்கும் மாறக்கூடும். 

** ஹஸன் என்று கருதப்பட்ட ஒரு ஹதீஸ் மறு ஆய்வின்போது ஸஹீஹ் தரத்திற்கு மாறக்கூடும். அல்லது, ழயீஃப் தரத்திற்கும் மாறக்கூடும்.

** ழயீஃப் என்று கருதப்பட்ட ஒரு ஹதீஸ் மறு ஆய்வின்போது ஹஸன் தரத்திற்கு மாறக்கூடும். அல்லது, ஸஹீஹ் தரத்திற்கும் மாறக்கூடும்.

ஆனால், மவ்ளூ என்றழைக்கப்படும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் எக்காலத்திலும் மறு ஆய்வு செய்யப்படமாட்டாது. 

ஒரு செய்தியை "மவ்ளூ" என்று கூறினால்தான் அது கேவலமாக கருதப்படுமே தவிர, ஒரு செய்தியை "ழயீஃப்" என்று சொல்வதால் அதில் கேவலம் ஏதுமில்லை. 

இதை நான் விவரித்துக்கொண்டிருந்தபோது, 
"உன்னுடைய கதாகாலஷேபத்தை கேட்க நான் தயாரில்லை, குரானுக்கு ஹதீஸ் முரண்படுமா?" என்ற கேள்விக்கு மட்டும் பதில் கூறினால் போதும் என்று அந்த TNTJ சகோதரர் என்னிடம் கோபம் கொண்டார். 

புஹாரி விதி வகுக்கிறார்!
முஸ்லிம் விதி வகுக்கிறார்!!
திர்மிதி விதி வகுக்கிறார்!!!

"குரானுக்கு முரண்படக்கூடாது" என்று எங்கள் "முன்னாள் அறிஞர்" விதி வகுத்தது தவறா? 

மாமியார் உடைத்தால் மண்சட்டி! மருமகள் உடைத்தால் பொன்சட்டியா!! 

ஹதீஸ் கலை விதிகளின் ஏகபோக குத்தகையை முன்னாள் இமாம்களுக்கு மட்டும்தான் கொடுப்பீர்களா? 

நாங்கள் விதி வகுக்கக் கூடாது என்று எங்களை மட்டும் தடுப்பது ஏன்? என்றெல்லாம் பொங்க ஆரம்பித்தார் அந்த சகோதரர். 

சகோதரா, சுன்னாவுக்கும் ஹதீஸுக்கும் வரையறை தெரியாமல் ஆத்திரம் கொள்கிறாய், சற்று பொறுமையாக இருந்தால் உன்னுடைய கேள்விக்கு நேரிடையாகவே பதில் தருகிறேன் என்று கூறினேன். 

அந்த அன்பான சகோதரர் அமைதியானார். நானும் விவரிக்கத் தொடங்கினேன்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான். 

Part -11

https://m.facebook.com/story.php?story_fbid=766530470436757&id=100012394330588

No comments:

Post a Comment