பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, March 24, 2017

நபித்தோழர்கள் மூலம்தானே குர்ஆன் கிடைத்தது???

நபித்தோழர்கள் மூலம்தானே குர்ஆன் கிடைத்தது?
பீ.ஜைனுல் ஆபிதீன்
சஹாபாக்களைப் பின்பற்றக்கூடாது என்றால் குரானுக்கு CERTIFICATE கொடுத்தது அவர்கள்தானே? அவர்களைப் பின்பற்றக்கூடாது என்றால் குரானின் மீது சந்தேகம் ஏற்படுமே என்று சிலர் கேட்கின்றனர்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது இது சரியான கேள்வி போல் தோற்றம் அளிக்கலாம். ஆனால் இக்கேள்வி சிந்தனைக் குறைவினால் ஏற்பட்டதாகும். இதில் உண்மையும் இல்லை. எந்த லாஜிக்கும் இல்லை.
திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாகவும், திருக்குர்ஆனின் அற்புதநடை காரணமாகவும், தெள்ளத் தெளிவான கொள்கை காரணமாகவும் இது இறைவேதம்தான் என்று நபித்தோழர்கள் நம்பினார்கள். அதை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சென்றார்கள்.
நபித்தோழர்கள்தான் அடுத்த தலைமுறையினருக்கு திருக்குர்ஆனைக் கொண்டு சேர்த்த காரணத்தால் அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?
நீதிமன்றத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையை அப்படியே கூட்டாமல் குறைக்காமல் ஒரு தபால் ஊழியர் உங்களிடம் கொண்டு வந்து தந்தால் அல்லது நீதிமன்ற ஊழியர் கொண்டு வந்தால் அதை இப்படித்தான் நீங்கள் புரிந்து கொள்வீர்களா?
நீதிமன்ற உத்தரவை இவர்தான் என்னிடம் கொண்டு வந்து தந்தார். இவர் நீதிமன்ற உத்தரவை நாணயமாக என்னிடம் கொண்டு வந்து தராமல் இருந்தால் அந்த உத்தரவு எனக்குக் கிடைக்காமல் போய் இருக்கும். எனவே இனிமேல் இந்த தபால்துறை ஊழியர் சொல்வதையெல்லாம் நான் பின்பற்றுவேன்; எனக்கு ஏதாவது வழக்கில் தீர்ப்பு தேவைப்பட்டால் இந்த ஊழியரிடமே தீர்ப்பு கோருவேன் என்று நீங்கள் சொல்வீர்களா? அல்லது உலகில் யாராவது இப்படிக் கூறுவார்கள் என்று கருதுகிறீர்களா?
உலகில் எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ளாத இந்த வாதத்துக்கும் உங்கள் வாதத்துக்கும் கடுகளவு வேறுபாடு கூட இல்லை.
குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்து தந்திருந்தும் நபித்தோழர்கள் தான் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்கிறீர்களே அதுவாவது உண்மையா?
கேள்வி கேட்கும் உங்களுக்கும் எனக்கும் நபித்தோழர்கள் குர்ஆனைக் கொண்டு வந்து தரவில்லை. நமக்கு முந்திய தலைமுறையினர் தான் கொண்டு வந்து சேர்த்தனர். எனவே அவர்களைப் பின்பற்றலாம் என்று சொல்வோமா?
நமக்கு முந்தின தலைமுறையும் நபியிடம் நேரடியாகக் கேட்டு நமக்குச் சொல்லவில்லை. அவர்கள் தமக்கு முந்திய தலைமுறையினர் சொன்னதைத் தான் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்தனர். இப்படியே போய்க்கொண்டு இருந்தால் நபிகள் நாயகம் காலம் முதல் இன்று வரை உள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் பின்பற்ற வேண்டும் என்று ஆகாதா?
இதையே இன்னும் தீவிரமாகச் சிந்தித்தால் நபித்தோழர்கள் தான் இதைக் கொண்டு வந்த சேர்த்தனர் என்றால் அவர்கள் நபித்தோழர்கள் என்று எப்படி அறிந்து கொண்டோம்? அவர்களுக்கு அடுத்த தலைமுறை தான் அவர்களை நபித்தோழர்கள் என்று நமக்கு அடையாளம் காட்டினார்கள்.
இப்படியெல்லாம் கூர்மையாகச் சிந்தித்தால் உங்கள் வாதம் பொருளற்றது என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.
இது போன்ற வாதங்களுக்குப் பதிலாக நாம் பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கருத்து வேறு தகவல் வேறு என்ற ஆய்வுக் கட்டுரை கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். இன்னும் தெளிவு கிடைக்கும்.
நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என வாதிடுவோரின் தவறான வாதங்களுக்குப் பதில் அறிய நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற நூலை வாசிக்கவும்.

No comments:

Post a Comment