பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, July 9, 2020

இறைத்தூதர்களுக்கு எவ்வாறு அற்புதம் வழங்கப்பட்டது?

இறைத்தூதர்களுக்கு எவ்வாறு அற்புதம் வழங்கப்பட்டது?



இறைத்தூதர்களுக்கு எவ்வாறு அற்புதம் வழங்கப்பட்டது?

நபிமார்கள் தாம் நினைத்த அற்புதங்களைச் செய்ய அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் இறைவனைப் போல் செயல்படுகிறார்கள் என்று சொல்லலாம். ஆனால் எந்த அற்புதம் அவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்டதோ அந்த அற்புதங்களை மட்டும் தான் அவர்கள் நிகழ்த்த முடியும். மற்ற விஷயங்களில் மற்ற மனிதர்களைப் போல் தான் அவர்கள் செயல்பட முடியும்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்களைக் கூட அவர்கள் நினைத்த போதெல்லாம் செய்துகாட்டும் ஆற்றல் வழங்கப்பட்டிருந்தால் இறைவனைப் போல் செயல்படுகிறார்கள் என்று கருத முடியும். அப்படி அல்லாஹ் அதிகாரம் வழங்கவில்லை. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அற்புதத்தை ஒவ்வொரு தடவை செய்யும் போதும் அல்லாஹ்வின் கட்டளை வந்தால் தான் செய்ய முடியும். அவர்கள் நினைத்த நேரத்திலெல்லாம் அந்த அற்புதங்களைச் செய்ய முடியாது.

அற்புதங்கள் அல்லாஹ்வின் கையில்

நபிமார்கள் எப்போது அற்புதம் நிகழ்த்திக் காட்ட விரும்புகிறார்களோ, அல்லது அவர்களிடமிருந்து மக்கள் எப்போது அற்புதத்தை எதிர்பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் நபிமார்கள் அற்புதங்களை நிகழ்த்த முடியாது. அல்லாஹ் எப்போது அனுமதி அளித்துள்ளானோ அந்த நேரத்தில் மட்டும் தான் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும். அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது என்பதை திருக்குர்ஆன் தெளிவான வார்த்தைகளால் விளக்கியுள்ளது.

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(திருக்குர்ஆன்:13:38)

உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் அனுமதியின்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை. எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும் போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் நஷ்டமடைவார்கள்.

(திருக்குர்ஆன்:40:78)

‘நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்’ என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

(திருக்குர்ஆன்:14:11)

அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் நபிமார்கள் எந்த ஒரு அற்புதத்தையும் நிகழ்த்த முடியாது என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகளாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன. சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எதிரிகள் கோரினார்கள். அப்போது அல்லாஹ் அளித்த பதிலைப் பாருங்கள்!

‘இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்’ என்று கூறுகின்றனர். அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டுதுண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும்.

அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) ‘என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(திருக்குர்ஆன்:17:90-93)

மேற்கண்ட அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானது தான். இவை அனைத்தையும் செய்து காட்டுமாறு அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தான் கோரினார்கள். அவ்வாறு செய்து காட்டினால் நபிகள் நாயகத்தை நம்புவதாகவும் கூறினார்கள். ஆனாலும் இந்த அதிகாரம் என்னிடம் இல்லை என்று சொல்லுமாறும், நீங்கள் கோரியதைச் செய்து காட்ட நான் கடவுள் அல்ல. மனிதன் தான் என்று சொல்லுமாறும் நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

நபிமார்கள் எப்போது அற்புதம் நிகழ்த்திக் காட்ட விரும்புகிறார்களோ, அல்லது மக்கள் எப்போது அற்புதத்தை எதிர்பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் நபிமார்கள் அற்புதங்களை நிகழ்த்த முடியாது. அல்லாஹ் எப்போது அனுமதி அளித்துள்ளானோ அந்த நேரத்தில் மட்டும்தான் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும். அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது என்பதை இவ்வசனங்களில் இருந்து அறிந்து கொள்கிறோம்.

அற்புதங்களை நபிமார்கள் செய்யவில்லை. நபிமார்கள் மூலமாக அல்லாஹ் செய்தான் என்பதை இன்னும் உறுதியாக அறிந்து கொள்ள மூஸா நபி மூலம் வெளிப்பட்ட சில அற்புதங்களைக் கவனிக்கலாம்.

மூஸா நபியைத் தூதராக நியமித்து அவர்களிடம் அல்லாஹ் உரையாடி ஒரு அற்புதத்தை வழங்கினான். உம் கையில் இருப்பது என்ன என்று கேட்டு வெறும் கைத்தடி தான் என்று மூஸா நபியிடம் அல்லாஹ் பதிலைப் பெறுகிறான். அதனைக் கீழே போடு என்று அல்லாஹ் சொன்னான். உடன் அது பாம்பாக மாறியது. இந்த அற்புதத்தை அல்லாஹ்வே நிகழ்த்திக் காண்பித்தான். அது பாம்பாக மாறும் என்பது மூஸா நபிக்குத் தெரியாது. 20:17-21 வசனங்களில் இருந்து இதை அறியலாம்.

பின்னர் ஃபிர்அவ்னிடம் சென்று மூஸா நபி அழைப்பு கொடுத்து அதே அற்புதத்தை அல்லாஹ்வின் அனுமதியுடன் செய்து காட்டினார்கள். இதைக் கண்ட ஃபிர்அவ்ன் இது சூனியமாகும். நமது நாட்டில் உள்ள சூனியக்காரர்களுடன் போட்டி ஏற்படுத்தி உம்மைத் தோற்கடித்துக் காட்டுகிறேன் என்று அறைகூவல் விட்டான்.

சூனியக்காரர்களும் வந்தனர். அவர்கள் தமது சூனியங்களைச் செய்தனர். மூஸா நபியிடம் கைத்தடி இருந்தும் அவர்கள் அதைப் போட்டு எதிரிகளை முறியடிக்கவில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்குக் காத்திருந்தார்கள். ஏற்கனவே பாம்பாக மாற்றி அல்லாஹ் காண்பித்திருந்தாலும் மீண்டும் அல்லாஹ்விடமிருந்து கட்டளை வந்த பின்பே அதனை மூஸா நபி செய்தார்கள்.

அல்லாஹ்வின் கட்டளை வந்த பின் கைத்தடியைப் போட்டதால் தான் சூனியக்காரர்களின் வித்தையை அது விழுங்கியது.

“மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?” என்று அவர்கள் கேட்டனர். “நீங்களே போடுங்கள்!” என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்டபோது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். “உமது கைத்தடியைப் போடுவீராக!” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.

(திருக்குர்ஆன்:7:115,116,117)

“மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர். “இல்லை! நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். “அஞ்சாதீர்! நீர் தான் வெல்பவர்” என்று நாம் கூறினோம். “உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி.

(திருக்குர்ஆன்:20:65-69)

மூஸா நபியின் கையில் கைத்தடி கையில் இருந்தும், போட வேண்டிய நேரம் வந்தும் அவர்கள் தாமாகக் கைத்தடியைப் போடவில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்குப் பின்னரே போட்டார்கள்.

அதுபோல் மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்.

மூஸா நபியை எதிரிகள் விரட்டிக் கொண்டு வரும்போது எதிரில் கடல் குறுக்கிடுகிறது. பிர்அவ்னுடைய படையினருக்கும், கடலுக்கும் இடையே அவர்கள் மாட்டிக் கொண்டனர். மக்கள் முறையிட்ட போது தமது கைத்தடியால் அடித்து கடலைப் பிளக்கவில்லை. அல்லாஹ் எனக்கு வழிகாட்டுவான் என்று கூறி அல்லாஹ்வின் கட்டளைக்குக் காத்திருந்தார்கள். கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று கட்டளை வந்த பின்னர் தான் கைத்தடியால் கடலில் அடித்தார்கள். அல்லாஹ்வின் கட்டளை காரணமாகத் தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது.

இரு கூட்டத்தினரும் நேருக்குநேர் பார்த்துக் கொண்டபோது “நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்” என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். “அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழிகாட்டுவான்” என்று அவர் கூறினார். “உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.

(திருக்குர்ஆன்:20:61, 62, 63)

No comments:

Post a Comment