பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, October 6, 2019

படைப்பின் நாட்கள் - ஆறு Vs ஏழு

*படைப்பின் நாட்கள் - ஆறு Vs ஏழு*

வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்ட நாட்கள் குறித்து குர்ஆனுக்கும் ஹதீஸிற்கும் முரண்பாடு இருப்பதாகக்கூறி ஒரு ஹதீஸை TNTJ மறுத்து வருகிறது.

அந்த ஹதீஸை குர்ஆனுக்கு முரணில்லாமல் புரிந்து கொள்ளவும் முடியும் என்பதை நமது தொடரில் சுருக்கமாக விளக்கியிருந்தோம். அதை விளக்கமாக கூறுவதுதான் நன்றாக இருக்கும் என்று கருதுவதால் அதை தனியாக விளக்குகிறோம்.

வானங்கள் மற்றும் பூமி ஆகியவற்றை ஆறு நாட்களில் படைத்ததாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

[வசனங்கள் 7:54, 10:3, 11:7, 25:59, 32:4, 50:38, 57:4]

இந்த ஆறு நாட்கள் என்பதை கணக்கிடுவதில் இரண்டு நிலைப்பாடுகள் இருக்கிறது.

(1) திங்கள், செவ்வாய் என வரிசையாக எண்ணும் நாட்களின் கணக்கில் கணக்கிடுதல்.

(2) ஒவ்வொரு நாளும் ஒரு மிகப்பெரிய காலகட்டம் என்று கணக்கில் கணக்கிடுதல்.

ஆரம்பகாலத்தில் ஆறு நாட்களில் படைக்கப்பட்டது என்பதை திங்கள், செவ்வாய் என கிழமையின் கணக்காகவே கருதினார்கள். சமீபத்தில் தோன்றிய விஞ்ஞான கருத்துக்கள் ஒவ்வொரு படைப்பிற்கும் இடையே மிகப் பெரிய காலகட்டம் இருக்க வேண்டும் என்று கருதுவதால்தான் இரண்டாவது நிலைப்பாடு தோன்றியது.

இரண்டிற்கும் வாய்ப்பளிக்கும் வகையிலேயே மூலமொழியான அரபு வார்த்தையின் "யவ்ம்" இருக்கிறது.

மேலும், அல்லாஹ்வின் கணக்கில் ஒரு நாள் என்பது நம்முடைய ஆயிரம் வருடங்கள் அளவிற்கு இருக்கும் என்று குர்ஆன் கூறுகிறது.

"...உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது". (22:47)

** படைப்பின் நாட்கள் ஆறு நாட்கள் என்பதை திங்கள், செவ்வாய் என கிழமைகளின் கணக்கிலும் கணக்கிட வாய்ப்பிருக்கிறது.

** ஆறு பெரும் காலகட்டம் என்றும் கணக்கிட வாய்ப்பிருக்கிறது.

எப்படியிருந்தாலும், அல்லாஹ் ஆதம்(அலை) அவர்களை படைப்பதற்கு முன்பாகவே வானங்கள் மற்றும் பூமியை படைத்துவிட்டான்.

"பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்' என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது..." (2:30)

பூமியை படைத்ததற்குப் பிறகே ஆதம்(அலை) அவர்களை படைக்கப்போவதாக அல்லாஹ் கூறுகிறான். அதாவது, வானங்கள் மற்றும் பூமி ஆகியவை படைக்கப்பட்டு ஆறு நாட்களுக்குப் பிறகே ஆதம்(அலை) அவர்களை அல்லாஹ் படைத்தான்.

இதைத்தான் அந்த ஹதீஸும் கூறுகிறது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டு, “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணை (பூமியை) படைத்தான். அதில் மலைகளை ஞாயிற்றுக்கிழமையன்று படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். துன்பத்தை செவ்வாய் கிழமையன்றும் ஒளியை புதன்கிழமையன்றும் படைத்தான். வியாழக்கிழமையன்று உயிரினங்களைப் படைத்து பூமியில் பரவச் செய்தான்.

ஆறு நாட்களில் வானம் மற்றும் பூமி என அனைத்தையும் அல்லாஹ் படைத்துவிட்டான் என்றுதான் இந்த ஹதீஸும் கூறுகிறது. கூடுதலாக முந்தைய வேதக்காரர்களின் நம்பிக்கையை தகர்க்கவும் செய்கிறது.

வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்ததற்குப் பிறகு கடவுள் ஓய்வெடுத்தார் என்று முந்தைய கால மக்களின் வேத நம்பிக்கையாக இருந்தது. 

...ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார்...
யாத்திராகமம் (31:17)

ஆனால், தனக்கு களைப்பு ஏதும் ஏற்படவில்லையென்று அல்லாஹ் கூறுகிறான்.

"வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். *நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை"* . (50:38)

வானம் மற்றும் பூமியை படைத்துவிட்டு கடவுள் ஓய்வு எடுத்தார் என்று கூறும் முந்தையகால நம்பிக்கையை தகர்ப்பதாக ஏழாம் நாளிலும் அல்லாஹ் படைப்பில்தான் ஈடுபட்டிருந்தான் என்று அந்த ஹதீஸ் கூறுகிறது.

(ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் அஸ்ருக்கும் இரவுக்குமிடையேயுள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான்’’ என்று கூறினார்கள். முஸ்லிம் (5379)

வானங்கள் மற்றும் பூமியை அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்தான். அதற்குப் பிறகும் தனது படைப்பைத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறான். கியாமத் நாள் வரைக்கும் படைத்துக்கொண்டேதான் இருப்பான்.

அல்லாஹ்விற்கு களைப்பு ஏற்படாது. அதனால் அவனுக்கு ஓய்வும் தேவையில்லை.

வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்தான் என்பதை குர்ஆனும் ஹதீஸும் முரண்படாமல் கூறுகின்றன.

ஆதம்(அலை) அவர்கள் படைக்கப்பட்ட நாளையும் கூடுதலாக அந்த ஹதீஸ் ஏழாவது நாளாக கூறுகிறது.

குர்ஆனின் ஆறு நாட்களும் ஹதீஸின் ஏழு நாட்களும் முரண்பாடு அல்ல.

எங்களுடைய கம்பெனி கூறுவதுபோல்
முரண்படுத்தித்தான் பார்க்க வேண்டும் என்று ஒருவர் கூறினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

பிறை மீரான்.

No comments:

Post a Comment