Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, July 10, 2010

செல்வம் ஒரு சோதனையே

செல்வம் ஒரு சோதனையே

உலகில் வாழும் எந்த மனிதனிடமும் பணத்தாசை இல்லாமல் இருக்காது. இதனால் தான் பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த ஆசையை ஒரு சோதனையாக அல்லாஹ் அமைத்துள்ளான்.

பெண்கள், ஆண் மக்கள், திரட்டப் பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புக­டம் உள்ளது. (அல்குர்ஆன் 3:14)

உங்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!  (அல்குர்ஆன் 8:28)

சோதனையாக உள்ள இந்த செல்வத்தின் மீதுதான் மனிதன் அளவுக்கு மீறிய பேராசை கொண்டவனாக இருக்கின்றான். கட­­ருந்து வருகின்ற அலைகள் தொடர்ந்து வருவது போல், மனிதர்களின் உள்ளங்களில் செல்வத்தின் மீதுள்ள ஆசை அலைகளும் ஓய்வதில்லை.

பத்து பவுன் தங்கம் வைத்துள்ள பெண்ணிடம் இன்னொரு பத்து பவுன் தங்கம் வேண்டுமா? என்று கேட்டால் வேண்டும் என்று தான் கூறுவாள். பீரோ நிறைய சேலைகள் இருந்தாலும் கடை கடையாக ஏறி இறங்கி சேலையைச் சேர்ப்பதில் அவளின் ஆர்வம் குறைவதில்லை.

இவற்றை நினைவூட்டும் வண்ணம் நபி (ஸல்) அவர்கள் ஒரு கருத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஆதமின் மகனுக்கு ஒரு நீரோடை நிறைய பொன் வழங்கப்பட்டாலும் அதனுடன் இரண்டாவது நீரோடை கிடைக்க வேண்டுமென விரும்புவான். இரண்டாவது நீரோடை அவனுக்கு வழங்கப்பட்டால் அதனுடன் மூன்றாவது கிடைக்க வேண்டுமென்று அவன் விரும்புவான். ஆதமுடைய மகனுடைய வயிற்றை மண்ணைத் தவிர வேறெதுவும் மூடாது. மேலும் (மேற்கண்ட பேராசை போன்ற பாவங்களி­ருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)  நூல்: புகாரி 6438

''மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன. 1. பொருளாசை, 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி)  நூல்: புகாரி 6421


ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை

''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனையுண்டு. என்னுடைய சமுதாயத்திற்குச் செல்வம் சோதனையாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: கஅப் பின் இயாஸ் (ரலி) நூல்கள்: திர்மிதீ 2258, அஹ்மத் 16824

''அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டு அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட அது (மறுமையின் எண்ணத்தி­ருந்து) அவர்களின் கவனத்தைக் திருப்பி விட்டதைப் போன்று உங்களின் கவனத்தையும் அ(ந்த உலகாசையான)து திருப்பி விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)  நூல்: புகாரி 6425

நபி (ஸல்) அவர்கள் எந்தக் காரணத்திற்காக செல்வத்தை அஞ்சினார்களோ அந்த நிலை இன்றைக்கும் வந்து விட்டதைப் பார்க்கலாம். இறுதி நாள் விசாரணையை மறந்து எப்படியாவது செல்வத்தை அடைய வேண்டும் என்பதிலேயே மக்கள் குறிக்கோளாக வாழ்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் மறுமை வாழ்வுக்காக நன்மைகள் செய்வதை விட்டு விடுகின்றனர். அவர்களுக்குக் கிடைக்கும் செல்வத்தைக் கொண்டு மறுமையை மறந்து பல தீமைகளைச் செய்த நஷ்டவாளிகளாக ஆகி விடுகின்றனர். ஒருவருக்குச் செல்வம் வந்தவுடன் முதன் முத­ல் விடுவது கடமையான தொழுகையைத் தான்.


தொழுகையை விட்டுத் திசை திருப்பும் செல்வம்

பொருளாதாரத்தை அல்லாஹ் தாராளமாக வழங்குகிறான்; அதைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்தாமல் நேர்மாறாக அவனை மறந்து விடுகின்றனர். அன்றாடம் கூ­ வேலை செய்து பிழைப்பு நடத்தக் கூடியவன் கட்டாந்தரையில் படுத்து விட்டு பஜ்ர் தொழுகைக்கு வந்து விடுகின்றான். ஆனால் பஞ்சு மெத்தையில் தூங்கக் கூடியவனால் எழமுடிவதில்லை. சூரியன் உதித்த பிறகே பஜ்ரைத் தொழுகின்றான்.

மிகப் பெரிய கடைகளை நடத்தக் கூடியவர்கள் ஜுமுஆ மட்டும் தொழுகின்றனர். இன்னும் சொல்வதென்றால் ஹஜ்ஜும் செய்திருப்பார்கள். ஆனால் ஐந்து நேரம் தொழ மாட்டார்கள். இந்தச் செயலைப் பற்றி இறைவன் திருமறைக் குர்ஆனில் பின்வருமாறு எச்சரிக்கின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள்.  (அல்குர்ஆன் 63:9)


தடுக்கப்பட்ட செயல்களை செய்யத் தூண்டும்

ஆயிரங்களையும் இலட்சங்களையும் போட்டு வியாபாரம் செய்கின்றனர். தாம் செய்கின்ற வியாபாரத்தில் ஒரு இலட்சம் பணம் போட்டால் லாபம் இரண்டு இலட்சம் கிடைக்குமா? என்றே பார்கின்றனர். ஆனால் இந்த வியாபாரம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா? செய்யலாமா? என்று யோசிக்கக் கூட இவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

உதாரணமாக பீடி, மது போன்ற உடலுக்கு முற்றிலும் கேடு விளைவிக்கும் இந்தத் தொழில்களை, கணிசமான அளவுக்கு முஸ்­ம்கள் செய்து வருவதற்குக் காரணம் அவர்கள் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளார்கள். மார்க்கத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை.

''தாம் சம்பாதித்தது ஹலாலா? ஹராமா? என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் வரும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 2059

மார்க்கம் தடை செய்த வியாபாரத்தைச் செய்து அதன் மூலம் இவ்வுலகில் இலட்சாதிபதிகளாக வாழ்ந்தாலும் மறுமையில் இறைவனிடமிருந்து தப்ப முடியாது.

''ஒருவன் தன் செல்வத்தை எங்கிருந்து சம்பாதித்தான்? எப்படிச் செலவழித்தான் என்று விசாரணை செய்யப்படாமல் அவனின் இரு பாதங்களும் (மறுமை நாளில் அவன் நிற்கும் இடத்தை விட்டு) நகர முடியாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி)  நூல்கள்: திர்மிதீ 2341, தாரமி 536


செல்வரும் முன்னே! பெருமை வரும் பின்னே!

யானை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே! என்பது பழமொழி. செல்வம் வரும் முன்னே! பெருமை வரும் பின்னே! என்பது புதுமொழி. வசதி வாய்ப்புகள் பெருகப் பெருக, பெருமையும் கூடவே வந்து சேர்ந்து விடுகிறது. நான் தான் சம்பாதித்தேன்; என்னால் தான் இந்தச் செல்வம் வந்தது என்று பேச ஆரம்பித்து விடுகின்றான்.

இதைப் போன்ற வார்த்தைகளைத் தான் மூஸா நபி காலத்தில் வாழ்ந்த காரூன் என்பவன் கூறினான். இவனது மாளிகையையும், கோடான கோடி செல்வத்தையும், அவனையும் சேர்த்து பூமியில் புதையுறச் செய்து, அவனது ஆவணத்திற்கு ஒரு அடி கொடுத்தான் இறைவன்.

அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை. (அல்குர்ஆன் 28:81)

பெருமைக்குச் சொந்தக்காரன் அல்லாஹ் மட்டும் தான். அவனைத் தவிர வேறு எவரும் பெருமையடிக்கக் கூடாது. அவ்வாறு செய்பவன் சொர்க்கம் செல்லவும் முடியாது.

''தமது உள்ளத்தில் கடுகளவு இறை நம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)  நூல்: முஸ்லிம் 148


உறவினர்களை உதாசீனப்படுத்துதல்

பணம் படைத்தவர்கள் தங்களுடைய அந்தஸ்திற்கு ஏற்றாற் போல் உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஏழை உறவினர்களைப் புறக்கணிக்கின்றனர். அவர்களைப் பார்த்தால் பார்க்காதது போல் செல்கின்றனர். ஏதேனும் உதவி கேட்டு விடுவார்களோ என்று அஞ்சி பேச மறுக்கின்றனர். அவர்களைப் புறக்கணிக்கின்றனர்; கேவலமாக எண்ணுகின்றனர். ஆனால் அல்லாஹ் இவ்வாறு நடந்து கொள்பவர்களை வெறுக்கின்றான்.

நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா?  (அல்குர்ஆன் 47:22)

''யார் தம்முடைய ஆயுளும், செல்வமும் அதிகப்பட விரும்புகிறாரோ அவர் தம் உறவினர்களைச் சேர்த்துக் கொள்ளட்டும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அனஸ் (ரலி)  நூல்: புகாரி 2067

மேலே நாம் சொன்ன காரணங்கள் தவிர கெட்ட பழக்க வழக்கங்கள், சண்டைகள் என்று ஏராளமான தீய செயல்களும் ஏற்படுகின்றன. எனவே அல்லாஹ் நமக்குச் செல்வத்தை வழங்கினால் அதற்கு நன்றி செலுத்தி அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரி வர பேணி, பேராசை கொள்ளாமல், இறுதிக் காலம் வரையிலும் திருக்குர்ஆன் நபிமொழியின் வழிகாட்டுதல் படி நடப்பதற்கு முழு முயற்சி செய்து, இந்தச் சோதனையி­ருந்து நாம் விடுபடுவோம்.
 

No comments:

Post a Comment